மதிப்பீட்டுச் செயல்பாடு - 1
கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க .
திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத் தொழில் நடை பெறுகின்றது. இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும்கூடப் பயன்பாட்டில் உள்ளன. இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறுவகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன. இராதாபுரம் நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற பகுதிகளில் பெருமளவில் வாழை பயிரிடப்படுகின்றது. இங்கு விளையும் வாழைத்தார்கள், தமிழ்நாடு மட்டுமன்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது. கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
வினாக்கள்
1. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் தொழில்கள் யாவை ? அவற்றுள் முதன்மையானது எது ?
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் தொழில்கள் உழவுத்தொழில், மீன்பிடித்தொழில். அவற்றுள் முதன்மையானது உழவுத்தொழில்.
2. திருநெல்வேலி மாவட்டத்தின் பாசன முறைகள் யாவை ?
திருநெல்வேலி மாவட்டத்தின் பாசன முறைகள்
குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம்.
3. பத்தியில் இடம்பெறும் மானாவாரிப் பயிர்களின் பெயர்களை எடுத்து எழுதுக.
மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறுவகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன.
4. திருநெல்வேலி மாவட்டத்தில் விளைவதாகக் குறிப்பிடப்படும் கனிவகைகள் குறித்து எழுதுக.
இங்கு விளையும் வாழைத்தார்கள், தமிழ்நாடு மட்டுமன்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.
5. பத்திக்கு உரிய தலைப்பை எழுதுக.
திருநெல்வேலியின் பொருளாதாரம்.
மதிப்பீட்டுச் செயல்பாடு - 2
கடிதத்தைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க .
நண்பனுக்குக் கடிதம்
ஈரோடு,
14. 05. 2021.
அன்புள்ள நண்பன் மெளனிதரணுக்கு,
உன் அன்பு நண்பன் எழிலன் எழுதுவது. நீ நலமா ? என் வீட்டில் நாங்கள் அனைவரும் நலம். தற்போது கொரோனாப் பரவல் காரணமாக உன்னைச் சந்திக்க இயலாமல் உள்ளது. நாங்கள் வெளியில் எங்கும் செல்வதில்லை . முகக்கவசம் அணிந்தும் அடிக்கடி கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவியும் ஏற்றப் பாதுகாப்புடன் உள்ளோம். நீயும் அவ்வாறே இருப்பாய் என நம்புகிறேன்.
கடந்த ஆண்டு கொரோனாப் பரவலுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் மாமல்லபுரம் சுற்றுலா சென்று வந்தோம். பல்லவர் காலச் சிற்பக்கலைகள், கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, கோவர்த்தன மண்டபம், வராகி மண்டபம், புலிக்குகை , வெண்ணெய் உருண்டைப் பாறை, பஞ்சபாண்டவர்கள் மண்டபம் போன்றவற்றில் அமைந்த தமிழரின் சிற்பக்கலை நுட்பங்களை நேரில் கண்டு வியந்தேன் . அவற்றை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. வெளிநாட்டவர்களும் சிற்பங்களை வியந்து வியந்து பாராட்டுவதைக் கண்டேன் . அங்கிருந்து கிளம்பவே மனமின்றி வீடு வந்து சேர்ந்தேன் . வாய்ப்பு அமைந்தால் நாம் அனைவரும் சேர்ந்து ஒருமுறை மாமல்லபுரம் சென்று வருவோம்.
உன் அன்பு நண்பன் ,
எழிலன் .
உறைமேல் முகவரி
பெறுநர்
செல்வன் . மெளனிதரண்,
த/பெ சேந்தன் அமுதன்,
122, காந்திபுரம்,
கோவை .
வினாக்கள்
1. கடிதச் செய்தியில் இடம்பெற்றுள்ள கலை எது?
அ) ஓவியக் கலை ஆ) சிற்பக் கலை
இ) நடனக் கலை ஈ) இசைக்கலை
ஆ) சிற்பக் கலை
2. கொடுக்கப்பட்டுள்ள கடிதத்தின் வகையினைக் கூறுக.
உறவுமுறைக்கடிதம்
3. கடிதப்பகுதியில் இடம்பெற்றுள்ள மகாபாரதக் கதைத் தொடர்புடைய சிற்பங்களின் பெயர்களை எடுத்து எழுதுக.
அர்ச்சுனன் தபசு, பஞ்சபாண்டவர்கள் மண்டபம்
4. நீ சென்று வந்த சுற்றுலாத் தலங்களின் பெயர்களை எழுதுக.
கன்னியாகுமரி, திருச்சி மலைக்கோட்டை, கல்லணை, தஞ்சை பெரியகோயில், பிச்சாவரம், கங்கைகொண்ட சோழபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், காந்தி அருங்காட்சியகம், திருமலை நாயக்கர் மகால்.