உள்ளாட்சி மக்களின் சுய ஆட்சி என கனவு கண்டவர் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். அவரின் கனவை நிறைவேற்றும்
விதமாக இன்று இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றிலும் குறிப்பாக
நம் தமிழ்நாட்டில் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது உள்ளாட்சி.
பழந்தமிழர் காலம் தொட்டே உள்ளாட்சி அமைந்திருந்ததை நாம்
அறிந்து கொள்ள முடியும். உத்திரமேரூர் கல்வெட்டு, மக்கள் குடவோலை எனும் குடும்பு முறை அமைப்பைச் செயல்படுத்தியது
பற்றிக் குறிப்பிடுகிறது. அம்முறை இன்றைய வார்டு முறை இருப்பதைப்போல அமைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
வெளிப்படையாகவும் மக்கள் பங்கேற்கும் ஒரு சிறந்த முறையாகவும் பண்டைய காலத்தில் உள்ளாட்சி
அமைந்திருந்தது பாராட்டுக்குரியது.
இந்தியாவில் உள்ளாட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்
ரிப்பன் பிரபு என்று பெயர் பெற்ற
சார்ஜ் பிரடரிக் சாமுவேல்
ராபின்சன் என்பவர் ஆவார். இவர் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ஏற்படுத்திக்
கொடுத்த நிர்வாகச் சீர்திருத்தம், இவரின் மக்கள் பணி போன்றவற்றால் ரிப்பன் எங்கள் அப்பன்
என்று அழைக்கப்பட்டார்.
1688 இல் உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி
தான் இன்றைய இந்தியாவின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்பாகும். நம் தமிழகத்தில் உள்ளாட்சி
அமைப்பு முறை நகர்ப்புறம், கிராமப்புறம் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்றும் கிராமப் புறத்தை ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம்,
மாவட்ட ஊராட்சி என்றும் மூன்று அடுக்கு முறையில் பிரிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி எனும் சுயாட்சி சிறப்பாக இருக்க வேண்டும், அதன்
அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1492 இல் பஞ்சாயத்து ராஜ் சட்டம்
நிறைவேற்றப்பட்டது.
மக்களாட்சியின் ஆணிவேராகத் திகழும் கிராம சபை உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாகச்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது கிராம மக்களின் கருத்தை அறிந்து கிராமத்தின் வளர்ச்சிக்குப்
பெரும் பங்காற்றுகிறது. இது ஆண்டுக்கு 4 முறை சனவரி 26, மே 1, ஆகஸ்ட்
15, அக்டோபர் 2 ஆகிய நாள்களிலும் அவசர காலங்களில் தேவைக்கேற்பவும் சிறப்பு கிராம
சபை கூட்டம் கூட்டப்படுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி வளர்ச்சியின் ஒரு மைல்கல்லாக நமக்கு நாமே திட்டம் அமைந்துள்ளது.
கிராம மக்களின் பங்களிப்போடு அரசின் பங்களிப்புடன் கிராமத்தின் வளர்ச்சிப் பணிக்கு
இத்திட்டம் பெரிதும் உதவி வருகிறது. மகளிர் சுய உதவிக் குழு எனும் மகத்தான திட்டம்
கிராமப்புற, நகர்ப்புற மகளிரின் பொருளாதார வேலைவாய்ப்பைப் பெருக்கக் கிடைத்த நல்ல வரம்
என்றே கூறலாம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் சுயதொழில் செய்து வேலைவாய்ப்பையும்
பொருளாதாரத்தையும் மேம்படுத்துகின்றனர்.
வையத் தலைமை கொள் என்பதற்கு ஏற்ப பெண்கள் இன்று பல்வேறு
மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சி நிர்வாகம் செய்கின்ற நிலைக்கு உயர்ந்து இருப்பதைக் காண
முடிகிறது. தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு
2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித்
தேர்தலில் பெண்கள் முப்பத்தி எட்டு சதவீதம் இடங்களில் வெற்றி
பெற்றனர் என்பது சிறப்பான ஒன்று. 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு
உள்ளாட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம்
செய்துள்ளது.
உள்ளாட்சி என்ற அமைப்பு இருப்பதாலேயே அந்தந்த ஊராட்சி,
நகராட்சி, மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்கின்றனர்.
மேலும் மக்களின் தொடர்பு அதிகம் இருப்பதால் உடனடியான தீர்வு கிடைக்கிறது. ஊரக மக்களின்
வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் கொடுக்கக்கூடிய உன்னதமான திட்டமாக ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
அமைந்துள்ளது. பெண்கள்,
முதியோர், ஏழைகள் என பலதரப்பட்ட மக்களுக்கும் 100 நாள்கள் வேலை உறுதியை வழங்கி
அவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதில் உள்ளாட்சியின் பங்கு உன்னதமானது.
மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், குடியிருப்பு,
சாலை, தெருவிளக்கு போன்றவற்றை உடனுக்குடன் உள்ளாட்சி நிறைவேற்றி வைக்கிறது. மேலும்
ஏழை எளிய மக்கள், பெண்கள், முதியோர், மாற்றுத் திறனுடையோர் என பலதரப்பட்ட மக்களின்
வாழ்வாதாரத்திற்கும் உள்ளாட்சி தன்னுடைய பங்களிப்பைச் செய்து வருவதால் உள்ளாட்சி மக்களுக்குக்
கிடைத்த ஒரு நல்லாட்சியே. மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகத்தின் பங்கு
இன்றியமையாதது.
உள்ளாட்சி காப்போம், மக்களாட்சியை
நிலைநிறுத்துவோம்.
கு.முருகேசன்,
இடைநிலையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.