கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, September 07, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பத்தாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 20 விடைக்குறிப்பு 10th tamil Answer key activity 20

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

பத்தாம் வகுப்பு 

தமிழ் 

செயல்பாடு 20 

விடைக்குறிப்பு

 1.கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் 

பயன்படுத்திக் கட்டுரை எழுதி, பொருத்தமான 

தலைப்பும் தருக.

முன்னுரை - நோயற்ற வாழ்வு - உடற்பயிற்சியின்

அவசியம் - உடலை வலிமையாக்குதல் - நோய் 

எதிர்ப்பு சக்தி - எளிய பயிற்சிகள் - நடைப் 

பயிற்சி - புத்துணர்ச்சி - இளமைத்தோற்றம் - 

நீண்ட ஆயுள் - முடிவுரை.


உடம்பை வளர்த்தேன்! உயிர்வளர்த்தேனே!

முன்னுரை

உலக உயிர்கள் அனைத்திலும் சிறந்தது மனித இனம். தாவரங்களையும் விலங்குகளையும் இன்ன பிற உயிர்களையும் ஆட்டுவிக்கும் வல்லமை ஆறாம் அறிவுக்கு உண்டு. உடல் வலுவாக இருந்தால் தானே அறிவு வேலை செய்யும்? எல்லாச் செல்வங்களிலும் தலை சிறந்தது நோயற்ற வாழ்வு அன்றோ? அதனால்தான் ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றார் திருமூலர். உடலும் உள்ளமும் நலமுடன் இருந்தால்தான் மனித சமுதாயம் இன்னும் சிறந்து ஓங்கும். உடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இனி காண்போம்!

நோயற்ற வாழ்வு

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி, ஆம் சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? நம் முன்னோர் இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொண்டனர். தொற்று நோய்கள் அண்டாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

தூய காற்றும் நன்னீரும்

சுண்டப் பசித்த பின் உணவும்

நோயை ஓட்டிவிடும் அப்பா

நூறு வயது தரும் அப்பா , என்று பாடியுள்ளார் கவிமணி. நீரின் மூலமே அதிகமான நோய்கள் பரவுகின்றன. கொசுக்கள் மற்றும் பிற விலங்குகள் மூலம் பரவக் கூடிய நோய்களும் உண்டு. நுண்ணுயிரிகளின் பெருக்கமே நோய்களின் உற்பத்திக் கூடம் ஆகும். பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் புகுந்து நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. அதற்கு நாம் ஒரு போதும் இடம் தரக்கூடாது.

 உடற்பயிற்சியின் அவசியம்

எளிய உடற்பயிற்சி முறைகளான மூச்சுப் பயிற்சியும் யோகாசனங்களும் செய்வது நம் உடலை வலிமையாக்கும். மெது ஓட்டம், நடைப்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவற்றில் நாம் ஈடுபட்டால் வியர்வை வெளியேறிவிடும். சுவாசம் சீராகும். இரத்த நாளங்கள் வலுப்பெறும். தசைகள் இறுகும். எலும்புகள் உறுதிபெறும்.

 காலை மாலை உலாவி

 நிதம் காற்று வாங்கி வருவோரின்

 காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

 காலன் ஒடிப் போவானே-என்கிறார் கவிமணி.

நோய் எதிர்ப்பு சக்தி

இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தேன், பால், மீன், இறைச்சி ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்துக்கள் உள்ளன. சரிவிகித உணவு உண்பதோடு இயற்கையில் கிடைக்கும் குடிநீரைச் சுடவைத்து, பின் ஆற வைத்துக் குடிக்க வேண்டும். உடற்பயிற்சிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், இதயம் சீராக இயங்கும். நுரையீரல், சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல், கணையம் முதலிய உள் உறுப்புகள் சிறப்பாக இயங்க எளிய உடற்பயிற்சிகள் துணைபுரிகின்றன.

 முதுமையிலும் இளமை

உழவுத் தொழிலை முக்கியத் தொழிலாகச் செய்தனர் நம் முன்னோர். உடல் உழைப்பு அதிகமுள்ள விவசாயம் சார்ந்த தொழில்கள் உறுதியான உடலைத் தந்தன. தானியம் விளைவித்தன. காய்கறிகள் விளைவித்தன. கருவிகள் செய்யும் தொழிலாளர்களும் ஆடைநெய்யும் நெசவாளர்களும் இன்னபிற உடல் உழைப்புமே அவர்களின் நல்வாழ்வுக்குப் போதுமானதாக இருந்தது. இன்றோ அம்மாவின் கைச் சோறை விட்டுவிட்டு பீட்சா, பர்கர் என்று வீட்டிலிருந்தபடியே தருவித்து உண்ணும் நிலை பெருகிவிட்டது. பொட்டலங்களில் அடைத்த பண்டங்களை உண்டுவிட்டு பொட்டலம் போலவே நடமாடித் திரிகின்றனர் பிஞ்சுக் குழந்தைகள். கணினியும் கைப்பேசியும் விளையாட்டுத் திடலுக்குப் பிள்ளைகளை வரவிடாமல் கட்டிப்போட்டு விட்டது. இந்நிலை மாற வேண்டும். கொரோனா போன்ற பெருந் தொற்றுக் காலங்களில் இப்படிப்பட்டவர்கள் தான் அதன் கோரப் பசிக்கு இரையாகி இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. முதுமையிலும் இளமையாய் நடமாடித் திரியும் நம் கிராமத்தின் விவசாயிகளைப் பார்க்கும்போதெல்லாம் இத்தலைமுறை எதைத் தவற விட்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

முடிவுரை

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

           வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்கிறார் திருவள்ளுவர். அம்மை, காலரா போன்ற கொள்ளை நோய்களால் எண்ணற்ற மனித உயிர்களை நாம் பறிகொடுத்தவர்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாவிட்டால் பெருந் தொற்றுகள் மனித உயிர்களை மலிவாக எடுத்துச்சென்று விடும். வந்தபின் காப்பது மடமை. வருமுன் காப்பதே அறிவுடைமை. உடற்பயிற்சிகளால் புத்துணர்ச்சி பெறுவோம்! உறுதியான உடல்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆவோம்!

 

மு.முத்துமுருகன். தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ரெட்டியபட்டி.

 

 

 

தமிழ்த்துகள்

Blog Archive