கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, October 06, 2022

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் கட்டுரை Environmental protection and awareness Tamil essay

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும்

முன்னுரை

"மண்டிணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

தீமுரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத் தியற்கை"-என்கிறது புறநானூறு. 'மனிதன்' வாழ்வதற்காக மட்டுமே என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் நாம் இந்தப் புனித பூமி பல்லாயிரக்கணக்கான உயிரினத் தொகுதிகளின் வாழிடம் என்பதை மறந்து போய்விட்டோம்.

பூமியின் இயற்கைச் சூழலின் நிலைப்பாட்டில் இருந்து பண்பாட்டோடு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அவர்கள் படைத்த இலக்கியங்களும் இயற்கையோடு இணைந்த வாழ்வையே பேசியது. சுயநலம் எனும் மேகம் மறைக்கப் பொதுநலம் கேள்விக்குறியானது. திக்கெட்டும் விட்டெறிந்த கல்லாய் பூமி குப்பை மேடானது. உயிரின் இசையை இறை உணர்வோடு மீட்டிக் கொண்டிருந்த பூமித்தாய், இப்போது மூச்சு முட்டிக் கிடக்கிறாள். இனியும் பொறுத்துப் பயனில்லை என்று அவ்வப்போது பொங்குவதும் அடங்குவதுமாய்த் தன்னைச் சரி செய்ய முயற்சிக்கிறாள். வருங்காலத் தலைமுறையின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்ட நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும்' பற்றிப் பேசுவதே இக்கட்டுரையின் சாரம்...

சுற்றுச்சூழல் பற்றிய இலக்கிய வரிகள்

பெருவெடிப்பில் உருவான உயிர்க்கோளம் போனால் போகட்டும்' என விட்டு வைத்தது நான்கில் ஒரு பாகம். ஆம்! அதில் முந்தி முளைத்த தாவரங்கள் விலங்குகள் பறவைகளைத் தன் மூச்சுக்காற்றால் அறிந்து, அன்பு செய்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். "ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்", என்கிறது உலகப் பொதுமறை. தாவரங்களின் நெருக்கத்தை  "காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும்

ஏமாங்கதமென்னும் இசையால் திசைபோயதுண்டே”, என்கிறது ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி.

"அம்புலியைக் கவளம் என்று தும்பி வழிமறிக்கும்" என்கிறார் திரிகூடராசப்பக் கவிராயர்

"வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்", என்ற குற்றாலக் குறவஞ்சி வரிகள் குறிஞ்சி நிலத்தின் அழகை நம் கண்முன்னே காட்டுகின்றன.

சுய நலத்தால் மாசுபடும் சுற்றுச்சூழல்

"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி" என்ற மாணிக்கவாசகரின் வரிகள் இயற்கையே இறைவன்' என்று கூறுகிறது. சுண்ணம் கலக்காத வண்ணக் கோலம் புனையும் வானம், இன்று புகை பூசிக் கறுத்திருக்கிறது. தொழிற்சாலைகளின் விண்ணை முட்டும் புகை போக்கிகள் வளிமண்டலத்தில் கரிவளியைக் கலக்கின்றன. ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் மோட்டார் வண்டிகளும் தன் பங்குக்குப் புகை உமிழ்கின்றன.

"உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு" என்ற வள்ளுவரின் இலக்கணம், உலகில் எந்த நாட்டுக்கும் பொருத்தம் இல்லாமல் போய்விட்டது. சாயப்பட்டறைக் கழிவுகள், தோல் தொழிற்சாலைக் கழிவுகள் ஆறுகளில் கலப்பதால் அதில் வாழும் உயிரினத் தொகுதிகள் மடிகின்றன. நிலத்தடி நீர் உவர் நீர் ஆகிவிட்டது. புனித நதிகள் "என்று போற்றப்படும் கங்கையும் யமுனையும் சாக்கடை நீரால் அசுத்தம் அடைந்து கொண்டு வருகின்றன. வசதியாய் இருக்கும் என நம் அறிவியல் கொடுத்த பாலித்தீன் பைகள் நிலத்தை மலடாக்குகின்றன. கால்நடைகள் அவற்றை உண்டு கொத்துக்கொத்தாய் மடிகின்றன. மக்குவதற்கு 400 ஆண்டுகள் பாலிதீனுக்குத் தேவைப்படும் என்பதை அறியாத மனிதர்கள் அரசின் எச்சரிக்கைகளையும் மீறி அதனைப் பயன்படுத்தித் தூக்கி எறிந்து வருகிறார்கள்.

