கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

செய்தி 9ஆம் வகுப்பு துணைப்பாடக் கட்டுரை SEYTHI 9TH TAMIL THUNAIPADA KATTURAI

 

செய்தி

முன்னுரை                                          

ஒரு சிறு சம்பவம், ஒரு மனோநிலை, மனநிலை ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்படுவதுதான் சிறுகதை. இதில் ஆரம்பம், மத்திய சம்பவம், வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகள் உண்டு என்கிறார் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன். தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்த தி.ஜானகிராமன் வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்டவர். இவரின் சிவப்பு ரிக்சா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைதான் செய்தி. மிகவும் உயர்ந்த இசை, சிறந்த கலைஞர்களால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.

நாகசுரமும் இசையும்      WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

மங்கலமான பல நிகழ்வுகளில் இசைக்கப்படும் இசைக்கருவி நாகசுரம் ஆகும். நாகசுரக்கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது. நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. சீவாளி, நாணல் என்ற புல்வகையைக் கொண்டு செய்யப்படுகிறது. அமிர்த தாரையாகப் பொழியும் சங்கீதத்தை இக்கருவியின் வழியாக நாம் செவிமடுக்கையில் மொழிகடந்த இசை நம் உள்ளத்தே ஊடுருவும்.

பிலிப் போல்ஸ்காவும் நாகசுர வித்வானும்  

வக்கீல் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த கச்சேரிக்கு மாட்டுவண்டியில் வந்திறங்கினார் நாகசுர வித்வான். மகன் தங்கவேலுவும் ஒத்துக்காரரும் பின்னால் வந்தார்கள். பிலிப் போல்ஸ்கா மற்றும் அவருடன் வந்திருந்த இருபத்தைந்து பேருக்கும் வித்வானை அறிமுகப்படுத்தினார் வக்கீல். மேடையில் அமர்ந்து நாட்டையைக் கம்பீரமாக ஓர் ஆலாபனை செய்து கீர்த்தனையைத் தொடங்கினார் வித்வான். போல்ஸ்கா தன்னை இழந்து மேலே செருகிய விழிகளோடு நாதத்தில் கரைந்தான். அவனுடைய ஆத்மாவை காணாத லோகங்களுக்கும் அனுபவங்களுக்கும் இழுத்துச் சென்றதுபோல் தோன்றிற்று. சாமாராகம் தொடங்கினார் வித்வான். பவழ மல்லியின் மணமாய் இசை வழிந்தது, ராகம் வளர்ந்தது. போல்ஸ்கா மெல்லிய காற்றில் அசையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடினான். அவன் தவம் கலைந்துவிடக் கூடாதென ராக ஆலாபனையை நிறுத்தாமல் சாந்தமுலேகா வாசித்தார் வித்வான்.

சங்கீதம் அனுப்பிய செய்தி                 WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

போல்ஸ்காவின் மெய் சிலிர்த்தது. முதுகு ஒரு சொடுக்குடன் உலுக்கியதில் தெரிந்தது. வேறு ஒன்றையும் வாசிக்காதீர்கள், என் உயிர் போய்விடும்போல் இருக்கிறது என்று வித்வானின் கையைப்பிடித்து கெஞ்சுவது போன்ற பார்வையில் பேசினான் போல்ஸ்கா. மீண்டும் சாந்தமுலேகா, ஐந்தாறு தடவை வாசித்தார் வித்வான். கோவில் மணியின் கார்வையைப் போல அந்த நிசப்தத்தில் அவன் தலை, உள்ளம், ஆன்மாவோடு அசைந்து ஊசலிட்டுக் கொண்டிருந்தது.

எனக்காக அனுப்பிய செய்தி ! உலகத்துக்கே ஒரு செய்தி ! உங்கள் சங்கீதத்தின் செய்தி ! உலகம் முழுதும் உள்ள பேரிரைச்சலில் நான் மட்டும் அமைதியாக உயர எழுந்து மேகங்களுக்கும் அப்பால் கலந்துவிட்டேன் என்றான் போல்ஸ்கா. இந்தக் கையைக் கொடுங்கள், நாகசுரம் வாசித்த கையைக் கொடுங்கள், கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரலைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன் என்று போல்ஸ்கா, விரலைப்பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டான்.

முடிவுரை                                 WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

இசை மொழியைக் கடந்தது. அமைதியின் நாக்காக அது எல்லா மொழிகளையும் பேசுவது. மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச்செய்வது, சொற்களைப் புறக்கணித்து தனக்குள் இருக்கும் செய்தியை எந்த மொழி மனதிற்குள்ளும் செலுத்துவது. இசையின் செவ்வியில் தலைப்படும் மனமானது இனம் நாடு என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டிவிடும். ஆம், உ.வே.சா, மௌனி, தஞ்சை பிரகாஷ், தஞ்சை ராமையாதாஸ் தஞ்சாவூர்க் கவிராயர் வரிசையில் தி.ஜானகிராமனும் தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடைதான்.

  WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                                - தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive