கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 27, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு 2022 முக்கிய வினா விடைகள் TENTH TAMIL SECOND REVISION EXAM IMPORTANT QUESTIONS AND ANSWERS

 பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு 2022 முக்கிய வினா விடைகள்

மனப்பாடப்பாடல்கள்

பெருமாள் திருமொழி

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.                       - குலசேகராழ்வார்.

நீதிவெண்பா

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.                       - கா.ப.செய்குதம்பிப் பாவலர்.

கம்பராமாயணம்

பாலகாண்டம் – நாட்டுப்படலம்

தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க,

கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க,

தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்

வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ.

அயோத்தியா காண்டம் - கங்கைப்படலம்

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதொ  ரழியாவழ குடையான்.     - கம்பர்.

திருக்குறள்

1.     செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்.

2.    பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்.

3.    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை.

4.    குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.

5.    இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.                                  - திருவள்ளுவர்

பலவுள் தெரிக

1.உனதருளே பார்ப்பன் அடியேனே - யாரிடம் யார் கூறியது ?                              

அ.குலசேகராழ்வாரிடம் இறைவன்                                

ஆ.இறைவனிடம் குலசேகராழ்வார்     

இ.மருத்துவரிடம் நோயாளி                                           

ஈ.நோயாளியிடம் மருத்துவர்

2.குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார்-ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே...

அ.மரபு வழுவமைதி, திணை வழுவமைதி                     

ஆ.இடவழுவமைதி, மரபு வழுவமைதி

இ.பால் வழுவமைதி, திணை வழுவமைதி                   

ஈ.காலவழுவமைதி, இட வழுவமைதி

3.அருந்துணை என்பதைப் பிரித்தால் ........................      

அ.அருமை + துணை              

ஆ.அரு + துணை                    

இ.அருமை + இணை               

ஈ.அரு + இணை

4.இங்கு நகரப்பேருந்து நிற்குமா ? என்று வழிப்போக்கர் கேட்டது .............. வினா.

அதோ, அங்கே நிற்கும். என்று மற்றொருவர் கூறியது ...................... விடை.         

அ.ஐயவினா, வினா எதிர் வினாதல்                              

ஆ.அறிவினா, மறை விடை    

இ.அறியா வினா, சுட்டு விடை                                     

ஈ.கொளல் வினா, இனமொழி விடை

5.அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை - என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது ?

அ.தமிழ்                        

ஆ.அறிவியல்                           

இ.கல்வி                      

ஈ.இலக்கியம்

6.குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..............              

அ.முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்                     

ஆ.குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்            

இ.குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்                  

ஈ.மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

7.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?          

அ.நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்             

ஆ.ஊரில் விளைச்சல் இல்லாததால்    

இ.அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்                    

ஈ.அங்கு வறுமை இல்லாததால்

குறுவினா 2 மதிப்பெண் வினாக்கள்

15.வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் -  இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

ஆரல்வாய்மொழிக்குச் “செல்வேன்” என்று எதிர்காலத்தில் தான் வரவேண்டும்.

ஆனால் செல்வதன் உறுதித்தன்மை காரணமாக “செல்கிறேன்” என்று நிகழ்காலத்தில் வந்துள்ளதால், இது காலவழுமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.

16.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

o    மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்கின்ற நோயாளி அம்மருத்துவரை நேசிக்கின்றார்.

o    அத்துடன் அம்மருத்துவர் நோயை குணமாக்கிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

o    இங்கு மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் நோயாளியைக் குணப்படுத்துகிறது.

17. “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்து குரைக்குமே தவிர கடிக்காது.”

விளக்கம்:         கேட்பான், கடிக்கமாட்டான் என்பது உயர்திணைக்கு உரிய சொற்கள்.

