கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, September 17, 2021

2022 ஆம் ஆண்டிற்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களைப் பயன்பாட்டிலிருந்து ஒழித்தல் தமிழ்க் கட்டுரை

 

2022 ஆம் ஆண்டிற்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களைப் பயன்பாட்டிலிருந்து ஒழித்தல்

 

முன்னுரை

          ஒரு முறை உபயோகித்தபின் தூக்கி எறியக் கூடிய நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்தினை மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியம். நெகிழி நீண்ட காலம் அழியாமல் இருப்பதாலும், நீர் உறிஞ்சாத் தன்மையாலும், இலகுவாக தயாரிக்க முடிவதாலும், குறைந்த விலையில் கிடைப்பதாலும், நமது வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இயற்கைப் பொருள்களைத் தவிர்த்து நாம் முற்றிலுமாக நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்தோம்.  அன்று சாப்பிட வாழை இலை, தையல் இலை, உலோகத் தட்டுகள் பயன்படுத்தினோம். இன்று கண்களைக் கவரும் நிறங்களிலும், வடிவங்களிலும் நம் வீட்டில் நெகிழித் தட்டுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. மலிவான விலையில் கிடைப்பதால், நம் பசுமை வீடுகள் நெகிழி வீடுகளாக மாறிவிட்டன. சமையல் அறையில் நம் பாரம்பரிய அஞ்சறைப் பெட்டிகூட இப்போது நெகிழிப் பெட்டிதான். இது பார்க்க அழகாகத் தெரியலாம், ஆனால் உடலுக்குக் கேடு விளைவிப்பதில் முதல்இடம் பெறுகிறது.

நெகிழி

          நெகிழி என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருள்கள் நெகிழிப் பொருள்கள் எனப்படும்.

தோற்றம்

          நெகிழி முதன் முதலில் 1862 -ல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் "பார்க்ஸ்டைன்" என்ற பெயரிட்டார்.  பில்லியார்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869 -ல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற நெகிழி உருவானது. 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.

நெகிழி உலகம்

          காலை பல்துலக்கும் துலப்பானிலிருந்து இரவில் படுக்கும் பாய் வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் எல்லாமே நெகிழிப் பொருள்கள் தான். நெகிழிப் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. இரப்பர், கண்ணாடி, இரும்பு, அலுமினியம், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருள்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

மாற வேண்டிய மக்கள்

o  ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டும்.

o  தவிர்க்க முடியாத நேரத்தில் 40 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட தடித்த நெகிழிப் பைகளையாவது பயன்படுத்தலாம். இவை மறுசுழற்சி செய்யப்படக் கூடியவை. எனவே இவை 'சூழல் நண்பன்' என விளம்பரப்படுத்தப்படுகின்றன. இதனால் புதிய எடுப்புப் பைகள் மீண்டும் புழக்கத்திற்கு வராமல் தடுக்கலாம்.

o  தேநீர்க் கடைகளில் குவளைகள், பாக்குமட்டைகளால் செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.

o  கேரளாவில் மட்கக் கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்கப்படுகிறது.

o  நெகிழிப் பொருள்களைக் கண்ட இடங்களில் கொட்டாமல் தவிர்த்து, சேகரித்து, மறுபயன்பாடு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் எரிக்கக்கூடாது.

o  நெகிழிக்குப் பதிலியாக தூய மணலுடன் மக்னீசியம் வேதிவினை புரிந்து உருவாகும் சிலிக்கான் சேர்மத்தைப் பயன்படுத்தலாம். இவை ரப்பர் போல் நீளும். மீளும். இளகும். எளிதில் தீப்பற்றாது. நெகிழியின் எல்லா நற்பண்புகளும் பெற்றது. தீய விளைவு இல்லாதது. ஆனால் இவை வணிக ரீதியில் இலாபமில்லாததால் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

நெகிழியின் ஆதிக்கம்

1.    நெகிழிப் பொருள்களின் விலை மிகவும் மலிவாக இருத்தல்

2.  அனைவரையும் கவரும் பல வகை நிறங்கள்

3.  உடையாமல் இருத்தல்

4.  எடையின்றி இலேசாக இருத்தல்

5.  காற்று, நீர், ஈரம், சாதாரண வேதிப் பொருள்கள் இவற்றால் பாதிக்கப்படாமல் இருத்தல்

6.  மின்கசிவு ஏற்படாமல் பயன்படுத்த முடிதல்

இத்தகைய காரணங்களால் நெகிழிப் பொருள்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளன. ஆனால் இவை தரும் தீமைகளோ நன்மைகளை விட மிக அதிகம் என்பதை நாம் உணர வேண்டும். நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் நெகிழியை ஒழிப்பது என்பது அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய ஒன்று. ஒரு கை தட்டினால் ஓசை வராது அன்றோ...

நெகிழியின் தீமைகள்

o   இயற்கை வளங்களைக் கொண்டு உருவாகும் நெகிழிப் பொருள்கள் அதிகம் தீங்கு தரும் வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுவதால் பல்வேறு தீமைகளுக்குக் காரணமாகின்றன.

o   நெகிழிப் பொருள்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறு சுழற்சி செய்யும் போதும், உருகும்போதும் வெளியேறும் வாயுக்களால் ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

o   குறிப்பாக நெகிழிப்பைகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

o   கால்வாய்களிலும் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.

o    நாம் கீழே போடும் நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்கின்றன.

o   தோல்நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகின்றது.

o    சிலருக்கு தொட்டால் கூட ஒவ்வாமை என்ற நோய் ஏற்படுகிறது.

o   மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

o   மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

o   கடற்கரை ஓரம், கடலில் எரியும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து அழித்துவிடக் கூடியவை.

o   நெகிழிப் பொருள்களை எரிப்பதால் டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளிவருகிறது.

அகற்றும் முறை                                                                        

நெகிழிப் பொருள்களில் 10% பொருள்களே 'மீண்டும் பயன்படுத்த' பயன்படுகின்றன. 90% பொருட்கள் எரிக்கப்பட்டுவிடுகின்றன. மருத்துவமனைகளில் சேரும் நோய் பரப்பும் கழிவுப் பொருளான பஞ்சு போன்றவற்றை எரிக்கப்பயன்படும் 'இன்சினரேசன்' என்ற சாம்பலாக்கும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது. அவையும் டையாக்சின் என்ற நச்சுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன. எனவே வருமுன் காப்போம் என்பதற்கிணங்க ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை முற்றிலும் ஒழிப்பது ஒன்றே நிரந்தரத் தீர்வு.

முடிவுரை

          ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியை ஒழிப்பது காலத்தின் கட்டாயம். நெகிழி இல்லா தமிழகம் காண நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நீரின்றி யமையாது உலகு என்ற வள்ளுவன் வாக்கை எண்ணி  பூமித்தாயைப் பாதுகாக்க நெகிழி ஒழிப்புப் பயணத்தில் பங்கேற்போம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்ந்து நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நாம். செயற்கை ஒழித்து இயற்கையுடன் இணைவோம்.

நெகிழி அழிப்போம், உலகம் காப்போம்.

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive