கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, July 12, 2023

மனதில் நின்ற மாமனிதர் கர்மவீரர் காமராசர் தமிழ்க் கட்டுரை பேச்சுப்போட்டி உரை MANATHIL NINDRA MAMANITHAR KAMARAJAR

 

மனதில் நின்ற மாமனிதர் கர்மவீரர் காமராசர்

பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து

சங்கத்து இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த என் தாய்த் தமிழை வணங்கித் தொடங்குகிறேன்.

பயிருக்கு வேராயிருந்து பசுமரத்தாணியாய்ப் பாடம் புகட்டும் ஆசிரியர் பெருந்தகையீர்!  நாளைய பாரதத்தின் நாடி நரம்புகளாய் எனது அருமை உடன்பிறப்புக்காள்! பயிருக்கு வித்தாய் நல் வேலியாய் இருந்து உயிர் வளர்க்கும் என் அருமை பெற்றோர்களே! வணங்குகிறேன் வாழ்த்துங்கள்!

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் ஆம் தமிழகத்தின் கடைக்கோடி மனிதனும் கடைத்தேற வழிகண்ட கர்மவீரன் காமராசரே என் மனதில் நின்ற மாமனிதர். கந்தக பூமி கண்டெடுத்த கருப்பு வைரம் தான் கர்மவீரர். இன்றைய விருதுநகர் அன்றைய விருதுபட்டி. அன்னை சிவகாமி குமாரசாமிக்கு மகனாய் அவதரித்தார் காமாட்சி ராஜா.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

வெள்ளையரின் பிடியில் பாரதம் அடிமை விலங்கைப் பூண்டிருந்த காலம் அது. பூலித்தேவனும் வேலுநாச்சியாரும் வீரபாண்டிய கட்டபொம்மனும் தீரன் சின்னமலையும் திப்புசுல்தானும் தீட்டிய வாள்களுக்குப் பலியாகாது எஞ்சியிருந்த பரங்கியர் தலைகள் பகத்சிங்கையும் கொடிகாத்த குமரனையும் வ.உ.சி.யையும் வதைத்துக் கொண்டிருந்த காலம் அது.

தானும் கொடி பிடித்துத் தாய் நாட்டு விடுதலைக்கு உழைத்தார் காமராசர். காந்தியின் அகிம்சை வழியில் கண்டோம் சுதந்திரம். நம் முன்னோர் ஆங்கிலேயர்களின் கையில் தந்ததோ அட்சய பாத்திரம்; அதைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கித் தந்தான் விடுதலை என்னும் பெயரில் வெள்ளையன்.

நேரு தலைமையில் பாரதத் தாயின் வளங்களைப் புதுப்பிக்க தலைவர்கள் அணிவகுத்தனர். தமிழகத்தில் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் குழப்பம் விளைவித்தது. பச்சைத்தமிழன் காமராசர் 1954 இல் முதல்வராகப் பதவியேற்றார்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பதைப் படிக்காமலேயே அறிந்த மாமேதை அவர். தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் திறந்து கல்விப் புரட்சி செய்தார். மதிய உணவுத் திட்டம் தந்து பசித்த மக்களின் வயிறு நிறைத்தார். ஏழு விழுக்காடாய் இருந்த கல்வித்தரம் 37 விழுக்காடாய் உயர்ந்தது.

நெய்வேலி நிலக்கரி ஆலை, பெரம்பூர் ரயில் பெட்டிஆலை, திருச்சி பெல் என தொழிற்சாலைகள் பெருகின தமிழ்நாட்டில்.

 சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்பதை உணர்ந்தவர் காமராசர். வைகை, கீழ்பவானி, மேட்டூர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி என திரும்பிய பக்கமெல்லாம் அணைக்கட்டுகள். பாசன வசதி பெருக்கின. எட்டே அமைச்சர்களைக் கொண்டு தாம் ஆண்ட 9 ஆண்டுகளில் ஒரு நூற்றாண்டுச் சாதனைகளைச் செய்தவர் காமராசர். இறுதிவரை வாடகை வீட்டிலேயே குடியிருந்தார். திருமணம் செய்து கொள்ளாமலேயே நாட்டுக்காக சேவைகளைச் செய்து தன்னையே அர்ப்பணித்தார். ஏழைப் பங்காளராய் கிங்மேக்கராய் காலா காந்தி என்று மக்களால் அழைக்கப்பட்ட கருப்பு காந்தி காமராசர்.

 குடிசைக்கும் கோட்டைக்கும் பாலம் அமைத்த ஒரே தலைவர் நம் கர்மவீரர். குரல் தேயப் பேசி விரல் தேய எழுதும் வித்தகர்கள் மத்தியில் ஆகட்டும் பார்க்கலாம் என்ற ஒற்றைச் சொல்லில் செயல் முடித்த பெரும் தலைவர் நம் காமராசர்.

கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் பாடுவோம், அவர் வழியில் நின்று தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்.          தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive