கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, October 22, 2022

தீபாவளிப் பண்டிகை தமிழ்க் கட்டுரை தீபாவளி கொண்டாடக் காரணங்கள் தீபாவளி தோன்றிய வரலாறு DIWALI TAMIL ESSAY KATTURAI

 

தீபாவளிப்பண்டிகை

 

சிற்றஞ்  சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா  மரையடியே  போற்றும்  பொருள்கேளாய் !

பெற்றம் மேய்த்துண்ணும்  குலத்திற்  பிறந்துநீ

குற்றேவல்  எங்களைக் கொள்ளாமற் போகாது,

இற்றைப்  பறைகொள்வான்  அன்றுகாண்  கோவிந்தா !

எற்றைக்கும்  ஏழேழ்  பிறவிக்கும்  உன்றன்னோடு,

உற்றோமே யாவோம்  உமக்கேநா  மாட்செய்வோம்,

மற்றைநம்  கரமங்கள்  மாற்றேலோ  ரெம்பாவாய் !

தீபாவளி – தீபம் + ஆவளி. தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. விளக்குகளின் வரிசை என்று பொருள். விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து வழிபடும் பண்டிகை என்பதால் தீபாவளிப் பண்டிகை என்று பெயர் பெற்றது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, நேபாளம், மியான்மர், இலங்கை, மொரிசியஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற ஏராளமான நாடுகளில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகை எழுந்ததன் காரணத்தை கிருஷ்ண லீலை புராணம் சிறப்பாக விளக்குகிறது. வராக அவதாரத்தில் பூமிக்குள் தோண்டிக் கொண்டு சென்று அரக்கர்களை வதம் புரிந்தார் திருமால். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தால் பிறந்தவர் தான் பவுமன். தற்போதைய அசாம் மாநிலத்தின் பிராக்சோதிசா என்ற பகுதியை ஆண்டு வந்தான். நரன் என்றால் மனிதன். சுரன் என்றால் அரக்கன். அரக்கர்களை அழிக்கும் எண்ணத்தோடு செல்கையில் பிறந்ததால் அசுர குணத்தோடு இருந்த பவுமனே நரகாசுரன் என்று அழைக்கப்பட்டான். மனித குணம் பாதி இருப்பதால் தவம் புரிந்து பிரம்மாவிடம் தாயைத் தவிர தன்னை யாரும் கொல்ல முடியாது என்ற உயரிய வரத்தைப் பெற்றான். அதன் பின்பு அவன் அட்டூழியங்கள் பெருகின. கடவுள்களின் அன்னை என்று சொல்லப்படக்கூடிய அதிதியின் காது வளையங்களைத் திருடி வைத்துக் கொண்டான். பெண்களைச் சிறையில் இட்டுக் கொடுமைப்படுத்தினான்.