இங்கு உவகை கருதி அ\றிணை உயர்திணையாகக் கூறப்பட்டுள்ளது.          தமிழ்த்துகள்

18.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

o    “அருளைப் பெருக்கு; அறிவைச் சீராக்கு”

o    “மயக்கம் அகற்றி அறிவைத் தெளிவாக்கு”

o    “துணையே துணையே கல்வி துணையே”

o    “பெருக்கு பெருக்கு அருளைப் பெருக்கு,  

o    திருத்து திருத்து அறிவைத் திருத்து”.

19. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ... இருக்கிறதே சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

o    மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் உள்ளது? அறியா வினா

o    மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? - ஐயவினா

20.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

o    முதற்பொருள் :

§  நிலம்                -          காடு

§  சிறுபொழுது     -          மாலை

§  பெரும்பொழுது -          கார்காலம் (மழைக்காலம்)

o    கருப்பொருள் :

§  உணவு             -          வரகு

இவையனைத்தும் முல்லை நிலத்திற்குரியவை.

21. “நேற்று நான் பார்த்த அருச்சுனன்  தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

            முந்தின நாள் தான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்ததாகச் சேகர் என்னிடம் கூறினான்.

22.உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’ கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

o    “உறங்குகின்ற கும்பகன்னனே! உங்களுடைய பொய்யான மாய வாழ்க்கை எல்லாம் வீழ்ச்சி அடையத் தொடங்குகிற இன்றே அதனைக் காண எழுந்திருப்பாயாக  என்று எழுப்புகின்றனர்.

o    “காற்றாடி வில்லைப் பிடித்து எமதூதர்களின் கையில் கிடந்து நிரந்தரமாக உறங்குவாயாக” எனச் சொல்கிறார்கள்.

23. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

o    உழவர்கள் மலையில் உழுதனர்.

o    முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

விடை:

o    குறவர்கள் மலையில் தேனெடுத்தனர்.

o    நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

24. 'கரப்பிடும்பை இல்லார்' இத்தொடரின் பொருள் கூறுக.

கரப்பிடும்பை இல்லார் : 

            'தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைத் தராத நல்லார்'.

25. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

தஞ்/சம் - நேர் நேர்தேமா                                                                                         தமிழ்த்துகள்

எளி/யர் - நிரை நேர் - புளிமா

பகைக்/கு - (நிரை நேர்) - நிரைபு -  பிறப்பு (வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீராகக் கருதி)

26. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின்

கருத்து என்ன?

இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால்,

இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும். 

27. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

            பெரிய கத்தி, இரும்பு, ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.

அ). செந்நாப்போதார், உழைத்ததால் கிடைத்த ஊதியத்தைக் கூரான ஆயுதம் என்கிறார்.

ஆ). ஏனெனில், உழைத்ததால் கிடைத்த ஊதியமே, பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதமாகும்.

மொழிபெயர்ப்பு

இயல் 4            Malar: Devi, switch off the lights when you leave the room.

Devi: Yeah. We have to save electricity.

Malar: Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi: Superb news! If we launch artificial moons, they can assist in disaster relief by beaming light on areas that lost power!

மலர் – தேவி, நீ அறையை விட்டு வெளியேறும் போது விளக்கை அணைத்து விடு.

தேவி – ஆம், நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்.

மலர் – நம் நாடு இரவில் நம் வீதிகளில் விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் அதிக மின்சாரத்தைச் செலவழிக்கிறது.

தேவி – யாருக்குத் தெரியும் ? வருங்காலத்தில் நம் நாடு இரவு வெளிச்சத்திற்காக ஒரு செயற்கை நிலாவையே வானிற்கு அனுப்பலாம்.

மலர் – நான் படித்திருக்கிறேன், சில நாடுகள் இவ்வகையான செயற்கைக் கோள்களை விண்ணிற்குச் செலுத்தும் நிலை வருங்காலத்தில் வரும். 

தேவி – அருமையான செய்தி, நாம் செயற்கை நிலாவைச் செலுத்தினால் இயற்கைப்பேரிடர் மீட்புப் பணிகளின் போது மின்சாரம் இல்லாத இடங்களில் அவைகளால் ஒளி தர இயலும்.                                                தமிழ்த்துகள்

இயல் 5            Lute music - யாழிசை               

Chamber- ஏதென்று                  

To lookup- பார்த்தேன்   

Grand-daughter - பேத்தி            

Rote- நெட்டுரு            

Didactic compilation- நீதி நூல் திரட்டு

இயல் 6                        Koothu

Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.

கூத்து                           தெருக்கூத்து என்ற பெயர் புகழ்பெற்ற திரையரங்கைப் போன்று தெருக்களில் நடிக்கும் ஒரு கூத்து ஆகும். இது கிராமியக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகிறது. இதற்கான கதைகள் இராமாயணம், மகாபாரதம் போன்ற பிற பழைய புராணங்கள், காவியங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.பல உரையாடல்களுடன் கூடிய பாடல்கள் அக்கலைஞர்களால் அந்த இடத்திலேயே மேம்படுத்தப்படுகிறது. ஒரு கூத்துப்பட்டறை என்பது பதினைந்து முதல் இருபது நடிகர்களுடன் சிறு இன்னிசைக் குழுவினைக் கொண்டதாகும். இசைக்குழுவில் பாடகர் இல்லையெனினும் நடிகர்கள் தாங்களே சொந்தக் குரலில் பாடுவர். கலைஞர்கள் ஆடை அலங்காரங்கள், அதிக ஒப்பனைகளை அவர்களே செய்துகொள்வர். கிராமப்புறங்களில் கூத்து மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

கலைச்சொல் அறிவோம்

1.Nanotechnology    -    மீநுண்தொழில்நுட்பம்        

2.Biotechnology       -    உயிரித் தொழில்நுட்பம்     

3.Ultraviolet rays     -    புற ஊதாக் கதிர்கள் 

4.Space Technology -          விண்வெளித் தொழில்நுட்பம்

5.Cosmic rays         -          விண்வெளிக் கதிர்கள்

6.Infrared rays         -          அகச்சிவப்புக் கதிர்கள்

7.Emblem        -          சின்னம்                                               

8.Thesis           -          ஆய்வேடு

 9.Intellectual     -          அறிவாளர்                                             

10.Symbolism     -          குறியீட்டியல்

11.Aesthetics     -          அழகியல், முருகியல்                            

12.Artifacts        -          கலைப்படைப்புகள்

13.Terminology   -          கலைச்சொல்                                

14.Myth            -          தொன்மம்

சிறுவினா

1.மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தி –

o    வாளால் அறுத்துச் சுடினும் ... எனும் பாடல் பெருமாள் திருமொழியில் குலசேகராழ்வார் பாடியது.

o    இப்பாடலில் இடம்பெற்ற வரியே மேற்கூறியது.

o    உடலில் ஏற்பட்ட புண்ணை மருத்துவர்தம் கத்தியால் அறுத்துச்சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.

o    அடித்தாலும் அன்னையின் கை பிடித்து அழும் குழந்தை போல, இறைவன் தமக்குத்தரும் துன்பமும் நன்மைக்கே எனக் கருதி இறைவனிடம் பற்றுக் கொள்வதாகக் குலசேகராழ்வார் கூறியுள்ளார்.

