கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, June 19, 2020

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன... இரட்டுறமொழிதல் பாடலும் விளக்கமும் SILEDAI VENKAAYAM SUKKAANAAL...

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே

இந்தப் பாடலை நேரடியாகப் பொருள் கொண்டால்: ஒரு பலசரக்குக் கடைக்காரரான வேரகம் எனப்படும் செட்டியாரைப் பார்த்துச் சொல்வதுபோல் இருக்கிறது.

வேரகச் செட்டியாரே!

சமிபாடின்மையைப் போக்க வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் முதலியவைகளை இட்டு குழம்பு தயாரிப்பார்கள். 

இதில் வாங்கி வந்த வெங்காயமானது சுக்கைபோன்று உலர்ந்துபோய் விடுமாயின், வெந்தயம் இருந்தும் எந்தப் பலனும் இல்லை. 

எனவே அந்த சரக்குப் பொருட்கள் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. 

இவைகளால் கிடைக்கப்பெறும் பயனை சீரகத்தில் செய்யப்படும் இரசம் மூலம் பெறலாம். 

மேலும் சீரகமும் கெட்டுப்போகாத பொருளாகவே இருக்கிறது. 

எனவே சீரகத்தை எனக்குத் தந்தால், பெருங்காயம் எனக்குத் தேவையில்லை.

ஆனால், இந்தப் பாடலினுள் சிலேடையாக ஆழமான பொருளைப் புகுத்தியுள்ளனர். 

அந்தப் பொருளை இப்போது பார்ப்போம். 

இது திருவேரகம் என்று அழைக்கப்படும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை நோக்கிச் சொல்வதாக வரும்.

வேரகத்துச் செட்டியாரே என்பது திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமானே!

  • வெங்காயம் என்பதில், காயம் என்பது உடம்பு, எனவே, வெங்காயம் என்பது வெறுமையான காயம், அதாவது, வெறுமையான இந்த உடம்பு,
  • சுக்கானால், அதாவது சுக்கைப்போல வாடி வதங்கிப் போனால்,
  • வெந்தயத்தால் ஆவதென்ன? வெந்த அயம் என்பது உயிர் தரிப்பதற்காக உண்ணப்படும் அயச் செந்தூரம் என்ற பொருளில் வரலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே உடம்பு கெட்டுப் போனால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளும் இந்த அயச் செந்தூரத்தால் என்ன பயன்?
  • இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை, அதாவது, அதன் பிறகு யார் இந்த உடலைச் சுமந்து கொண்டு இருக்க விரும்புவார்கள்?
  • சீரகத்தைத் தந்தீரேல் என்பதில் சீர் + அகம், அதாவது சிறந்த மனத்தை அல்லது சிறந்த வீட்டை, அல்லது வீடுபேற்றைத் தருவீரேயானால்,
  • வேண்டேன் பெருங்காயம், பெருங்காயம் என்பது பெரிய + காயம், அல்லது பெரிய உடம்பு, அதாவது, மீண்டும் மீண்டும் பிறந்து வினையினால் அவதிப்படும் இந்த பெரிய உடம்பைக் கேட்க மாட்டேன்..

என்று பொருள்படுகின்றது.

தமிழ்த்துகள்

Blog Archive