கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, October 06, 2022

மனித, வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு தமிழ்க் கட்டுரை பேச்சு Human and wild livings tamil essay speech

 

மனித, வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு

முன்னுரை               தமிழ்த்துகள்

"இமயப் பனிமலை குமரி முனை

இரு கடல் நடுவே நமது உரிமை

கமழும் பொலில்கள் பல வயல்கள்

கனிப்பொருள் தொழில்கள் நிலவு நிலம்"-என்று இயற்கை சூழ்ந்த மண்டலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். மனிதன் ஒரு சமூக விலங்கு அல்லவா? சக விலங்குகளிடமிருந்து தன் பகுத்தறிவால் வேறுபட்டு, நாகரிக முன்னேற்றம் அடைந்து நகரங்களை அமைத்து வாழ்ந்து வருகிறான். விலங்கொடு விலங்காக காடுகளில் உறைந்து கிடந்த காலங்களை அவன் மறந்துவிடக்கூடாது. இயற்கையின் மடியில் வாழும் உயிர்களுக்கு மனித வாழ்வு எக்காரணத்தைக் கொண்டும் தடையாக இருந்து விடக் கூடாது. மனித, வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு பற்றி கட்டுரையில் காண்போம்.

 

இயற்கையின் மடியில் மனித வாழ்வு               தமிழ்த்துகள்

விண்ணைத் தொடும் மரங்களும் விரல் தொடும் ஆறுகளும் தலை மேல் மென்மையாய் இறங்கும் பனிமூட்டமும் வீசுகின்ற தென்றலும் கொண்ட பசுமைக் குடிலில் வசித்து வருபவன் மனிதன். ஒன்பது கோள்கள் இருந்தாலும் உயிர்க்கோளமாம் புவியில் மட்டுமே பதிந்துகிடக்கின்றன மனிதனின் கால்கள். இழிந்து விழும் அருவியிலும் கரை புரண்டு ஓடும் ஆறுகளிலும் பொங்கி வரும் நீரூற்றுகளிலும் அவனுக்கான நீர் ஆதாரம் இருக்கிறது.               தமிழ்த்துகள்

வனத்தில் வாழும் யானைகளும் காட்டு மாடுகளும் புள்ளி மான்களும் சிறுத்தையும் புலியினமும் சிங்கக் கூட்டங்களும் வருத்தப்படாமல் வாழ்வதற்கு மனிதன் உதவ வேண்டும். பல்லாயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டி வாழும் வீடுதான் வனம் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஊர்வன, நீர், நில, வாழ்வன மற்றும் கோடிக்கணக்கான பூச்சி இனங்கள் காடுகளையே நம்பி வாழ்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது. "தின்னவரும் புலிதனையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய் அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள் அவளைக் கும்பிடுவாய்" என்ற மகாகவியின் பேரன்பு நமக்கும் இருக்க வேண்டும்.

வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம்         தமிழ்த்துகள்

இந்தியாவில் உள்ள வன உயிரிகளைப் பாதுகாக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தில் இந்திய வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன் மூலம் ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் இருந்து வன உயிரினங்களைக் காப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தை வன உயிரின வார விழாவாக நாம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடி வருகிறோம். வனவிலங்குகளை வேட்டையாடுதல் முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இயற்கை வாழிடங்களை அவற்றிற்கு அமைத்துக் கொடுப்பதன் மூலம் அரிய வகை விலங்குகளையும் தாவரங்களையும் காப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மனிதனின் சுயநலமும் மாறிவரும் சுற்றுச்சூழலும்

முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மெய்ம்புற ஒன்றுடையாள் - இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற்

சிந்தனை ஒன்றுடையாள் -என்றார் பாரதி. இன்றோ இந்தியத் தாய் நூற்று நாற்பது கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் மூச்சு திணறி வாழ்ந்து வருகிறாள். மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு வாழிடங்கள் ஆக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளுக்காக இயற்கை இடம் மாறுகிறது. வனவிலங்குகளின் வழித்தடங்கள் அடைக்கப்பட்டு அணு உலைகளும் இரசாயன உரத் தொழிற்சாலைகளும் அமைக்கப்படுகின்றன.                தமிழ்த்துகள்

வேளாண்மைப் புரட்சி செய்யும் நோக்கத்தில் பூச்சிக்கொல்லிகளும் செயற்கை உரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கரிச் சுரங்கங்களும் கனிம வளங்களை அள்ளுவதற்காகத் தோண்டப்படும் சுரங்கங்களும் உறங்காமல் வேட்டையாடும் வனவிலங்குகளை வனத்தை விட்டே ஓடச் செய்து விட்டன. உணவு வலை, உணவுச் சங்கிலி என்னும் இயற்கைக் கோட்பாடு மீறப்பட்டு விட்டது.

மனித - வன விலங்கு சுமூக வாழ்விற்கு நாம் செய்ய வேண்டியன

1971 ஆம் ஆண்டு மனிதனும் உயிர்க்கோளமும் இணைந்து வாழ வழிமுறைகளைக் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அணு ஆற்றலை உமிழும் அணு உலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதிர்வுகளை ஏற்படுத்தும் விமானங்களும் ரயில் சேவைகளும் ஒலி அளவினை வரையறை செய்ய வேண்டும். இரசாயனம் வெளியிடும் ஆலைகள் ஆறுகளை மாசுபடுத்தாமல் இருப்பதற்கு சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். ஆலைகளின் புகை போக்கிகளில் வடிகட்டிகள் பயன்படுத்த வேண்டும்.                  தமிழ்த்துகள்

சூழலியல், உயிரியல், புவியியல் அனைத்தும் இயற்கை மடியில் வாழும் பறவைகள், விலங்கினங்கள், பூச்சி இனங்களுக்குத் துன்பம் செய்யாத அளவு மனிதனால் பயன்படுத்தப்பட வேண்டும். நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் தோண்டப்படுவதற்கான உரிமம் முறையாக கண்காணிப்பு செய்யப்பட வேண்டும். தமிழ்த்துகள்

பசுமை இல்ல விளைவு மூலம் புவி வெப்பமயமாதல் ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டும். புற ஊதாக் கதிர்களை உள்வாங்கி உயிரினங்களைக் காத்து வரும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதை ஒருபோதும் அனுமதித்து விடக்கூடாது. காற்றின் ஈரப்பதம் காஸ்மிக் கதிர்வீச்சு இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த 1986 நவம்பர் 19-ல் இந்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. போபால் விஷவாயுக் கசிவிற்குப் பின் தான் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

முடிவுரை

புவியில் இருந்து வளிமண்டல எல்லை வரை சுமார் 20 முதல் 27 கிலோமீட்டர் தான் உயிர்க்கோள எல்லை பரவி உள்ளது. ஓராண்டு சிறை ஒரு லட்சம் அபராதம் என்பதால் மட்டும் வன உயிரினங்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைத்து விட முடியாது. தமிழ்த்துகள்

வள்ளலார் கூறியது போல் "எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல்" எண்ணி வாழும் இயற்கை வாழ்வை நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும். இறகு, நகம், பல், கஸ்தூரிக்காக இனியும் விலங்கினங்கள் வேட்டையாடப்படக்கூடாது.

இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்நாளும் காப்போம்!

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி.

தமிழ்த்துகள்

Blog Archive