2.நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது ; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார். ”இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய  குட்டியைத் தடவிக்கொடுத்து, ”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம் ”நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

வழுவமைதி 

நிறைத்திருந்தது

நிறைந்திருந்தது

வாழைத்தோப்பில்

வாழைத்தோட்டத்தில்

குட்டியுடன் நின்றிருந்த மாடு

கன்று

இலச்சுமி கூப்பிடுகிறாள்

மாடு கத்துகிறது

இதோ சென்றுவிட்டேன்

இதோ செல்கிறேன்

துள்ளிய குட்டியை

துள்ளிய கன்றை

என்னடா விளையாட வேண்டுமா

என்ன

அவனை அவிழ்த்துவிட்டேன்

அதனை

நீயும் இவனும் விளையாடுங்கள்

இதுவும்

நீரைக் குடித்தாள்

குடித்தது

 

3.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

பொருள்கோள் வகை – ஆற்றுநீர்ப் பொருள்கோள்

மேற்கண்ட குறட்பாவில் முயற்சி செல்வத்தை உண்டாக்கும், முயற்சியின்மை வறுமைக்குள் தள்ளிவிடும் என்று நேரிடையாக ஆற்றின் நீரோட்டத்தைப்போல் பொருள் கொள்ள முடிகிறது.

எனவே, இது ஆற்றுநீர்ப் பொருள்கோளாகும்.

4.’கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது, மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன’ -  காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

காலப்போக்கில் நெய்தல், குறிஞ்சி, மருதநில மாற்றங்கள் –                                   தமிழ்த்துகள்

கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் பல பகுதிகள் மீன்பிடி துறைமுகங்கள் ஆகிவிட்டன. பல சுற்றுலாத்தளங்கள் ஆகிவிட்டன. ஆடம்பர விடுதிகள் பெருகிவிட்டன. எனினும் மீன்பிடித்தலும் உப்புக்காய்ச்சுதலும் தொடர்கின்றன.

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலங்கள் மலைவாழ் இடங்களாகவும், சுற்றுலாத்தளங்களாகவும் மாறிவிட்டன. தேயிலை, மிளகு, காப்பி, இரப்பர் தோட்டங்களாக்கி வருவாய் ஈட்டுகிறான் மனிதன். எனினும் தேனெடுத்தல், தினை விளைத்தல் இன்னும் மலைவாழ் மக்களால் தொடர்கிறது.

வயலும் வயல் சார்ந்த மருதநிலம் இன்று குடியிருப்புக் கட்டடங்களாகிவிட்டன. வணிக நிறுவனங்கள், கடைவீதிகள், பூங்காக்கள் பெருகிவிட்டன. எனினும்  தினை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறுதானிய உற்பத்தி நடக்கிறது. வயல்கள் ஆழ்துளைக் கிணறுகளின் உதவியுடன் நெல், கரும்பு, வாழை, தென்னையை விளைவிக்கின்றன.

5.வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

வள்ளுவம் கூறும் சிறந்த அமைச்சருக்குரிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்தும் விதம் –

தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

உழவர் ஒருவர் உழவுத் தொழிலுக்குத் தேவையான கலப்பை, மண்வெட்டி, கூடை, கடப்பாரை முதலிய கருவிகளைத் தயார் நிலையில் வைப்பார். ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் இருக்கும். அகல உழுவதைவிட ஆழ உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் நெல்லுக்கு நண்டோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட இடைவெளி விட்டு நடுவார், பராமரிப்பார், அதிக விளைச்சல் காண்பார். இது பல்வேறு தொழில்களுக்கும் நம் செயல்களுக்கும் பொருந்தும்.

மனவலிமை, குடிகாத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

இவ்வைந்தும் பெற்றவர் ஒரு சிறந்த குடும்பத்தலைவராக வாழ முடியும்.

ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது. உலகின் இன்றைய தேவை உணர்ந்து செயல்படும் வணிக நிறுவனம் வெற்றிபெறும். மின்னணுப் பரிமாற்றம், இணையத்தளம் மூலம் வணிகம், பல்பொருள் அங்காடி, விளம்பர உத்தி என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினால் வெற்றி எளிதில் கிட்டும்.

6.பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை ?

