கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, August 25, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 9 சிறுவினா விடை TENTH TAMIL UNIT 9 SHORT QUESTIONS AND ANSWERS

 1) "சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது" -  இடஞ்சுட்டிப் பொருள் தருக.

            இடம்:  இப்பாடல் வரிகள் நாகூர்ரூமியால் எழுதப்பட்ட 'சித்தாளு' என்ற கவிதையில் மனச்சுமையைப் பற்றிக் கூறும் விதமாக அமைந்துள்ளது .

பொருள்:      சித்தாளின் வாழ்வில் பல்வேறு துயரங்கள் நிகழ்ந்தாலும் அவளின் மனச் சுமைகளைத் தலையில் உள்ள செங்கற்கள் அறியாது .

விளக்கம் :

                  பல அடுக்கு மாடி கட்டடங்களை உருவாக்கி, பிறருடைய கனவுகளை நனவாக்கும் தொழிலாளியின் சுமைகளைப் பற்றி எவரும் நினைப்பதில்லை. கற்களைச் சுமந்தால் மட்டுமே அடுத்த வேளை உணவு என்ற நிலையில் அவர்கள் அலுக்காமல் சலிக்காமல் கற்களைச் சுமக்கிறார்கள். அவர்களின் மனச்சுமையைச் செங்கற்களும் அறிவதில்லை மனிதர்களும் அறிவதில்லை என்று நாகூர் ரூமி சித்தாளின் வேதனையைப் புலப்படுத்துகிறார் .

2.ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் தர்க்கத்திற்கு அப்பால் கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

தர்க்கத்திற்கு அப்பால் - கதை மாந்தர் மூலம் விளக்குதல் –

மனிதம் என்பது பரந்து விரிந்த வானம் போன்று எல்லைகளற்றது. இதை நம்மால் மேற்கொள்ள முடியாதென்று ஒதுங்கிவிடக்கூடாது. தன்னால் இயன்ற சிறு உதவி, அன்பான சொல், ஆறுதலான புன்னகை, ஒரு தோள்தட்டல் இவையாவும் மனிதத்தின் வெளிப்பாடுகளே.

தோல்வி நிச்சயம் என்று எண்ணி தோற்றுப்போனால் அதுவும் வெற்றிதானே? என்ற மனப்பாங்குடன் படைக்கப்பட்ட கதை மாந்தர் ஒருவர், ஊருக்குச் செல்ல வைத்திருந்த பன்னிரண்டணா போக கையிலிருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம் என்ற சிந்தனை. கடைசிச்சல்லியையும் ஒரு ராஜாவைப்போல் செலவு செய் என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.

ஐயா, தருமதுரை கண்ணில்லாத பிச்சைக்காரன் ஐயா என்ற குரலில் கரைந்து தட்டில் கிடக்கும் செப்புக்காசுகளுக்கு நடுவே மின்னுமாறு இரண்டணாவைப் போட்டார் அவர். புக்கிங் கவுண்டரில் பயணச்சீட்டு எடுக்கக் காசை நீட்டியபோது இன்னும் ஓரணா கேட்டார் அலுவலர். நேற்றோடு முடிந்ததாம் பழைய கட்டணம். தற்போது புதுக்கட்டணம். பெரியவர் ஒருவரிடம் உதவி கேட்கலாம் என்றால் முன்னொருவர் கேட்டதற்கு செவியிலறைந்தாற்போல் சொன்ன பதிலால் இவர் தயங்கினார்.

நாம் போட்ட காசு தானே, இரண்டணாவை எடுத்துவிடுவோம், ஓரணாவைப் போட்டுவிட்டு. அடப்பாவி, என்ற அவன் குரல். யாரோ ஒரு புண்ணியவான் போட்ட இரண்டணாவை எடுக்கிறியே என்றது பரிதாபமாய். நரகத்துக்குத்தான் போகப்போகிறாய் என்று சாபம் வேறு. போட்ட ஓரணாவும் தற்போது பழைய இரண்டணாவுடன்  சேர்ந்து சிரித்தது. போக வேண்டிய ரயில் வந்து போய்விட்டது.

தர்மத்தின் பலன் அடுத்த ஸ்டேசன் வரை கால் வலிக்க நடந்தார். தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு கோர விபத்து, அவர் தவறவிட்ட அந்த ரயில்தான்.

இந்த விபத்திலிருந்து அவர் தப்பித்தது எப்படி? தர்மம் தலை காத்ததா? தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது இது!

3.எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார் ?

·         நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.                                                                  

·         நினைந்துகண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இவ்வுடலின் தன்மை அறியேன்.

·         உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்.

·         காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்.

4.கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமையும் விதம் –

இலக்கணம் – இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின்மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.             தன் + குறிப்பு + ஏற்றம் + அணி – தற்குறிப்பேற்ற அணி.

எடுத்துக்காட்டு –

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

அணிப்பொருத்தம் –

கதை பொதிந்த தொடர்நிலைச்செய்யுள் வகை சார்ந்தது சிலப்பதிகாரம். பின்னர் நடக்க இருப்பதை கவிஞர் ஏதேனும் ஒரு வகையில் முன்கூட்டியே தம் கருத்தை இயல்பாக நிகழும் நிகழ்வின்மீது ஏற்றிக் கூறிவிடுகிறார்.

கோவலன் மதுரையை ஆண்ட பாண்டியனால் தவறான தீர்ப்பு மூலம் கொலைக்களப்படவிருக்கிறான். இச்செய்தி அறிந்தே கோட்டை மதிலின் மேலிருந்த கொடிகள் கையை அசைத்து இம்மதுரைக்குள் வரவேண்டா என்று தெரிவிப்பதுபோல் உள்ளதெனக் கூறுகிறார் இளங்கோவடிகள்.

காற்றில் கொடிகள் அசைவது இயற்கை என்பது

நாம் அனைவரும் அறிந்ததே. 

தமிழ்த்துகள்

Blog Archive