❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வண்ண வண்ணப் பூக்களெல்லாம்
மெய் அழகு கூட்டிடுமோ?
வாசனை தான்
தந்தாலும்
பாச நேசம் காட்டிடுமோ?
பெண் என்று
இருந்தவரை
அன்னை என்று
சொல்ல வைக்கும்
கண் என்றும்
மணி என்றும்
கணப் பொழுதும்
மகிழ வைக்கும்
உள் ஒன்றும்
புறம் வேறும்
இல்லாத தூயவர்கள்
கள்ளமில்லா
உள்ளத்தால்
இறைவனுக்குத் தூதுவர்கள்
வீடு என்னும்
வானத்திலே
பவனி வரும் வெண்ணிலாக்கள்
தேடி வரும்
செல்வம் எனத்
தேரில் வரும்
பால் நிலாக்கள்
அன்னை மடி
சொர்க்கம் என
அவள் உயிரை
அமுதம் எனத்
தந்தவளை
மகிழ்விப்பார்
தந்தைக்கும்
புகழ் சேர்ப்பார்
பாவலரும்
நாவலரும்
பாக்கள் பல
பாடுகின்றார்
மழலை மொழி
கேட்ட பின்போ
தடுமாறி
ஓடுகின்றார்
கள்ளம் இல்லாப்
புன்சிரிப்பில்
களவு செய்வார்
இதயங்களை
கன்னத்தில்
விழும் குழியில்
வரவு வைப்பார்
முத்தங்களை
சாதி மதம்
பேதம் எல்லாம்
குழந்தைகட்குக்
கிடையாது
நாமும் இதை
உணர்ந்து கொண்டால்
பூமிப்பந்தோ
உடையாது
குழந்தைகளும்
தெய்வங்களும்
குணத்தாலே
ஒன்று என்பார்
மழலையர் போல்
மனம் உடையார்
மண்ணுலகே
சொர்க்கம் என்பார்
மனதளவில் குழந்தைகளாய்
மாறிட நாம்
யோசிப்போம்
கடவுள் தந்த
வரங்கள் என
மழலைகளை
நேசிப்போம்
இனிய
குழந்தைகள் நாள் நல்வாழ்த்துகள் ❤️❤️❤️
அன்புடன்
*சேவியர்*
தமிழாசிரியர்
அ ம மே நி பள்ளி
ஆலங்குடி.