தம் நல்வாழ்வுக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அண்டாது வாழும் ஒருவற்கு வள்ளுவர் கூறும் கருத்துகள் –

o    சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும் வலிமை இல்லாமலும் இருந்தால் அவரால் பகைவரின் வலிமையை எதிர்கொள்ள இயலாது.

o    தம்மிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்.

o    குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக்கொண்டு போற்றுவர்.

o    அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்பதறிந்து வாழவேண்டும். ஊருணி நீர் நிறைந்தது போல நம் செல்வம் நல்ல உள்ளங்களுக்கும் சுற்றங்களுக்கும் பயன்பட வேண்டும்.

 நெடுவினா – 5 மதிப்பெண்கள்

1.சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட 

விரிதாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல் காண, மகர யாழின் தேன் ஒத்த இசை போல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருக்கிறது என்று கம்பன் கவி பாடுகிறார்.

ஒரு நாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி போற்றத்தக்கது.

இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை சொல்லி, நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதை ஐயோ என்ற சொல்லில் வைப்பதன் வாயிலாக அதை இயன்றதாக்குகிறான். கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம்.

ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமடா என்று பாரதி சொல்வதை இதில் உணர முடியும்.

கங்கை காண் படலத்தில் ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ? ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ? என்று சந்த நயத்தோடு குறிப்பிடுகிறார்.

உலக்கையால் மாறிமாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம் கும்பகருணன் வதைப் படலத்தில் வருகிறது.

எழுந்திராய் எழுந்திராய், உறங்குவாய் உறங்குவாய் என்று சந்தக்கவிதையில் சிறந்து நிற்கிறான் கம்பன்.

எதுகை, மோனை, இயைபு இவற்றை எழிலுறத் தொடுப்பது அழகு.

அதிலும் ஒலி ஒற்றுமை தோன்றச் சொற்களை அடுக்கிப்படிப்பவர் மனதை நடனமிடச் செய்யும் வித்தகக்கவி கம்பனுக்கே சொந்தம் சந்தம். 


கட்டுரை 

தலைப்பு - விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை

இந்தியாவிற்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. விண்வெளியில் தடம் பதித்த பெண்கள் மிகச்சிலரே. அவர்களுள் நம் பாரதத்தின் கல்பனா சாவ்லாவும் ஒருவர். விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண்மணியான அவரைப் பற்றியும் விண்வெளியில் அவரின் சாதனை பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

இளமைப்பருவம்

இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் 01-07-1961 இல் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள். இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

கல்வி

கல்பனா சாவ்லா தனது கல்வியைக் கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.

நாசாவில் கல்பனா சாவ்லா

1988 ஆம் ஆண்டு நாசா அமெஸ் ஆராய்ச்சிக் கூடத்தில் ஒசெர்செட் மேதொட்ஸ், இன்க் இல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா, செங்குத்தாகக் குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றி கம்ப்யுடேசினல் புலூயிட் டயினமிக்ஸ் ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார்.

விண்வெளிப் பயணம்

கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கி.மீ பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 இல் கொலம்பியா விண்கலம் STS-107 அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறி கல்பனா சாவ்லா உள்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியாகினர்.

முடிவுரை

1991-1992 இல் தன் குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாடக் கணவர் ஆரிசனுடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது. அவரின் நினைவைப் போற்ற இந்தியாவின் அரசாங்கப் பொதுநிறுவனங்களுக்கு, கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

2.மதிப்புரை எழுதுக.

பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை /கட்டுரை /சிறுகதை /கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

குறிப்பு - நூலின் தலைப்பு - நூலின் மையப்பொருள் - மொழி நடை -  வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக் கூறு - நூல் ஆசிரியர்.

மதிப்புரை

நூலின் தலைப்பு           – அணிலாடும் முன்றில்

நூலின் மையப்பொருள் – குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகள்

மொழி நடை                 -  வசன கவிதை நடை

வெளிப்படுத்தும் கருத்து – நூலாசிரியரின் வாழ்வில் உறவுகளின் நிலை

நூலின் நயம்                – தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப்  பற்றிய முழுமையான ஆவணம்.

