பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது.
சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந் நூல்.
இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர்.
இவர் சேர மன்னனுடைய நண்பன்.
நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான்.
அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந் நூல் எனக் கருதப்படுகின்றது.
இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன.
இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது எனலாம்
நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது 'ஏரோர் களவழி'.
பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது 'தேரோர் களவழி.
தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது.
இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே தருகிறது.
கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் செய்கிறது.
சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.