 தீர்க்க தமஸ் என்ற முனிவர் சனாதன முனிவரிடம் நரகாசுரனின் துன்பம் தரும் செயல்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கூறினார். அதற்கு அவர் விஷ்ணுவிடம் முறையிடலாம் என்று கூறினார். அவனுடைய அட்டூழியத்தைப் பொறுக்க முடியாத அனைவரும் சேர்ந்து காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணுவோ உடனடியாக நரகாசுரன் மீது போர் தொடுத்தார். அன்னையைத் தவிர எவர் கையாலும் நரகாசுரனை அழிக்க முடியாது என்பதை விஷ்ணு அறிவார். அப்போது நரகாசுரனின் வஸ்திரத்தால் மயக்கம் அடைவது போல இருந்த அறிதுயில் கொண்டிருக்கும் எம்பெருமான் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தார். தன் கணவரை வீழ்த்திவிட்ட நரகாசுரன் மீது தாய் சத்தியபாமாவாகக் கோபம் கொண்டு எழுந்தார். கடுமையான போருக்குப்பின் சத்தியபாமா தன்னுடைய வலிமையான அஸ்திரங்களால் நரகாசுரனைக் கொன்றார். இறக்கும் தருவாயில் தான் தன்னுடைய தந்தை விஷ்ணுவே என்பது தெரியவந்தது. தாய் சத்தியபாமாவிடமும் விஷ்ணுவிடமும் நரகாசுரன் ஒரு வேண்டுகோள் விடுத்தான். நான் என்னிடம் இருந்த அசுர குணத்தால் இங்கு அனைவருக்கும் தொல்லைகள் பல கொடுத்து வந்தேன். எல்லையில்லாத என்னுடைய அட்டூழியங்களால் மக்கள் மிகவும் துன்பமும் வேதனையும் அடைந்தனர். அதனால் இன்றைய என்னுடைய இறப்பை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடட்டும். ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படக்கூடிய மும்மலங்களையும் அழித்த மனிதன் இறைவனைச் சேர முடியும் என்பதற்கு என் வாழ்வே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். மக்கள் தங்களிடம் உள்ள அசுர குணங்களை இன்றோடு விட்டுவிட்டால் இறைவனின் பேரருளைப் பெறலாம் என்பதைக் கற்றுக் கொள்வதாக இந்நாளை ஒளி மிகுந்த ஒரு நாளாகக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்டான். நரகாசுரனின் வேண்டுதலை ஏற்ற சத்தியபாமா மகாவிஷ்ணுவிடம் முறையிட அவரும் அவ்வாறே நடத்த ஆவன செய்தார். மக்கள் மகிழ்ச்சியோடு தங்கள் இல்லங்களில் வரிசையாக அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டனர்.

          ஒளியிலே இருப்பது பரமாத்மா, நெருப்பாக இருப்பது ஜீவாத்மா இந்த இரண்டும் இணைந்து வாழ்வில் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு நன்னாளாகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தீபம், எண்ணெய், அரப்பு, சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை மற்றும் இனிப்புகள் படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் சந்தனத்தில் பூமி தேவியும் குங்குமத்தில் கௌரியும் மலர்களில் மோகினியும் உறைவதாக ஐதீகம்.

          தீபாவளி அன்று அதிகாலை எழுந்து கங்கா ஸ்னானம் என்று சொல்லப்படக்கூடிய அதிகாலை குளியலுக்கு முதலில் உடம்பில் எண்ணெய் தேய்த்து அதன் பிறகு குளிக்க வேண்டும். குளித்த பின் புத்தாடைகளை அணிந்து சந்தனம் பூசிக்கொண்டு குங்குமம் மற்றும் மலர்களால் இறைவனை வழிபட வேண்டும். இனிப்பு வகைகள் படைத்து இறைவனை வழிபடுவது சிறப்பு. எமனுக்குத் தங்கை யமுனை என்பவள் இருந்ததாகவும் அதனால் தீபாவளி தினத்தன்று உடன் பிறந்தவர்களுக்குப் பரிசுப் பொருள்களுடன் இனிப்பு வகைகளையும் புத்தாடைகளையும் சகோதரர்கள் வழங்கிக் கொண்டாடும் வழக்கம் இன்னும் வடமாநிலங்களில் இருக்கிறது. வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளபடி ராமர் சீதாதேவி, இலக்குவனோடு 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து ராவணனை இலங்கை சென்று வதம் செய்து அயோத்திக்கு வருகிறான். அவ்வாறு வரக்கூடிய ராமர், சீதை மற்றும் இலக்குவனுக்கு அயோத்தி மக்கள் நகர் எங்கும் விளக்குகளை வரிசையாக எரியச் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மலர்கள் தூவி சந்தனம் தெளித்து புத்தாடை அணிந்து பல்வகை இனிப்புகளோடு வரவேற்றார்கள். அந்த நாளையே தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடுவதாகவும் ஒரு செய்தி இருக்கிறது.

