ஒரு முறை நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தான் வருணகுலாதித்தன் என்பவரது சத்திரத்திற்குக் காளமேகப் புலவர் உணவு உண்பதற்குச் சென்றிருந்தார். அப்போது நீண்ட நேரமாகியும் உணவு பரிமாறப்படவில்லை. ஆகவே கோபமடைந்த காளமேகப்புலவர் இப் பாடலைப் பாடினார்.
பாடல் :
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும் ; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்.
விளக்கம் :
அதிக அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் சூரியன் மறையும் (மாலை நேரத்தில்) பொழுது அரிசி வரும்.
ஊரில் உள்ள அனைவரும் தூங்கிய பின்னரே அதை உலையிலிட்டு உணவாக்குவர்.
அதை உண்பவர்க்குப் பரிமாறும் பொழுது நடுஇரவு ஆகிவிடும் என்று வசையாகப் பாடியுள்ளார்.
பாடலைக் கேட்டவுடனே வந்திருப்பது காளமேகப்புலவர் என்று அறிந்துகொண்ட காத்தான், தன் சத்திரத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று எண்ணி வசைமீட்சிப் பாடல் பாடுமாறு கேட்டுக்கொண்டான். மறுபடியும் இதே பாடலைப் பாடிய புலவர் வேறு விளக்கம் கொடுத்தார்.
விளக்கம் :
அதிக அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் நாட்டில் பஞ்சம் பட்டினி உள்ள (அத்தமிக்கும்) பொழுது அரிசி மூட்டைகள் கணக்கிலடங்காது வந்து இறங்கும்.
அதை சமைத்து (உலையில் இட்டு) ஊர்மக்களுக்குக் கொடுக்க அனைவரின் பசியும் அடங்கும்.
அவ்வாறு சமைக்கப்பட்ட அன்னத்தை(சோறு) இலையில் போடும் பொழுது அது நட்சத்திரத்தைப் போல் பிரகாசிக்கும் என்று வசையாகப் பாடியப் பாடலைப் புகழ்ச்சிப் பாடலாகப் பாடியுள்ளார் புலவர்.