நெகிழி படுத்தும் பாடு

கால்வாய் அடைப்பு கழிவுநீர்த் தேக்கம், நிலத்தடி நீர்மட்டம் குறைவு என நேரடியான விளைவுகளை பாலித்தீன் ஏற்படுத்துகிறது இதனை எரிப்பதால் உண்டாகும் "டயாக்சின்" வாயு ஒவ்வாமை தோல்புற்று, குடல் புண், செரிமானக் கோளாறு மற்றும் குழந்தைப் பேறின்மை போன்றவற்றை மறைமுகமாக ஏற்படுத்துகிறது. காசைக் கரியாக்கும் பட்டாசு வெடிகள் வளிமண்டலத்தைத் தூசு மண்டலமாக்குவதோடு, அதில் கலக்கும் வேதிப்பொருள்களான கார்பன். ஆர்சனிக் கந்தகம் போன்ற வாயுக்கள் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்று நோய்களுக்குக் காரணமாகின்றன. "மேல் வரவறியாதோன் தற்காத்தல் பொய்" என்று முதுமொழிக்காஞ்சி என்றோ எச்சரித்து விட்டது வந்தபின் காப்பது மடமை' அன்றோ? வருமுன் காக்கத் தவறிவிட்டால் ஆறாம் அறிவு மனிதர்களாகிய நமக்கு இருந்து என்ன பயன்.

 

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்

வெள்ளையர் ஆட்சியிலேயே 'மழைக் காடுகள் என்று சொல்லப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் ஐரோப்பியக் காலனி ஆதிக்கவாதிகளால் அழிக்கப் பட்டன.

"வான் பொய்ப்பினும் தான் பொய்யாத வையை எனும் பொய்யாக் குலக்கொடி"

இன்று வறண்டு கிடக்கிறாள். சுற்றுச்சூழலைக் காக்க 1972ல் ஸ்டாக் ஹோமிலும் 1982ல் நைரோபி, ரியோ டி ஜெனிரோ விலும் 2002இல் ஜோகன்ஸ் பர்க்கிலும் மாநாடுகள் நடத்தப்பட்டன. உலக வெப்பமயமாதல், பசுமை இல்ல விளைவு, அமில மழை போன்ற கேடுகள் ஏற்படாமல் தடுக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாளாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 16 'ஓசோன் தினமாகவும் ஜூலை 28 இயற்கைப் பாதுகாப்புத் தினமாகவும் மார்ச் 22 உலக நீர் தினமாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.

அறம் பொருள், இன்பம் வீடு வகுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை பிரித்து இயற்கை வாழ்வை வாழ்ந்த அன்றைய நாள் மீண்டும் வந்திடாதா? என்று ஏங்கிக் கிடக்கின்றோம்.

குளோரோ புளோரோ கார்பனால் வளிமண்டலத்தில் ஓசோன் ஓட்டை, அகச்சிவப்புக் கதிர் வீச்சால் புவி வெப்பமயமாதல் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டி அதன் பயன்பாட்டைக் குறைக்க, உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வணிகப் பயிர்கள் விளையும் எஸ்டேட்டுகளாக மாறிவிட்ட குறிஞ்சியும், வரைபடத்தில் கிட்டத்தட்ட காணாமலேயே போய்விட்ட முல்லை நிலமும், வீட்டடி மனைகளாய் மாறிவிட்ட மருத நிலமும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமாய் ஆகிவிட்ட நெய்தல் நிலமும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

"நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும் இன்னா ஆம் இன்னாசெயின்"

என்ற குறளின் வழி நின்று, குற்றம் விளைவிப்போர் நம் உறவினரே ஆயினும் அவர்களைக் கூண்டில் ஏற்றிச் சுற்றுச்சூழல் காக்க நாம் சூளுரைக்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களின் பங்கு

"காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டம்" - என்று ஆனந்தக் கூத்தாடினான் பாரதி அன்று..

"திறந்தவெளிக் கழிப்பிடங்கள்; அவை, தொற்று நோயின் இருப்பிடங்கள், என அறிந்து பொது சுகாதார வளாகத்தைப் பயன்படுத்த வேண்டும். மின்காந்த அலைகளால் வலசைப் பறவைகளின் பாதைக்கு ஊறு விளையாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். உலகத்தை உள்ளங்கையில் கொண்டு வரும் திறன் பேசிகள், கணினிகள் பயன்படுத்தப்பட்ட பின் எலக்ட்ரானிக் குப்பைகளாக மாறி சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆறுகளின் மணல் பரப்பை அள்ளினால் விவசாயத்தின் தாய்மடியாம் 'நிலத்தடி நீர்' குறையும் என்பதை மனதில் கொண்டு, மாற்று வழி காண வேண்டும். வனவிலங்கு வர்த்தகத்தை என்ன விலை கொடுத்தேனும் தடுத்தாக வேண்டும். காற்றாலை, சூரிய மின்சாரம், கடல் அலை மின்சார உற்பத்தி மூலம் நிலக்கரி, பெட்ரோலியப் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலக மாசு நகரப் பட்டியலில் முதல் 20 இடங்களில் 15 நகரங்கள் இந்தியாவிலுள்ள என்ற இழிநிலை மாற்ற வேண்டும். முகநூல், கீச்சகம், புலனம் இவற்றை சுய விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படுத்தாமல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கும் பயன்படுத்த வேண்டும்.

