தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ
கம்பனின் கவித்திறம் மிளிரும் இப்பாடல் இயல்பாகவே மருதநில அழகின் ஆனந்தக் கூத்தை அழகுற விளக்கும் திறனைப் பெற்று விளங்குகிறது!
தனித் தீந்தமிழ் சொல்லோவியம்!
கோசல வடநாட்டு அழகை வடசொல் முற்றிலும் ஒழிந்த தீந்தமிழில் சொல்லோவியமாகத் தீட்டுகிறார் கம்பநாட்டாழ்வார்!
இப்பாடல் தனித்தமிழில் அமைந்ததாலேயே அதன் அழகு ஓங்கி மிளிர்கின்றது என்பது தெளிவு.
கோசல நாட்டின் மருதநிலத்தின் அழகை வருணிக்க எண்ணும்போதே மருதநிலஅரசி கொலுவீற்றிருக்கும் காட்சி கவிச்சக்கரவர்த்தியின் விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, தமிழில் கலந்து வெளியான சொல்லோவியம் இப்பாடல்.
மருதம் ஒரு பெண்ணரசியாய் கொலுவீற்றிருக்கும் அழகோ!
மருதநாட்டு அரசி கொலுவீற்றிருக்க, மருத வயலாகிய அரச மண்டபத்தில் நல்ல இசையுடன் கூடிய நாட்டியம் அரங்கேறுகின்றது.
நீரலைகள் இடம்மாறி திரைச்சீலையான தோரணமோ!
மருத மண்டபத்தில் அழகாகத் தொங்கவிடப்பட்ட திரைச் சீலைகளாக நீரலைகள் அழகு காட்டுகின்றன!
அரங்குக்கு ஒளிபாய்ச்சும் தீவர்த்தி விளக்குகளாக செந்தாமரை மொட்டுக்கள் மிளிர்கின்றன!
நாட்டியத்தின் பின்னணியில் கொண்டல்களின் முழவோ!
நாட்டியத்துக்கான பின்னணி இசை கூட்ட மேகங்கள் கூடி மத்தள முழவின் இசையை மங்களகரமாக முழங்குகின்றன!
தேன்பிழியும் மகர யாழிசைக்கும் வண்டோ!
மகரயாழின் இசைத்தேன் பிழிந்து காதினில் வந்து பாய்வதைப்போல் வண்டுகள் இனிதாகப் பாடல்கள் இசைக்கும் பின்னணியில் கண்களில் குளுமையும், முகத்தில் செழுமையும் காட்டும் மயில் நங்கைகள் நாட்டியம் ஆடுகின்றன.
ஆடும் தண்டலை மயில்களை விழுங்கும் குவளை மலர்கள்!
மருத மண்டபத்தில் அம்மயில்களின் நாட்டியத்தை வைத்தவிழி அகலாமல் குவளை மலர்கள் கண்டு களிக்க,
கம்பனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற கவிதை என்பேன்!
கொலுவீற்றிருக்கும் மருதநாட்டு அரசி இத்தனையும் ஒரு சேரக் கண்டு களித்து இன்புறும் அழகைக் காண ஓர் ஆயிரம் கண் வேண்டும் என்கிறார் கம்பநாட்டாழ்வார்.
கோசல நாட்டின் முழுமை மருத அழகையும் தம் தனித்தமிழ் தூரிகையில் காவியமாக்கிவிட்டார் கவிச்சக்கரவர்த்தி.
இப்போது முழுப்பாடலையும் சுவையுங்கள். பாடலின் ஒவ்வொரு சொல்லும் வாசிப்பவரின் மனதில் என்றும் அழியாக் காவியமாகிவிடும் அற்புதத்தை உணருங்கள்!
"கொண்டல்கள் முழவின் ஏங்க" என்ற கவிச்சக்கரவர்த்தியின் சொல்லாடலை உற்று நோக்கினால் நாட்டிய நிகழ்வில், பக்கவாத்தியங்களில், குறிப்பாக, முழவு எனப்படும் தோல் வாத்தியம் வாசிப்பவர்கள் தரையில் அமர்ந்து, நாட்டியத்தின் ஜதிக்கு ஏற்ப, ஒத்திசைவுடன் நாட்டியத்தைப் பார்த்துக்கொண்டே வாசிப்பார்கள்.
கொண்டல்கள் முழவின் 'ஏங்க'!
மருத அரசியின் சபையில் ஆடும் 'தண்டலை மயில்களின்' நாட்டிய ஆட்டத்துக்கு 'முழவு' வாசிக்கும் 'கொண்டல்களால்', தரையில் அமர்ந்து நாட்டியத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லை. 'Arial view' எனப்படும் பறவைப் பார்வைக் காட்சியே முழவு வாசிக்கும் 'கொண்டல்களுக்கு'க் கிடைத்தன என்பதால் அவைகள் நாட்டியத்தைத் தரையில் அமர்ந்து காண இயலவில்லையே என்ற ஏக்கத்துடனேயே முழவின் ஓசையை முழக்குகின்றனவாம்! கவிச்சக்கரவர்த்தியின் அழகியல் கற்பனைக்கு ஈடு இணை ஏது?
குவளை கண் விழித்து நோக்க!
கொண்டல்கள் கூடியதும், கதிரவன் விடைபெற, காரிருள் கவியத் தொடங்குகிறது! குவளை மலர்கள் இரவு வந்துவிட்டது என எண்ணி உறங்கத் தொடங்கிவிடுகின்றனவாம்! கொண்டல்களின் 'இடியோசை' முழவின் இசைபோல் ஓங்கி ஒலிக்கும் சத்தம் கேட்டு, உறங்கத் தொடங்கிய குவளை மலர்கள் கண்விழித்து நோக்குகின்றனவாம்! அடடா! அழகான 'தண்டலை மயில்களின்' அற்புத நாட்டியமல்லவா நடக்கின்றது. நாம் அறியாமல் உறங்கிவிட்டோமே என்று குவளை மலர்கள் ஆர்வத்துடன் நாட்டியத்தை நோக்குகின்றனவாம்
மு.முத்துமுருகன்,ம.ரெட்டியபட்டி.