நூல் கட்டமைப்பு          – 1.அம்மா, 2.அப்பா, 3.அக்கா, 4.தம்பி, 5.ஆயா, 6.தாய்மாமன், 7.அத்தை, 8.தாத்தா, 9.சித்தி,

                                      10.அண்ணன், 11.தங்கை, 12.பங்காளிகள், 13.பெரியம்மா, 14.மாமன்கள்,                                                            15.முறைப்பெண்கள், 16.சித்தப்பா, 17.அண்ணி, 18.மைத்துனன்,  19.மனைவி, 20.மகன்.

சிறப்புக் கூறு                – அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை

                                    அழுதுகொண்டிருக்கும் அப்பாவின் முகம்.

                                    அக்காக்கள் இல்லாத வீடு அரை வீடு.

                                    தாய்மாமன் என்பவன் உண்மையில் ஒவ்வொரு

                                    குழந்தைக்கும் ஓர் ஆண் தாய்.                                                  தமிழ்த்துகள்

அண்ணன்கள் மழையின் மைந்தர்கள்.

                                    அன்பில் சிறந்தவர்கள் அத்தைப் பெண்கள்,   மாமன் பெண்கள்.

                                    நெருப்பைத் தொலைவில் இருந்து ரசிப்பது வேறு,

                                    நீ நெருப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்.

                                    மழலை பேசி மொழியை ஆசீர்வதித்தாய்.

நூல் ஆசிரியர்              – நா.முத்துக்குமார்.

 

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

3.அரசுப் பொருட்காட்சி சென்றுவந்த நிகழ்வு

தூங்கா நகரத்தில் நான்

தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரம், இந்திய நகரங்களின் பட்டியலில் 44 ஆவது நகரம், எனினும் பண்டைய ( பாண்டியர் ) தலைநகரம். வைகைக் கரையில் அமைந்துள்ள மூதூர். அங்கே தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் பொருட்காட்சியைக் காண நான் என் குடும்பத்தாருடன் சென்றேன்.

சங்கத்தமிழில் எங்கள் பகிர்வு

மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்ட மதுரையில் நடைபெற்ற பொருட்காட்சியை சங்கத்தமிழில் பகிர்கிறேன். 45 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது அரசு பொருட்காட்சி. நாங்கள் சென்றது 23ஆம் நாள். ஒவ்வொரு துறைக்கும் 750 சதுர அடி அளவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருப்பதாகக் கண்டேன்.

துறைகளின் சங்கமம்

அரசு பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை, வேளாண் துறை, இந்து சமய அறநிலையத்துறை, சமூகநலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித்துறை உள்பட 27 துறைகள் மற்றும் அரசு சார்பு துறைகள் தங்கள் அரங்கங்களை அமைத்திருந்தனர்.

கலை நிகழ்ச்சிகளும் குதூகலமும்                                 

குழந்தைகளை குதூகலப்படுத்த ராட்டினம் உள்பட பல்வேறு வகை விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் தனியார் நிறுவனங்களின் கடைகளும் இடம்பெற்றிருந்தன. நாள்தோறும் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் அன்று மதுரை முத்துவின் நகைச்சுவை நிகழ்ச்சி கண்டு இன்புற்றேன்.

பயன்பாடும் பட்டறிவும்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மையமாகக் கொண்ட நகர அமைப்பு நாம் அறிந்ததே. தூங்கா நகரின் அழகினை இரவில் மின் விளக்கு ஒளியில் கண்டு களித்தேன். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சிக்கான நேரமாகும். பொருட்காட்சிக்கு பொதுமக்கள் வந்து சேர சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. புத்தகக் கண்காட்சியில் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் கண்டேன். அவர் கண்ட மதுரையில் நான் நிற்கிறேன் என்பதே பெருமையாக இருந்தது. மண் பரிசோதனை, இயற்கை விவசாயம், சுகாதார வளாகம், இயற்கை உணவு, சுற்றுலா வழிகாட்டி, பெண் கல்விக்கு அரசு உதவி என ஒவ்வோர் அரங்கிலும் பாடம் கற்றேன்.

