பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
07-11-2025. வெள்ளி
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : அரசியல் ;
அதிகாரம் : குற்றங்கூறாமை ;
குறள் எண் : 436.
குறள் :
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு.
உரை :
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.
பழமொழி :
சிறிய படிகள் பெரிய பயணத்தை ஏற்படுத்தும்.
Small steps lead to big journeys.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.
2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.
பொன்மொழி :
அறியாமை தான் பயம்.
பயம் தான் பாதி தோல்விக்குக் காரணம். - எழுத்தாளர் சுஜாதா.
பொது அறிவு :
01."இந்திய அறிவியலின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
சர் ஜகதீஷ் சந்திர போஸ் Sir Jagadish Chandra Bose
02.திருமறைக்காடு என்று அழைக்கப்பட்ட ஊர் எது?
வேதாரண்யம் - Vedaranyam
English words :
Affluent wealthy
+ Whammed - hit
தமிழ் இலக்கணம்:
வல்லினம் மிகா இடங்கள்
எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது,
மலர் + பூத்தது = மலர் பூத்தது
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது.
அறிவியல் களஞ்சியம் :
பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளை (முசுக்கொட்டை இலை) விரும்பி சாப்பிடுகின்றன. மற்ற இலைகளை இவை தொடுவதில்லை. இதனால் பட்டு நூலுக்காக பட்டுப்புழுக்களை வளர்ப்பவர்கள் மல்பெரி புதர்களை வளர்க்க வேண்டிவருகிறது. பட்டுப்புழுக்களை செயற்கையான உணவுப் பதார்த்தங்களில் வளர்ப்பதற்கும் வேறு வகை தாவர இலைகளில் வளர்ப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அவை ஓரளவுக்கு வெற்றிகளைத் தந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் பட்டுநூலானது மட்ட ரகமாக இருக்கின்றன.
நவம்பர் 07 - மேரி கியூரி அவர்களின் பிறந்த நாள்
- Marie Salomea Skłodowska-Curie,
பிறப்பு நவம்பர் 7, 1867 - இறப்பு ஜூலை 4, 1934
புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.
நவம்பர் 07 சி.வி.இராமன் அவர்களின் பிறந்தநாள்
சர் சந்திரசேகர வெங்கட ராமன் - Chandrasekhara Venkata Raman பிறப்பு நவம்பர் 7, 1888 - இறப்பு நவம்பர் 21, 1970.
பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார்.
இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும். சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
நவம்பர் 07
அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள்
அழ. வள்ளியப்பா
பிறப்பு நவம்பர் 7, 1922- இறப்பு மார்ச் 16, 1989.
குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.
நீதிக்கதை பொம்மைகள்
ரகு வண்ணத்தாள்களில் சின்ன சின்னதாய் குருவி, கிளி, வாத்து, மயில் என்று பொம்மைகள் செய்து கொண்டிருந்தான். வீட்டிற்குள் நுழைந்த வரதன், மகன் கத்திரியும், தாளுமாக இருந்த கோலத்தைப் பார்த்தும் மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. கோபம் தலைக்கு ஏறியது.
படிடா என்றால் படிக்க மாட்டேன் என்கிறாய். எப்பொழுது பார்த்தாலும் கிளியும், வாத்துமா செய்து வீடு முழுவதும் குப்பை போடுவது தான் மிச்சம். ஒரு பைசாவிற்கு பிரயோஜனம் இருக்கிறதா? இப்படி இருந்தா எப்படிடா பிழைக்கப் போகிறாய். நாலுபேரைப் போல் நல்லா படிக்கணும், நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்கிற எண்ணமே வராதாடா என்று கோபமாக கத்தியவர். ரகு முதுகில் இரண்டு அடி போட்டார். செய்து வைத்திருந்த பொம்மைகளை காலால் எட்டி உதைத்தார்.
