புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 11
விடைக்குறிப்பு
உரையாடலை நீட்டித்து எழுதுக.
விரலும் நகமும் பேசுவது போன்ற ஒரு கற்பனை உரையாடல்
நகம் - ஏன் அண்ணா, சோகமாக இருக்கிறாய்? என்ன காரணம்?
விரல் - ம்ம்ம், பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பார்கள். என்னுடைய சோகத்திற்குக் காரணம் நீதான் தெரியுமா?
நகம் - நானா? எப்படி என்று விளக்கமாகக் கூறுங்கள் அண்ணா
விரல் - நீ தான் என்னைத் தாண்டி நீளமாக வளர்ந்துகொண்டே இருக்கிறாயே
நகம் - அதுதான் அடிக்கடி என்னை வெட்டி விடுகிறார்களே
விரல் - இருந்தாலும் ... நேற்று ஒரு தாய் தன் மகனிடம், உன்னுடைய நகத்தை ஒழுங்காக வெட்டாமல் விட்டுவிட்டால் விரலையே வெட்டிவிடுவேன் என்று கூறிக் கண்டித்தார். வளர்வது நீ, வெட்டுவது என்னையா? என்ன கொடுமை இது.
நகம் - அண்ணா, எந்தத் தாயாவது தன் மகனின் விரலை வெட்டுவார்களா?
விரல் - சொன்னார்களே
நகம் - என்னை வளர்த்தால் உடலில் கீறி காயம் பட்டுவிடுமே என்பதற்காகக் கூறியிருப்பார்கள்.
விரல் - அப்படியா.
நகம் - ஆம் அண்ணா, நான் வளர்ந்தால் என்னுள் அழுக்குப் படிந்து தீங்கு ஏற்படும் என்பதற்காகவும் வெட்டுமாறு மிரட்டியிருப்பார்கள்.
விரல் - இருந்தாலும் உன்னால் எனக்குக் கெட்ட பெயர் தானே?
நகம் - என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்?
விரல் - ஆம் உண்மை தானே.
நகம் - இல்லை அண்ணா, என்னால் உங்களுக்குப் பெருமைதான்.
விரல் - எப்படிக் கூறுகிறாய்?
நகம் - கவிஞர் ஒருவர் விரலுக்கு அழகு நகம் எனும் கிரீடம் என்று கூறியுள்ளார்.
விரல் - அப்படியா
நகம் - ஆம் அண்ணா, அதுமட்டுமன்று, எனக்குச் சாயம் பூசி அழகுபடுத்துவது நீங்களும் அழகாக இருப்பதற்குத்தானே.
விரல் - உண்மைதான்.
நகம் - அதுமட்டுமா, நகமும் சதையும் போல என்ற உவமை ஒற்றுமையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது
விரல் - இதில் சதை என்பது நான்தானே
நகம் - ஆம் அண்ணா.
விரல் - சரி நாம் இருவரும் ஒற்றுமையாகவே இருப்போம்.