கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 1 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.கலி என்பதன் பொருள் .................

விடை – அறியாமை இருள்.

2.சிந்துக்குத் தந்தை எனப் பாரதியாரைப் புகழ்ந்த கவிஞர் ...................

விடை – பாரதிதாசன்

3.சரியா, தவறா

விடை –

அ.இசை என்னும் சொல் புகழைக் குறிக்கிறது. – சரி

ஆ.தொல்லையகன்று – தொல்லை+யகன்று. – தவறு

இ.பாரதியார், தேசபக்திப்பாடல்கள் மூலம் விடுதலை உணர்வினை மக்களிடையே ஏற்படுத்தினார். – சரி

ஈ.மொழி, மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. - சரி

4.கோடிட்ட இடங்களை நிரப்புக.

விடை –

அ.வான மளந்தது அனைத்தும் அளந்திடு

     வண்மொழி வாழியவே

ஆ.வைப்பு என்பதன் பொருள்

     நிலப்பகுதி ஆகும்.

5.பொருத்தமான நிறுத்தக்குறியிடுக.

விடை –

பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்ற வித்தகர் ஆவார்.

6.அ.பாரதியார் நடத்திய இதழ்களின் பெயர்கள்

விடை – இந்தியா, விஜயா.

ஆ.தமிழ்மொழி வாழ்த்துப்பாடலில் இடம்பெற்றுள்ள தமிழின் சிறப்புகள்

விடை – எக்காலத்தும் நிலைபெற்றது தமிழ்மொழி.

ஆகாயத்தால் சூழப்பட்ட அனைத்தையும் அறிந்து உரைக்கும் வளமான மொழி.

7.அ.பாரதியார் பெற்றிருந்த ஆற்றல்

விடை – கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர்.

ஆ.தமிழ்நாடு எவ்வாறு ஒளிரவேண்டும் எனப் பாரதியார் கூறினார்?

விடை – பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர வேண்டும்.

8.அ.பிரித்து எழுதுக

விடை – செந்தமிழ் – செம்மை+தமிழ்

            செங்கரும்பு- செம்மை+கரும்பு

ஆ.மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்.

இ.முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவள் தமிழ்மொழி

9. நான் அறிந்த கவிஞர்

விடை –

பாரதியார்

முன்னுரை

          அச்சமில்லை அச்சமில்லை என்று, தம் கவிதைகள் மூலம் நம்மிடையே விடுதலை உணர்வை ஊட்டிய மகாகவி பாரதியாரே நான் விரும்பும் கவிஞர் ஆவார். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இளமைப்பருவம்

          தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு 11-12-1882 அன்று பாரதியார் பிறந்தார். பைந்தமிழ்ப் பாவலராய்த் திகழ்ந்து பாரதி என்னும் பட்டம் பெற்றார். பாரதி என்ற சொல்லுக்கு கலைமகள் என்று பொருள்.

பாரதியின் குடும்பம்         

          பாரதியார் 1897 ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை மணந்தார். பாரதியாருக்கு, தங்கம்மாள், சகுந்தலா என்ற இரு பெண்குழந்தைகள் உள்ளனர்.

விடுதலை வேட்கை

          ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்

          அந்நியர் வந்து புகலென்ன நீதி

என்று வீர முழக்கம் செய்தவர் பாரதியார். கவிதைகளாலும், கட்டுரைகளாலும் விடுதலை வேட்கையைத் தூண்டினார். கேலிச்சித்திரம் மூலம் பாமரருக்கும் புரியும் வண்ணம் கருத்துகளை விதைத்தார். கவிஞராகவும் இதழாசிரியராகவும் விடுதலைக்கு உழைத்தவர் பாரதியார்.

சமுதாயத்தொண்டு 

          மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்பதன் மூலம் பெண்கள் நலன் பேண விரும்பியவர் பாரதியார். குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்கிறார் மகாகவி. பெண்விடுதலைக்கும் நாட்டு விடுதலைக்கும் தொண்டாற்றியவர் பாரதியார்.

இயற்றிய நூல்கள்

          பாரதியார் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, ஞானரதம், புதியஆத்திசூடி, சந்திரிகையின்கதை, தராசு போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

சிறப்புப்பெயர்கள்                    

          பாரதியார், முண்டாசுக்கவிஞன், மகாகவி, சக்திதாசன் என்று சிறப்புப் பெயர்களால் வழங்கப்பட்டார். கவிஞராக, செய்தியாளராக, பத்திரிகை ஆசிரியராக, விடுதலை வீரராக, தமிழாசிரியராக விளங்கியவர் பாரதியார்.

முடிவுரை

          நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா என்று புகழப்பெற்ற பாரதியார் 11-09-1921 அன்று இம்மண்ணைவிட்டு மறைந்தார். ஆனால் அவரின் புகழ் இன்றும் என்றும் நிலைத்திருக்கும்.

10.எனக்குத் தெரிந்த பாரதியார் பாடல்

விடை –

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

தமிழ்த்துகள்

Blog Archive