கீழ்ப்பால் ஒருவனும்
மேற் பாலாகிடத்
தாய்ப் பாலாவது உனதருளம்மா...
ஊமைக் குழந்தையும்
மேகக் கவியென மிளிர்வதும்
நீ தரு ஞானப்பாலம்மா....
கடையனுக்கும் நீயருள்வாய்
கடைத்தேற்றம் கலைமகளே!
தலைமகள் என்று உன்
தாமரைப் பாதம்
தலை சூடி என் மனம் போற்றும்...
அறிவுலகில் நடை போட
நீ தரும் செல்வமே
அழகு மணிமுடி
மண்கண்ட பிற செல்வம் எல்லாம்
காலைக் கதிர் கண்டு
மறையும் பனித்துளி...
நீ எம்மைப் பூட்டிய
விலங்கைப் பொடித்தாய்
பொன்னுலகக் கதவைத் திறந்தாய்
தாயே எல்லாம் தந்தது உனதாசி
நீயே உலகின் மகராசி
வெள்ளைத் தாமரை உறைபவளே
என் உள்ளத்தாமரை அமர்வாயே...
பீடுடைய பெருவாழ்வு தரும்
ஏடுடைய மலராளே!-
நின் இரு பாதமலர் போற்றி! போற்றி!🙏🙏
- கவிஞர் சுரேஷ் இராமலிங்கம், காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம்.