"ஆடு கோடாகி அதர் இடை நின்றதும் கால் கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்”- என்ற நாலடியார் கூற்றை உணர்ந்து, இன்றைய சிறு செடிகள் நாளைய மரமாக வளர வழி செய்ய வேண்டும். நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க பெரிய குளத்தைத் தோண்ட வேண்டும். தளிர் விட்டு வளரக்கூடிய மரக்கிளைகளை நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். மக்கள் நடக்க முள் இல்லாத பாதைகளை மேடு பள்ளங்கள் இல்லாமல் செப்பனிட்டு வைக்க வேண்டும் தரிசு நிலங்களைப் பக்குவப்படுத்தி விளைநிலங்களாக மாற்ற வேண்டும். சுற்றிலும் கரை கட்டப்பட்டுள்ள கிணறுகளை வெட்ட வேண்டும். இந்த ஐந்து அறப்பணிகளையும் எவன் செய்கிறானோ அவனே 'சொர்க்கம்' சென்றடைவான் என்கிறது பின்வரும் சிறுபஞ்சமூலப் பாடல்

குளம் தொட்டுக் கோடு பதித்து வழி சீத்து

உளம் தொட்டு உழுவயல் ஆக்கி வளம் தொட்டுப்

பாகு படும் கிணற்றோடு என்று இவ்வைம்பாற் படுத்தான்

ஏகும் சுவர்க்கத்து இனிது"

இன்றைய இளைஞர்கள் நாளைய பாரதத்தின் தூண்கள். அவர்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை' என்பதை உணர்ந்தால் இனி எந்த ஆபத்தும் இல்லை.

அரசின் திட்டங்களும் சுற்றுச்சூழல் காக்கும் சட்டங்களும்

நீரை 'காயகல்பம்' என்றவர் நம் அறிவியல் அறிஞர் சர் சி.வி.ராமன். இன்னோர் உலகப்போர் நடைபெறும் என்றால் அது தண்ணீருக்காகத் தான் என்று உலக நாடுகள் அனைத்தும் விழிப்புணர்வு பெற்று விட்டன. காடுறை உலகம், தீம்புனல் உலகம், மைவரை உலகம். பெருமணல் உலகம் என்று தொல்காப்பியர் காலத்திலேயே பாகுபாடுகளை வகுத்து அதற்கு ஏற்பப் பயிரிட்டு இயற்கை காத்தவர்கள் நம் முன்னோர்.

மரங்களுக்கும் உணர்வு உண்டு' என்று எண்ணிப் போற்றியவர்கள் நம் முன்னோர். மங்கை ஒருத்தி புன்னை மரத்தைத் தன் உடன் பிறந்தாளாக எண்ணி அவ்விடத்தில் தான் தன் காதலனைச் சந்திக்க மறுத்ததாக 'நற்றிணை பாடல் ஒன்று கூறுகிறது அப்படித் தடம் பதித்து வாழ்ந்த கூட்டம். இன்று தடம் மாறாமல் இருக்கவே சட்ட திட்டங்கள் தேவைப்படுகின்றன. 1996இல் 'சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை' உருவாக்கப்பட்டது.  2022 க்குள் திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிக்க 'நிர்மல் பாரத் அபியான்' செயல்பட்டு வருகிறது. 2005 முதல் தூய்மை பேணும் கிராமங்களுக்கு 'நிர்மல் கிராம புரஷ்கார்' விருது வழங்கப்பட்டு வருகிறது.

