கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, October 22, 2022

பாதுகாப்பான தீபாவளி தமிழ் விழிப்புணர்வுக் கட்டுரை safety diwali awareness of crackers tamil katturai essay

 

பாதுகாப்பான தீபாவளி

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோ நோய்-என்றார் திருவள்ளுவர். விழாக்கள் என்றாலே இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும். அந்த மகிழ்ச்சி நிலைபெற்று இருக்க வேண்டும் என்றால் பாதுகாப்பு மிகவும் அவசியம்.

    அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து முடித்து புத்தாடை அணிந்த பின் தான் நமக்குள் எத்தனை மகிழ்ச்சி? சிறியவர் முதல் பெரியவர் வரை பல்வேறு இனிப்புகள் செய்து சாப்பிடுவதும் பட்டாசுகள் வெடிப்பதும் தீபாவளியின் சிறப்புகள். பட்டாசுகளை எங்கே வெடிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். திறந்தவெளிகளில் தான் வெடிக்க வேண்டும். குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும் போது அருகில் பாதுகாப்புக்காக பெரியவர்கள் இருக்க வேண்டும். பட்டாசுகள் வெடிப்போர் பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். அவர்களின் ஆடை காற்றில் பறந்து அசைவதாக இருக்கக் கூடாது. உடலோடு ஒட்டிய ஆடைகளையே அணிய வேண்டும். வீட்டுக்குள் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது. பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மின் மாற்றிகள், மின்சார வடங்கள் இவை இருக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது.

மனித உயிர்கள் மகத்தானவை, அவை வீணே இம்மண்ணில் விழுந்து விட நாம் காரணமாக ஆகிவிடக் கூடாது. பட்டாசுகளைக் கையில் பிடித்துக் கொண்டு தூக்கி எறிவது கூடாது. பட்டாசு வெடிக்கும் போது நம் முகம் பட்டாசுக்கு நேர் மேலே இருக்கக் கூடாது, நேருக்கு நேராகவும் இருக்கக் கூடாது, பக்கவாட்டில் தான் இருக்க வேண்டும். நீளமான பத்திக்குச்சிகளை வைத்து வெடிகள் வெடிக்க வேண்டும். அதிக ஒலி மற்றும் ஒளி தரக்கூடிய வெடிகளை சிறுவர்கள் போடக்கூடாது. இதனால் கண் மற்றும் காது பாதிப்பு ஏற்படும். காலணிகள் அணிந்தபடி தான் பட்டாசுகளைப் பற்ற வைக்க வேண்டும். இல்லையென்றால், அணையாத நெருப்பு கம்பி மத்தாப்புகள் வெடிக்காத வெடிகள் போன்றவற்றில் மிதித்து கால் பாதிப்பு அடையும்.

விண்வெளியில் சந்திரனுக்குச் சந்திராயனையும் செவ்வாய்க் கோளுக்கு மங்கள்யானையும் அனுப்பிவிட்டோம். மகிழ்ச்சி தான் ஆனால் வானவெடியை வெடிப்பதற்குப் பாட்டில்களைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனமானதல்ல. உயரே செல்லாமல் வெடித்துச் சிதறினால் கண்ணாடித் துகள்கள் குத்தி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது படித்த நமக்கு ஏன் புரியாமல் போகிறது?

 பாம்பு மாத்திரை போன்ற அதிக புகை தரக்கூடிய பட்டாசுகள் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல்  போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதை அறிய வேண்டும். தவிர்க்கவும் வேண்டும். பாலிஸ்டர், டெரிக் காட்டன் போன்ற வகை உடைகளை அணியக்கூடாது. ஏனென்றால் அவை எளிதில் தீப்பற்றி விடும். பருத்தி ஆடைகளே மிகவும் ஏற்றவை. அதிக ஒளி தரும் வெடிகளை இரவு எட்டு மணிக்கு மேல் வெடிக்கக் கூடாது. வேடந்தாங்கல், வேட்டங்குடி போன்ற பறவைகள் புகலிடங்கள் உள்ள ஊர்களில் வெடி வெடிக்கத் தடை உள்ளது. சீனப் பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரைடு என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் சுற்றுச்சூழல் மாசு அதிகம் ஏற்படுகிறது என்கிறார்கள். அதனால் பசுமைப் பட்டாசுகளையே நாம் வாங்கி வெடிக்க வேண்டும். தீபாவளி நாள்களில் இரு சக்கர வண்டிகளில் செல்லும் போது கவனமாகச் செல்ல வேண்டும். ஏனென்றால் வெடி வெடிக்கும் பகுதிகளுக்குள் நாம் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படலாம். விலை கூடுதலாக இருக்கிறதே என்பதற்காகவும் சத்தம் அதிகமாக இருக்கிறதே என்பதற்காகவும் தரமற்ற மலிவான பட்டாசுகளை வாங்கி வெடித்தால்  அது காசு கொடுத்து ஆபத்தை விலைக்கு வாங்குவது போன்றதாக ஆகிவிடும்.

நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தற்போதெல்லாம் மொத்தமாக ஒரு வெட்டவெளியைத் தேர்ந்தெடுத்து வெடிகள் வெடிக்கின்ற பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இது பாராட்டத்தக்கது. ஒற்றுமை தானே நமது வலிமை? வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பது பாரதம்.

இந்த முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஒருவர் பின் ஒருவராக வெடிகள் வைக்கச் செல்வது ஆபத்தானது. ஏனென்றால் ஒரே நேரத்தில் வெடிகளைப் பற்ற வைக்கும் போது அவை வெடிப்பதற்கு முன்பாக காலதாமதம் ஆகலாம். ஒருவர் வைத்த வெடி வெடிக்கும் சத்தம் கேட்டு மற்றவர் நிலை தடுமாறிக் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகும் நிகழ்வுகள் நடக்கலாம்.

இருப்பது ஓர் உயிர் தான் அது போகப் போவது ஒரு முறை தான் அவ்வுயிர் இந் நாட்டுக்காகப் போவதில் பெருமை கொள்கிறேன்' என்றார் பேரறிஞர் அண்ணா. ஒப்பற்ற உயிரைக் கவனக்குறைவால் இழப்பது சரியாகாது. ஏனென்றால் “அறிவுடையோர் ஆவதறிவார் “என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவர் மீது ஒருவர் பட்டாசுகளைப் பற்ற வைத்துத் தூக்கி எறிந்து விளையாடுவது முற்றிலும் தவறு. விளையாட்டு வினையாகிவிடும் என்பதை மறந்து விடக்கூடாது. வெடிக்காத பட்டாசுகளை உதிர்த்து வேதிப்பொருட்களை ஒன்று சேர்த்து எரிக்கும் வழக்கம் இன்னும் வறுமையின் கையில் அகப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் அதிகமாக இருக்கிறது. இதனால் ஏற்படும் அதிக ஒளி பிள்ளைகளின் கண் பார்வையைப் பறித்து விடும். இருசக்கர வண்டிகள் பேருந்து, மகிழுந்து போன்ற போக்குவரத்து வண்டிகள் மீது பட்டாசினை வைத்து வெடிப்பதோ அல்லது பட்டாசைப் பிடித்துத் தூக்கி எறிவதோ குற்றம் ஆகும்.

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும் - என்கிறார் வள்ளுவர். நண்பன் தவறு செய்யும் போது அவனை இடித்து உரைத்து நல்வழிப்படுத்தும் செயலை நாம் செய்யாவிட்டால் நண்பன் தன் வாழ்வில் கெடுப்பவர் இல்லாமலே கெட்டு அழிவான் என்பதை மறந்து விடக்கூடாது.

சில மத்தாப்புகள் அதிகமாக  நெருப்புப் பொறிகளைப் பறக்க விடக்கூடிய தன்மை உடையவை. அதனால் கவனம் தேவை. தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளை அல்லது பாதுகாப்பு இல்லாத வெடிகளை வாங்கி வெடிப்பது 1984 ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின்படி குற்றம் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட அளவையே விட அதிக ஓசை வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்படும் வெடிகள் அங்கீகாரம் அற்றவை. அவற்றை வாங்கி வெடிப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும். கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வானம் போன்ற வெடிகள் வெடித்த பின்பு தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும்.

இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழப் பணம் தேவையில்லை, ஆனால் பிறரைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் எவ்வளவு பணம் இருந்தாலும் அது போதாததாக ஆகிவிடுகிறது. இது தீபாவளி வெடிகளுக்கும் பொருந்தும். அடுத்தவர் அதிகமான வெடிகளை வெடிக்கிறார்களே என்று நாமும் காசைக் கரியாக்கும் வேலையைச் செய்து விடக்கூடாது. விழாக்கள் நம்மை மகிழ்ச்சிப்படுத்தத் தானே தவிர, நம்மைக் கடன்காரர்கள் ஆக்குவதற்கும் நோயாளிகள் ஆக்குவதற்காகவும் விபத்துகளில் சிக்க வைப்பதற்காகவும் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு என்றே சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வாங்கித் தர வேண்டும், ஏனென்றால் குழந்தைகளே நாளைய பாரதத்தின் எதிர்காலங்கள். 14 வயதுக்கு உட்பட்டவருக்கு பட்டாசு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளிலும் தொடர் வண்டிகளிலும் பட்டாசுகளைக் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறிக் கொண்டு சென்றால் அதனால் ஏற்படும் விபத்து மற்றும் இழப்புகளுக்கு நாமே பொறுப்பாகிறோம்.

பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் எந்தச் செயலையும் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. மதுபானம் அருந்தி ஒருவர் பட்டாசு வெடிக்க முயல்வது இரண்டு மடங்கு தீய விளைவுகளைத் தரும். ஒவ்வொரு வகைப் பட்டாசாக வெடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்த வெடியை வெடிக்கப் போகிறோமோ அதை மட்டும் வெளியில் வைத்தால் போதுமானது. அனைத்துப் பட்டாசுகளையும் வெடி வெடிக்கும் இடத்தில் வைத்துக்கொண்டு பயன்படுத்துவது சரியல்ல! வெடிக்கின்ற பட்டாசிலிருந்து தெறித்து விழும் நெருப்புப் பொறி கூட்டமாக வைத்திருக்கும் பட்டாசில் பற்றி பெரும் விபத்தினை ஏற்படுத்தக் கூடும். பட்டாசினைப் பற்ற வைத்த பின்பு குறிப்பிட்ட நேரம் காத்திருக்க வேண்டும். அதை விடுத்து அவசரப்பட்டு அதனைப் போய் கையில் எடுப்பது பெரும் விபத்தினை உண்டாக்கும். பாதுகாப்பு கண்ணாடி மற்றும் முக கவசம் அணிந்து கொண்டு வெடி வெடிப்பது பாதுகாப்பானது. பட்டாசினால் விபத்து ஏற்பட்டு விட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். உடலில் உடலில் தீப் பற்றிக் கொண்டால் ஓடக்கூடாது உடனே கீழே படுத்து உருள வேண்டும்.

தகவல் தொடர்பு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு பெற்று பாதுகாப்பாக வெடிகளை வெடிக்க வேண்டும். தீயணைப்புத் துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் குறிப்பிடும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். எந்த ஒரு குழந்தையையும் தன்னிச்சையாக வெடிகள் வெடிக்க அனுமதிக்கக் கூடாது

வெடிகள் வெடிக்கும் இடத்தில் தண்ணீர் மற்றும் மணல் வாளி வைத்திருக்க வேண்டும். நீண்ட குச்சி மூலம் பட்டாசினை பற்ற வைப்பது பல வகையில் சிறந்தது. தீக்காயம் ஏற்பட்டு விட்டால் உடனடியாக தூய நீரை அதன் மீது ஊற்ற வேண்டும். ஆனால் கண்களில் தீக்காயம் அல்லது வெடி விபத்தினால் நெருப்புப் பொறி விழுதல் மற்றும் வேதிப்பொருள்கள் விழுதல் என பல வகையில் கண்களில் பாதிப்பு ஏற்படலாம். எனவே கண்களில் தெறித்து விழும் பட்டாசுகள் ஆபத்தானவை. உடனடியாக தண்ணீரில் கழுவினால் மேலும் பல விளைவுகளை வேதிப்பொருள்கள் ஏற்படுத்தி விடும். எனவே லேசான பருத்தித் துணியால் கண்களை மறைத்து கட்டிய பின்னர் உடனடியாக மருத்துவரிடம் கூட்டிச் செல்ல வேண்டும். அதிக வெப்பம் உமிழ்கின்ற மின்சார விளக்கினைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் எளிதில் தீப்பற்றக்கூடிய ஆபத்து நிகழலாம்.

உங்கள் இரத்தம் பிற உயிர்களுக்குத் தானமாக தேவைதான். ஆனால், அவை கொடுக்க வேண்டிய இடம் தீபாவளி போன்ற விழாக்களைக் கொண்டாடும் தெருக்கள் அல்ல! என்பதை மறந்து விடாதீர்கள். வந்த பின் காப்பது அறிவுடைமை ஆகாது வருமுன் காப்பதே சிறந்தது.

ஆறறிவு உள்ள மனிதன் தனக்கென வகுத்துள்ள நாகரிகம் பண்பாடு இவற்றின் தனித்தன்மைகளுக்கு ஏற்ப வாழ்கிறான். திருவிழாக்கள் சமுதாயப் புரிந்துணர்வின் வெளிப்பாடுகள். எல்லாம் அவன் செயல் என்று கவனக்குறைவாக இருந்துவிட்டு விபத்து ஏற்பட்ட பின் கடவுளைக் கடிந்து கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகளும் தனித்தனியே பல்வேறு விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அரசு பரிந்துரைக்கும். வழிகாட்டுதல்களின் படி தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வது ஒவ்வொரு இந்தியரின் கடமை ஆகும்.

இந்தத் தீபாவளி பாதுகாப்பான மகிழ்ச்சியான எந்தவித விபத்துகளும் இல்லாத இனிய தீபாவளியாய் அமைய நல்வாழ்த்துகள்.! எல்லாம் வல்ல இறைவன் நமக்கு நீண்ட ஆயுளையும் மிகுந்த செல்வத்தையும் கூர்ந்த அறிவையும் வழங்கட்டும். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் அழியட்டும். தீப ஒளியில் நம் அறியாமை அகலட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்

 

 அன்புடன் கவிஞர் கல்லூரணி முத்து முருகன்.

தமிழ்த்துகள்

Blog Archive