Aneka molikal oru India Tamil Kavithai
அனேக மொழிகள் ஒரு இந்தியா
இந்தியத் தாயின் பிள்ளைகளாம் - இவர்
எண்ணங்கள் ஒன்றெனக் கொண்டதுவாம்
வந்து பிறந்தவை பல மொழியாம்- அதில்
வாயசைப்பது தாய் மொழியாம்!
இந்திர சந்திர சூரியரும் - இரு
நூற்றாண்டு ஆண்ட பூரியரும்
மந்திரமென வுரைக்குமொழி- எங்கள்
மாநில நாவசைக்கு மொழி
பூட்டிய கதவு திறக்குமொழி -மீண்டும்
திறந்த கதவு பூட்டு மொழி
பாட்டுக்குள்ளே நல்ல வேட்டுவைத்து- நம்
பாரதம் காக்க வந்த மொழி
ஆயிரம் மொழிகள் பேசிடுவோம்-எம்மை
அன்னியர் ஆளக் கூசிடுவோம்
பாயிரம் நூல்களில் பலவுண்டு-எங்கள்
பாரதப் பெருமை யுரைத்திடவே!
எண்ணிலடங்கா மொழிகளுண்டு-இங்கு
எங்கள் நாவை யசைப்பதற்கே
மண்ணில் பிரிவினை கண்டதில்லை -
-எங்கள்
மனவொற்றுமை குலைந்ததில்லை
பண்ணிடு பூசைக ளாயிரமாம் - அதில்
பாட்டோ டமைந்தவை யோராயிரமாம்
எண்ணிலா வளங்கள் கொண்ட மண்ணில்-மொழி
ஏற்றத்தாழ்வே என்றும் கண்டதில்லை
வட இமயம் தென்குமரி - வாழும்
இந்தியர் ஒற்றுமை
பாடிடுவேன்!
புடம் போட்ட தங்கத்தை - என்தன்
தடந் தோள்களில் தாங்கிடுவேன்!
- கவிஞர் கல்லூரணி முத்து முருகன்