ரகுவுக்கு தன்னை அடிக்கும் போது கூட வலிக்கவில்லை. ஆனால் பொம்மைகளை உதைத்தது மனதில் வலித்தது. கலை நயமாக தான் வடிவமைத்த பொம்மைகளைப் பார்த்து பாராட்ட வேண்டாம். இப்படி எட்டி உதைக்காமல் இருந்திருக்கலாமே என்று எண்ணி அழுதான் ரகு. தோட்டத்தில் துணிகளை துவைத்து காயப் போட்டுவிட்டு வந்த சீலா, "ஏண்டா ரகு அழுகிறாய்?" எனப்பதறியபடி உள்ளே வந்தாள். பொம்மைகள் சிதறிக் கிடப்பதையும் தன் கணவர் துணி மாற்றிக் கொண்டு இருப்பதையும் பார்த்த மேகலா நிலைமையை புரிந்து கொண்டாள். ரகுவை சமாதானப்படுத்திவிட்டு, கீழே சிதறிக்கிடந்த பொம்மை தாள்களை எடுத்து ஒழுங்குபடுத்தினாள் மேகலா.
அந்த சம்பவத்திற்கு பின் ரகுவரன் மனதில் ஒரு வைராக்கியம் வந்து விட்டது. இந்த பொம்மைகளை வைத்து ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்று. அவனுக்கு பக்க துணையாக இருந்தாள் அன்னை சீலா. காலங்கள் கடந்தன. ஆண்டுகள் பல தாண்டியபோது ஒரு நாள் சென்னையில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம். புதுமையான ஓவியக்கண்காட்சியை காண்பதற்குதான் இவ்வளவு கூட்டம், பார்த்தவர்கள் எல்லாம் பரவசப்பட்டார்கள். பூங்கா, கோவில், மசூதி, தேவாலயம், மலை, மலர்க்காடு இப்படி எண்ணிலடங்கா கண்ணைக் கவரும்படி, இயற்கையாக அமைந்தது போன்ற ஓவியங்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் அழகாக காட்சி அளித்தன. நல்ல விலைக்கு விற்பனையும் ஆனது.
ரகுவை மட்டும் பாராட்டவில்லை. அவன் பெற்றோரையும் பாராட்டினார்கள். அவன் தந்தையின் மனமோ, கூனிக் குறுகிப் போனது. தன் தவறை எண்ணி அவர் உணர்வுகளை உணர்ந்து கொண்டான் ரகு.
அப்பா என்று அழைத்தான். தன் உணர்வுகளில் இருந்து மீண்டு வந்த வரதன், என்ன என்பது போல் பார்த்தார். பக்கத்தில் வந்த ரகு இந்த அளவிற்கு நான் வளர காரணமே எனது அப்பா, அம்மாவின் ஒத்துழைப்பு தான் என்று பேட்டி கொடுத்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட வரதன் நெகிழ்ந்து போனார். "கல்வியோடு கூட குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அந்த துறையில் ஊக்கப்படுத்தினால், அவர்கள் சாதனையாளர்கள்தான்" என்றார் வரதன்.
வாழ்த்துகள் என கைகுலுக்கி விடைபெற்றார் பேட்டி எடுத்த நண்பர். சிறு, சிறு காகித பொம்மைகளை செய்துவந்த ரகு இப்போது பெரிய ஓவியனாகி இருந்தான். அதுமட்டுமல்ல கல்வியிலும் முதன்மையாகத் திகழ்ந்தான். கல்வியுடன் கூடிய திறமை என்றும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
இன்றைய செய்திகள் 07.11.2025
*வடக்கு டெல்லியின் நரேலாவில், கிட்டத்தட்ட ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு 264 ஆக உயர்ந்து, மோசமாக இருந்தது. நவம்பர் 6 முதல் 8 வரை டெல்லியின் காற்று மிகவும் மோசமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
* இந்தியாவில் 3 கோடி கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் மாருதி சுசுகி சாதனை
* சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
4-வது T20 போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
உலக கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா மோதிய 2-வது ஆட்டமும் டிராவில் முடிந்தது.
Today's Headlines 07.11.2025
* In North Delhi's Narela, the overall air quality index rose to 264, which was poor. Delhi's air remains very poor from November 6 to 8, it said.
* Maruti Suzuki becomes the first company to sell 3 crore cars in India Record.
* Moderate rains have been recorded in various places in Chennai.
SPORTS NEWS
4th T20 match: India beats Australia to clinch series
World Cup Chess: The second game of Praggnanandha also ended in a draw.
Prepared by
Covai women ICT போதிமரம்
