கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, February 16, 2022

என் தாய்மொழி தமிழ் - கவிதை - பேச்சு - கட்டுரை MY MOTHER TONGUE IS TAMIL ESSAY SPEECH KAVITHAI

 என் தாய்மொழி தமிழ்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்க் குடி. அமுதொடு அருந்தமிழ் ஊட்டி அன்னையர் வளர்க்க பெருமைமிகு நிலப்பரப்பில் வாழும் தமிழர்கள் நாம்.                                   தமிழ்த்துகள்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றனும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வான்புகழ் வள்ளுவனும் திங்களையும் ஞாயிறையும் வணங்கித் தன் கவிதையைத் துவக்கிய இளங்கோவடிகளும் கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற சொல்லுக்கு இலக்கணமாய் வாழ்ந்திட்ட விருத்தப்பாவில் விளையாட்டுக் காட்டிய புலவனும் மூச்சாய்க் கொண்டிருந்தது தமிழ் மொழி தானே.       தமிழ்த்துகள்

கூத்தன் இருந்தான், குறளரசன் அங்கிருந்தான். வார்த்தைத் தமிழுக்கு வணங்கிய தமிழ்வேந்தன் கம்பன் அங்கிருந்தான். வயதான தமிழ்ப் பாட்டி ஔவை இருந்தாள். நக்கீரன் நன்னாகன், நப்பசலை, ஒக்கூர் மாசாத்தி, ஒண்சாத்தன், காவலர் மூவருமே காத்துநின்ற வாளுக்குக் காவலனாம் நம்பி; பாட்டெடுத்த அவன் தம்பி யாப்பிலாப் பாடலேனும் யார் தரும் கவிதையேனும் மா பலா போல் மடியில் வாங்கி தமிழர் நெஞ்சில் விளையாடியது நம் செம்மொழியாம் தமிழ்மொழி. முத்துக் கடல் குளித்து மூன்று நெறி வளர்த்து கத்தும் கடல் மீது கலங்களில் விளையாடும் தாயகம் நம் தென்பாண்டி மண்டலமாம் தமிழ்நாடு.     தமிழ்த்துகள்

எத்தனை எத்தனை இலக்கியங்கள், அறமும் பொருளும் இன்பமும் செப்பிடும் வரிசையில். முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மூவேந்தர் வாழ்ந்த மண் இது. கன்னித்தமிழாய் அன்றிருந்து கணினித்தமிழாய் இன்றுவரை எண்ணிய எண்ணமெல்லாம் விதைக்க சொல்லேர் உழவர்களுக்கு நல் வித்தாய் கவிதைப் பயிர் வளர்க்கும் உயரிய மொழி தமிழ் மொழி. தாய்மொழியில் சிந்திக்கவும் தாய்மொழியில் கவிதை படைக்கவும் புறப்படும் மண்ணின் மைந்தர்களுக்கு நாவில் சரளமாய் வந்து விழும் சொல் அம்புகள். வில்லம்பினும் கூர்மை மிக்க சொல் அம்புகள், தமிழ்மொழியின் சுவை அரும்புகள்.          தமிழ்த்துகள்

எல்லையில்லா இன்பம் தரும் கற்பனைக்கு வடிவம் தரும் தாய்மொழியாம் தமிழை "பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும் ஓடையிலே என் சாம்பல் கரையும் போதும் ஒண்டமிழே சலசலத்து ஓடவேண்டும்" என்ற யாழ்ப்பாணத்துக் கவியின் வைர வரிகளை மனதில் கொண்டு தமிழையே பேச்சாய்ப் பேசுவோம்! மூச்சாகச் சுவாசிப்போம்!
மு.முத்துமுருகன், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்

தமிழ்த்துகள்

Blog Archive