தீப ஆவளி வாழ்த்து
அகமும் புறமும் ஒளிரவே
அகல் விளக்கு ஏற்றிடுவோம்!
நகமும் சதையும் போலவே
நட்போடு கூடிடுவோம்!
பசித்த வயிறு நன்றாய்ப்
புசிக்க உணவிடுவோம்!
நசிந்த மக்கள் வாழ்வின்
நலமும் காத்திடுவோம்!
வசிக்க இடம் தந்த
வண்புவி வணங்கிடுவோம்!
பசிப் பிணி இல்லாத
பாதை வகுத்திடுவோம்!
ஆணவம் கன்மம் மாயை எனும்
அரக்க மனம் அழியட்டும்!
நாணமும் அச்சமும்
நாய்கட்கென் றெப்போதும் அமையட்டும்!
இந்து சமணம் பௌத்தம்
சீக்கியம் கொண்டாடும் இவ்விழா
சரிநிகர் சமானம் என்ற
சன்மார்க்கத் திருவிழா!
ஒருவில் ஒரு இல் ஒரு சொல் என்ற
சீதாராமரை வரவேற்கட்டும்!
உருவில் ஒன்றாய் அமைந்திட்ட
அர்த்தநாரீஸ்வரரை வணங்கட்டும்!
தேவியும் சிவனும் தாயக்கட்டம்
ஆடிய நாளாய்ச் சிறக்கட்டும்!
சத்திய பாமா கையால் நரகாசுரன்
சரிந்த நாளாய் அமையட்டும்!
சுத்தோதனரைச் சந்திக்க வரும்
புத்தரை வரவேற்கட்டும்!
புத்தாடை அணிந்தே இந்நாளைப்
புவியெல்லாம் கொண்டாடட்டும்!
கசப்பாய் இருந்த உறவுகள் கனிந்து
இனிப்பாய் மாறட்டும்!
கேதார கௌரி விரதம் முடித்துக்
குடும்பம் தழைக்கட்டும்!
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
மகிழ்ச்சி பொங்கட்டும்!
இல்லை துன்பம் இனி இல்லை என்ற
மலர்ச்சி பிறக்கட்டும்!
தீமைகள் விலகி நன்மைகள் தொடர
தெய்வம் அருளட்டும்!
ஊமைகளாய் உழைக்கும் மக்கள்
வாழ்வு உயரட்டும்!
வெடிகள் ஒலியால் வினைகள் ஓட
நிம்மதி பிறக்கட்டும்!
அடிமை வாழ்வு அகன்றதென்று
வரலாறு பேசட்டும்!
ஆசை கனவு விரிய வானில்
வண்ணம் ஒலிக்கட்டும்!
பூசை செய்த புண்ணியம் மத்தாப்பாய்ப்
பூத்து விடியட்டும்!
- கவிஞர்
கல்லூரணி முத்து முருகன்
9443323199