சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம்.
ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல்.
12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன.
விருத்தப்பாவால் ஆனது.
கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது.
சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித்தேவர்.
இவர் சமண சமயத்தவர்.
காலம் 10-ஆம் நூற்றாண்டிற்கு முன்.
இவரை விசயன் என்ற மன்னர் ஆதரித்துவந்துள்ளான்.
மைசூர் மாநிலத்தில் உள்ள சிரவணபெல கோலாக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
இக்கதை சுரமை நாட்டின் இளவரசனான திவிட்டன் என்பவன், வித்தியாதர நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து கொண்டதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் அதனால் திவிட்டன் நிகழ்த்திய வீரச் செயல்களையும் கூறுகிறது.
இந்தப் பின்னணியில் இதன் ஆசிரியர் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார்.
சமணத் தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது இந்நூல்.
இந் நான்கு பிறவிகளுள் மனிதப் பிறவியில் மட்டுமே வீடுபேறு அடைவதற்கான முயற்சிகளைச் செய்யும் வாய்ப்பு உண்டென்றும் அதனால் மனிதப் பிறவி எடுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் கருதும் சமணக் கோட்பாடுகளின் வழி நின்று அதற்கான வழிமுறைகளியும் இந்நூல் எடுத்தியம்புகிறது.