2014 அக்டோபர் இரண்டில் தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் அதாவது 'தூய்மை இந்தியா திட்டம்' 441 நகரங்கள் மற்றும் பேரூர்களில் நவீன கழிப்பறைகள் செயல்படுவதை உறுதி செய்துள்ளது.' தூய்மை இந்தியா செஸ் வரி' மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு 266 மாவட்டங்களில் உள்ள 3.4 லட்சம் கிராமங்களில் திறந்த வெளிக் கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்டு சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தூய்மை நகரங்கள் வரிசையில் இந்தூர், சூரத், விஜயவாடா முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இதில் சென்னைக்கு 43 வது இடமே கிடைத்துள்ளது நாட்டின் சுத்தமான மாநிலங்கள் வரிசையில் சத்தீஸ்கர் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ல் இயற்றப்பட்டது. புலிகளின் எண்ணிக்கையை கொண்டு காட்டின் வளம் கணிக்கப்படும் இதற்காக எடுத்த சிறப்பு முயற்சிகளால் 2010ல் 1700 புலிகள் மட்டுமே இருந்த நிலை மாறி 2014 இல் 30 விழுக்காடு அதிகரித்து 226 புலிகள் என்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது ஐநா அங்கீகாரம் செய்யும் 195 நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதி கொண்டுள்ளன.

மீத்தேன் திட்டம் அணு உலைகள் நியூட்ரினோ கார்பன் ஹைட்ரோ திட்டங்கள் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முழு அனுமதி பெற்ற பிறகு செயல்படுத்தப்படுகின்றன. 18 மைக்ரான் அளவுக்குக் குறைவான பாலித்தீன் பைகள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. உஜாலா திட்டத்தின் மூலம் உன்னத ஜோதி எனப்படும் எல் இ டி பல்புகள் 5-1-2015 முதல் வழங்கப்பட்டு வந்தன.

7-5-2018 ன் படி 29.83 கோடி பல்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 38,742 கிலோ வாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் 70:30 என்ற விகிதத்தில் மத்திய மாநில அரசுகள் எருக்குழி அமைத்தல், மண்வாறுகால் அமைத்தல், உறிஞ்சு குழி அமைத்தல் மற்றும் பார்த்தீனியச் செடி ஒழிப்பு இவற்றுக்காகப் பெரும் தொகையினைச் செலவிட்டு உள்ளன.

அரசு முயற்சி

120 டெசிபலுக்கு மேல் ஒலி அளவு இருந்தால் அது ஒலி மாசாக அறிவிக்கப்பட்டு மீறுவோரைத் தண்டிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இன்றைய நவீன காலத்தில் 'ஒளி மாசும் ஏற்படுகிறது இதனால் இரவு பகல் குழப்பம் ஏற்பட்டு விலங்கினங்கள் மற்றும் பறவை இனங்களின் வழித்தடங்கள் பாதிக்கப்படுதல், இனப்பெருக்கத் தடை இவைகளால் இயற்கை வாழ்வு பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் உறிஞ்சும் அளவைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு சட்டங்கள் மூலம் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும், பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

முடிவுரை

வரப்புயர நீருயரும்

நீருயர நெல்லுயரும்

நெல்லுயரக் குடி உயரும்

குடி உயரக் கோன் உயரும்

என்கிறார் ஔவையார். கடந்த 30 ஆண்டுகளில் நன்செய் நிலங்களில் 20 விழுக்காடு வீட்டுமனைகள் ஆகிவிட்டன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆறுகளின் வழித்தடங்களை மறித்துக் கட்டிய வீடுகள் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் நிலை உருவாகிவிட்டது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, தனி மரம் தோப்பாகாது, அரசுடன் பொதுமக்களும் இணைந்தால் மட்டுமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

 

மூன்று விழுக்காடு மட்டுமே உள்ள உலகின் குடிநீரைப் பங்கு போடுவதில் நமக்குள் போட்டி வந்து விடக்கூடாது வற்றும் வளங்களுக்கு மாற்றுவளம் காண்பதும் வற்றா வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத் தலைமுறை காக்க நாம் அவசியம் செய்தாக வேண்டும். ஆழிப்பேரலை தடுக்க அன்றே நம் முன்னோர் தாழை, புன்னை, ஞாழல் மற்றும் பனைமரக் கூட்டங்களைக் 'காணல்' என்ற பெயரில் சோலைகளாக வளர்த்துப் பேரலைகளைத் தடுத்திருக்கிறார்கள்.

"எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நலனே"- என்ற ஒளவையின் பொன் மொழியை மறந்துவிடக்கூடாது ஏனென்றால்,

உண்ணக் கனி -ஒதுங்க நிழல்

உடலுக்கு மருந்து -உணர்வுக்கு விருந்து

அடையக் குடில் அடைக்கக் கதவு

அழகு வேலி -தாளிக்க எண்ணெய்

எழுதக் காகிதம் -எரிக்க விறகு

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்

மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்" என்கின்றன கவிஞர் வைரமுத்துவின் வரிகள். வாருங்கள்! இளைஞர்களே. இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்நாளும் காப்போம்!

தமிழ்த்துகள்

Blog Archive