குறுவினா விடை 2 மதிப்பெண்கள்
1). விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
வாருங்கள்... வாருங்கள்... உங்களைக் கண்டது எனக்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறது. உட்காருங்கள்! முதலில் சிறிது நீர் பருகுங்கள்.
நீங்கள் எங்கள் இல்லத்திற்கு வந்தது, நான் செய்த பெரும்பேறு.
கண்டிப்பாக உணவருந்திவிட்டுதான் நீங்கள் செல்ல வேண்டும்.
உங்களைச்
சந்திக்க நான் மிகவும் ஆவலாக இருந்தேன்.
2). 'தானியம் ஏதும்
இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றி எடுத்து
விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச்
செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வகையிலேனும் முயன்று
விருந்தளித்து மகிழ்ந்தனர், நம்
முன்னோர்.
இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியாருக்கு
விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை.
எனவே, அன்று
விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்துவந்து, பின் சமைத்து
விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் காட்டப்படுகிறது.
இது
விருந்தோம்பலுக்குச் செல்வத்தைவிட, விருந்தோம்பல் பண்பே இன்றியமையாதது என்பதைக் காட்டுகிறது.
3). 'எழுது என்றாள்'
என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்'
என அடுக்குத்தொடர் ஆனது. 'சிரித்துப் பேசினார்'
என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
'சிரித்துப் பேசினார்' என்பது 'சிரித்துச்
சிரித்துப் பேசினார்' என அடுக்குத்தொடர் ஆகும்.
4). 'இறடிப் பொம்மல்
பெறுகுவிர்' - இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
இறடி- தினை; பொம்மல்-
சோறு.
இறடிப் பொம்மல் பெறுகுவிர்' - இத்தொடர் உணர்த்தும் பொருள்
'தினைச்சோற்றைப் பெறுவீர்கள்' என்பதாம்.
5). பாரதியார் கவிஞர், நூலகம்
சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில்
எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
பாரதியார் கவிஞர்- பெயர்ப் பயனிலை
நூலகம் சென்றார்-வினைப் பயனிலை
அவர்
யார்?- வினாப் பயனிலை.