மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகம்
‘இந்தியாவின் எதிர்காலம் அதன் கிராமங்களின் கைகளில் தான் உள்ளது’, என்றார் மகாத்மா காந்தியடிகள். 200 ஆண்டு காலம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் இந்திய மண்ணில் வளர்ச்சி என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. ஒரு பக்கம் நன்கு வளர்ந்துவிட்ட நகரங்கள்; மறுபக்கம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள்உள்ளாட்சி நிர்வாகத்தை எப்படி அமைப்பது அனைத்து மக்களுக்கும் அரசின் திட்டங்கள் எப்படி கொண்டு சேர்ப்பது என்ற கேள்வி ஆட்சியாளர்களின் முன் எழுந்தது. உலகுக்கே பண்பாட்டையும் நாகரிகத்தையும் கற்றுக்கொடுத்த நம் முன்னோர் சோழர் காலத்திலேயே குடவோலை முறை மூலம் மக்களாட்சியை நிலைநாட்டி இருக்கிறார்கள். 1947இல் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாரதி கண்ட கனவை நனவாக்கி விட்டோம். 1950இல் நமக்கென்று இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்ததோடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக நாம் உயர்ந்து விட்டோம். ஆனால் அதன் நிர்வாகம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74-வது திருத்தங்கள் உதவின. அரசியலமைப்புச் சட்டத்தின் 11 ஆவது அட்டவணையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 29ஆவது பட்டியலின்படி பொருளாதார மேம்பாடு சமூக நீதி போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மாநில சட்டமன்றங்களில் அதிகாரம் வழங்கப்பட்டது. உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் ரிப்பன் பிரபு 1882 இல் தன் திட்டமான தலசுய ஆட்சித் திட்டம் மூலம் 1688 இல் அமைக்கப்பட்ட சென்னை மாநகராட்சியில் நிர்வாகத்தை நடத்திக் காட்டினார். இன்றைக்கு ஏறத்தாழ 1875 கோடி ரூபாய் வருமானம் கொண்ட மிகப்பெரிய மாநகராட்சியாக சென்னை உருவாகியுள்ளது. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 1992 ஏப்ரல் 24ஆம் நாள் நடைமுறைக்குக் கொண்டு வந்த பஞ்சாயத்து ராஜ் திட்டம் தற்போதைய நம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ளது. இதன்படி மூன்றடுக்கு ஊராட்சி முறை அமைக்கப்பட்டது. அதாவது மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி. நகரப் பகுதிகளை மாநகரம், நகரம், பேரூராட்சி என்று மூன்றாக வகுத்து உள்ளாட்சி நிர்வாகம் அமைக்கப்பட்டது.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு என்பது வள்ளுவர் வாக்கு. அனைத்து வளங்களையும் தேடாமல் கொண்டிருக்கும் நாடே சிறந்த நாடு என்று கூறியுள்ளார். அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதிகள், கல்வி இவை அனைத்து கிராமங்களுக்கும் சென்று சேர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் தற்போது இருபத்தி ஒரு மாநகராட்சிகள் 123 நகராட்சிகள் 529 பேரூராட்சிகள் 385 ஊராட்சி ஒன்றியங்கள் 12524 கிராம ஊராட்சிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் திரு நரேந்திர சிங் தோமர் அவர்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுகாதாரம் கண்டிப்பாக பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் திறந்தவெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காகக் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. பெண்கள் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. 35 மாநிலங்களில் சுமார் 699 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஆறு லட்சம் கிராமங்கள் திறந்தவெளி மலம் கழிக்கப் படாத சுகாதாரமான கிராமங்களாக உருவாகியுள்ளன. பெண்களின் பங்கு உள்ளாட்சியில் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை அரசு கருத்தில் கொண்டு பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 2011 உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் முப்பத்தி எட்டு சதவீதம் வெற்றி பெற்றனர். 2016 உள்ளாட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப புதுமைப்பெண்கள் போட்டிபோட்டு பல்வேறு துறைகளிலும் கோலோச்சி வரக்கூடிய காலம் இது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் சுற்றுச்சூழல், சுற்றுலா மேம்பாடு, வேளாண்மை, நீர்ப்பாசனம், கிராமப்புற பெண்கள் பாதுகாப்பு மற்றும் வசதி, சுய தூய்மை இவற்றுக்காக நிதி ஒதுக்கப்பட்டு கிராமப்புற வளர்ச்சி தூண்டி விடப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளில் விதிக்கப்படும் வீட்டு வரி, கேளிக்கை வரி, தொழில் வரி, குடிநீர் வரி, விளம்பர வரி போன்றவை மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 24ஆம் நாளை தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் ஆக நாம் கொண்டாடி வருகிறோம். அதுமட்டுமல்லாது சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி விருதுகள் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. சிறப்பாகச் செயல்படும் மாநகராட்சிக்கு 25 இலட்சம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் சிறப்பாகச் செயல்படும் முதல் மூன்று நகராட்சிகளுக்கு முறையே 15, 10, 5 லட்சங்கள் பரிசுத் தொகையாகவும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பேரூராட்சிகள் முறையே 10, 53 லட்சங்கள் பரிசுத் தொகையாக சான்றிதழுடன் வழங்கப்படுகின்றன. 2007, 2008 இல் நமக்கு நாமே திட்டம் தொடங்கப்பட்டு கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. 75 விழுக்காடு அரசு நிதி மூலம் மாநகராட்சி ஆணையர் ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மூலமாக நிதி பங்களிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்பது மட்டுமல்ல எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கணினி மயமாகும் திட்டங்களும் மின்னல் வேகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூலமாக பிரதமர் இக்ராம் சுவராஜ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஊராட்சி இயக்கம் நடைமுறையில் உள்ளது. 2006இல் தொடங்கப்பட்ட தேசிய மின் ஆளுமைத் திட்டம் பல்வேறு பொது சேவை மையமாக கிராமப் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஓங்கி ஒலிக்கும் கருத்தாக அதன் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கிராமசபைக் கூட்டங்கள் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 முக்கியமாக நான்கு நாட்களிலும் தேவைப்படும் காலங்களில் அவசர கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆளும் ஆட்சி என்று தத்துவம் வரையறை செய்தார் முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். மத்திய மாநில அரசுகள் மூலைமுடுக்கெல்லாம் தன் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளை நாடி நரம்புகளாக இருந்து செயல்படுகின்றன என்றால் அது மிகையாகாது. ஜல் சக்தி அமைச்சகம் மூலம் குடிநீர் பங்கீடு உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கும் சமூக வேறுபாடு கருதாமல் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் மக்களின் மனசாட்சியாக உள்ளாட்சி தொடரும். அது மக்களாட்சியின் உண்மைப் பொருளை உலகெங்கும் பறை சாற்றும்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் என்ற உலகப் பொதுமறை காட்டும் ஆட்சியாளர்களால் நாடு செழிக்கட்டும் நாமும் சிறப்போம்!
மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்.