ஸ்கந்த புராணத்தில் குறிப்பிட்டுள்ள படி சிவன் மீது கோபம் கொண்ட சக்தி 21 நாட்கள் கேதார கௌரி விரதம் இருக்கிறார். அவ்வாறு இருந்து ஈஸ்வரனின் கோபம் தணிவதற்காக அவர் ஏற்ற தவம் நிறைவுக்கு வருகிறது. அர்த்தநாரீஸ்வரராக தன்னில் இடப் பகுதியான பாதியாகக் கொடுத்து சக்தியும் சிவனும் இணைந்த பேரொளியாக இவ்வுலகில் அனைவருக்கும் காட்சி தருகிறார். தீப ஒளியாகக் காட்சி தந்த அந்த நாளையே தீபாவளிப் பண்டிகை என்று மக்கள் கொண்டாடினர்.

துலா மாதமாகிய ஐப்பசி மாதத்தின் தேய்பிறையில் பிரயோதசி அன்று பிரதோஷ பூஜை முடித்த பின்னர் எம தீபம் ஏற்றி வைத்து நரக சதுர்த்தியைக் கொண்டாடும் நாளே தீபாவளிப் பண்டிகை ஆகும். வாத்ஸ்யாயனர் யக்ஷ்ச ராத்திரி என்று தீபாவளிப் பண்டிகையைக் குறிப்பிடுகிறார். சுகராத்திரி என்றும் இது அழைக்கப்படுகிறது.

கிபி 1117 ஆம் ஆண்டு சாளுக்கிய திரிபுவன மன்னன் சாத்யாயர் என்பவருக்குத் தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னட மொழிக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கிபி 1250 ஆம் ஆண்டு லீலாவதி என்ற மராத்தி மொழி நூலில் எண்ணெய் நீராடல் என்று தீபாவளிப் பண்டிகை குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கிபி 16ஆம் நூற்றாண்டில் தீபாவளிப் பண்டிகை பற்றிய செய்திகளை வேங்கடவான் குடியிருக்கும் திருப்பதி மலைக் கல்வெட்டிலும் திருவாரூர் செப்பேட்டிலும் காண முடிகிறது.

தீபாவளிப் பண்டிகையை அறிவியலோடு தொடர்புபடுத்தி ஆராய்ந்தால் ஐப்பசி கார்த்திகை குளிர்காலங்கள். பெரும்பொழுதுகளாக தமிழர்கள் கண்ட மாதங்களில் ஐப்பசி மாதம் ஏற்படும் கடும் குளிரை விரட்டி வெப்பத்தைப் பெருக்குவதற்காக நம் முன்னோர் விளக்குகளை ஏற்றி வழிபட்டு இருக்கலாம் என்று கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தீப தான உற்சவம் என்று பௌத்த மதத்தினரும் மகாவீரரின் முக்தி தினமாக சமணர்களும் 1577 ஆம் ஆண்டு தங்கக் கோவில் கட்டுமானம் இந்நாளில் துவங்கப்பட்டதால் சீக்கியர்களும் தீபாவளித் திருநாளை வேறு காரணங்களுக்காகக் கொண்டாடுபவர்கள் ஆவார்கள்.

தீபாவளிப் பண்டிகை என்ற உடனேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இனிப்பு வகைகளும் புத்தாடைகளும் நினைவுக்கு வருகிறது. எண்ணெய்க் குளியல் இன்றைக்கும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதோடு காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடித்து மகிழ்வதும் ஒருபுறம் நடக்கிறது. அதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. எனவே பசுமைப் பட்டாசுகளையே நாம் வெடிக்க வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலின் படி தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்பாக நாம் கொண்டாடி வருகிறோம்.

 

பல்லாண்டு பல்லாண்டு

பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள்

மணிவண்ணா!

உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு

கவிஞர் கல்லூரணி முத்து முருகன்

 

 

தமிழ்த்துகள்

Blog Archive