மதிப்பீட்டுச் செயல்பாடு
கீழ்க்காணும் பத்தியைப் படித்து மனவரைபடம் வரைக.
உருவத்தில் சிறிய இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடனே ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும். ஆண் குருவியின் தொண்டைப்பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும். பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும். சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடு கட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடை காக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும். துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன. தானியங்கள், புழு பூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக்குருவிகளின் உணவாகும். சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும். சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும். அதனால்தான் விரைவாகச் செல்பவனைச் ‘சிட்டாய்ப் பறந்து விட்டான் ’ என்று கூறுகிறோம்.