விடுதலை வேள்வி
புத்தனும் பதினெண் சித்தனும் வாழ்ந்த
மண்ணை அடிமை தந்திட்டோம்
எத்தனை உடல்கள் எத்தனை உயிர்கள்
இத்தரை மீட்க பழியிட்டோம்
பூலித் தேவனும் கட்டபொம்மனும்
கட்டிய அடித்தளம் இதுவல்லவா
வீரமங்கை வேலுநாச்சியும் மரு
திருவரும் கொடுத்த திமிர் அல்லவா?
கொங்கு நாட்டின் சின்ன மலையும்
கட்டாலங்குளத்து அழகு முத்தும்
காட்டிய வீரம் நமதல்லவா?
வேங்கைப் புலியன்ன ஜான்சி ராணி
வீறுகொண்ட சுந்தரலிங்கமென வெள்ளையன்
கூறுபோட்ட நாட்டை மீட்கக்
கொட்டினோம் கொட்டியது கொஞ்சமல்ல!
வேறுபட்டால்
வெள்ளையன் வாழ்வான்
ஒன்றுபட்டால் நமக்கே வெற்றி
வேலூர்ப் புரட்சி காட்டியது பாதி ஜாலியன்
வாலாபாக்கில் கொதித்தது நீதி !
பால கங்கா திலகரின் வழியில்
வங்கச்
சிங்கம் நேதாஜியும்
கோபாலகிருஷ்ண கோகலே வழியில்
குஜராத் மண்ணின் காந்திஜியும்
இருமுனைப் பந்தங்கள் ஆகினர் வெள்ளையர்
இந்திய மண்ணை விட்டே ஏகினர்
பாரதி பாடிய சுதந்திரப் பள்ளு
நாமக்கல்லாரின் வழிநடைப் பாட்டு
வாஞ்சிநாதனின் கைத்துப்பாக்கி
வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்
விடுதலைக் கொடியை விடாது பற்றி
உயிரை விட்ட திருப்பூர் குமரன்
எவரைச் சொல்ல எவரை விடுக்க?
இந்தியர் உயிரென்ன இரவலா விடுக்க?
விடுதலைப் போரின் தியாகிகளைத் தொழுவோம்
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
-கவிஞர் கல்லூரணி முத்து முருகன்