வையை என்னும் பொய்யா குலக்கொடி                           

மதுரையை வளப்படுத்தும் வைகை ஆற்றின் அழகைக் கண்டு வியந்தபடியே சிறப்புப் பேருந்தில் எங்கள் மாமாவின் இல்லம் வந்து சேர்ந்தேன். பொருட்காட்சியில் நான் வாங்கிய தானியங்கி வண்டியை இயக்கியவாறே நிகழ்வுகளை அசை போடுகிறேன். வைகையில் அழகர் இறங்கும் நிகழ்வு கண்டு வீடு வந்து சேர்ந்தேன். எனினும் ராட்டினமாய் என்னுள் பொருட்காட்சி நிகழ்வுகள் சுற்றிவருகின்றன.

 

நிற்க அதற்குத் தக...

இயல் 4                  பக்க எண் 98                                                           தமிழ்த்துகள்

நாங்கள் செய்யும் முயற்சிகள்

1

உடல்நலம் பாதிக்கும் என்பதை எடுத்துக்கூறுவேன்.

2

மனநலம் பாதிக்கும் என்பதை எடுத்துக்கூறுவேன்.

3

புத்தக வாசிப்பை அறிமுகம் செய்வேன்

4

மைதான விளையாட்டுகளை அறிமுகம் செய்வேன்

 

இயல் 5                  பக்க எண் 126

பள்ளியில் நான்

வீட்டில் நான்

நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பேன்

வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்வேன்

உடன் பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுவேன்

அம்மா கூறும் வேலைகளைச் செய்வேன்

ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவேன்

பெற்றோருக்கு மரியாதை தருவேன்

நண்பர்களுடன் அன்பாகப் பழகுவேன்

தம்பி தங்கைகளுடன் அன்பாக இருப்பேன்

 

இயல் 6                  பக்க எண் 153

கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்யவிருப்பனவற்றை வரிசைப்படுத்துக.

1.பிறந்தநாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன்.

2.எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு செய்வேன்.

3.பள்ளி விழாக்களில் ஒயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன்.

4.ஊர்த் திருவிழாக்களில் பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் போன்றவற்றை நிகழ்த்த ஏற்பாடு செய்வேன்.

5.விழாக்காலங்களில் நிகழ் கலைகளை நிகழ்த்துவதற்கு அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

6.நண்பர்களிடம் அவர்களின் இல்ல விழாக்களில் நிகழ்கலைகளுக்கு முக்கியத்துவம் தருமாறு கூறுவேன்.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக




கைபேசி போடுது கடிவாளம்

                                                கண்விழிபிதுங்க நீயும் போடு தாளம்

                                                நிமிர்ந்த நடை என்னாயிற்று

                                                குனிந்தே வாழப்பழகியாயிற்று

                                                வெண்திரை பார்த்தே கழியுது காலம்

                                                                வீணாய் அதன்பின் ஓடாதே நீ பாவம்





















நுனியில் அமர்ந்து நீ

அடிமரம் வெட்டுபவனா?

வேரை வெட்டிவிட்டு

விழுதுக்கு ஏங்குபவனா?

யாரைத் தேடுகிறாய் பாலைவனத்தில்

            நீரைத் தேடும் சல்லிவேர்களாய்
















தாளத்திற்கேற்ற அடி எடுப்போம்

தப்பாமல் அடவு எடுப்போம்

மேளத்திற்கேற்ற ஆட்டமாடுவோம்

கைத்தாளத்தையும் சேர்த்துப்போடுவோம்

ஒயிலாக ஆட்டம் ஆடுவோம்

வண்ணமயிலாகத் துள்ளி ஆடுவோம்


தமிழ்த்துகள்

Blog Archive