மாணவரும் சமுதாயத்தொண்டும்
முன்னுரை
என்கடன் பணி செய்து கிடப்பதே என்றார் அப்பர். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று
அறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். இன்றைய மாணவரே நாளைய
குடிமகன். சமுதாயத்தின் நல்வித்துகளான மாணவர்கள் இளம் வயது முதலே தொண்டுள்ளம்
கொண்டு விளங்கவேண்டும்.
செஞ்சிலுவைச் சங்கம்
ஹென்றி டியூனாண்ட்
என்ற சுவிட்சர்லாந்து வணிகரால் காயம்பட்ட படைவீரர்களுக்கு
உதவி செய்ய இச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இன்றும் நம் பள்ளியில் சிறப்புற இயங்கி
வருகிறது. மருத்துவ முகாம் நடத்துதல், சுகாதார விழிப்புணர்வு பேரணி நடத்துதல்
போன்றவை இதன் பணிகளாகும்.
சாரண,
சாரணியர் இயக்கம்
இங்கிலாந்தின் பேடன்பவுல் இந்த
இயக்கத்தைத் தோற்றுவித்தார். நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு,
கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுதல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை மக்கள்
பணியாற்றும் மாணவரிடையே வளர்க்கிறது. பயிற்சி பெற்ற சாரணர், குருளையர், திரிசாரணர்
என மாணவர்களுக்கும் நீலப்பறவை, சாரணியர், திரிசாரணியர் என மாணவியருக்கும்
பிரிவுகள் உள்ளன.
தேசிய
மாணவர் படை
ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும்
குறிக்கோளாகக்கொண்ட இயக்கம் இது. நம் நாட்டின் பாதுகாப்புத் துறையின் ஒரு
பிரிவாகவும் உள்ளது. மக்கள் நலம் காக்கும் இராணுவம் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை என்ற மூன்று பிரிவுகளில் பாதுகாப்புப் பணி செய்கிறது.
பயிற்சி பெற்ற தேசிய மாணவர் படைப் பொறுப்பாளர் தலைமையில் இராணுவத்தினர்
பள்ளிகளுக்கே வந்து துப்பாக்கி சுடுதல், வரைபடம், முதலுதவி பயிற்சிகள்
அளிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் ஏ, பி, சி என்ற
தரச்சான்றுகள் வழங்கப்படுகின்றன.
சமுதாயத்தொண்டுகள் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு, மரம்
நடுதல், சுற்றுப்புறத்தூய்மை, சுகாதாரம், குருதிக்கொடை, திட்டமிட்ட குடும்பம்,
தொற்றுநோய் விழிப்புணர்வு, பெண்கல்வி, பாலியல் கல்வி போன்றவை குறித்த விழிப்புணர்வுப்
பேரணிகள் நடத்தலாம். நாட்டின் நாளைய தலையெழுத்து இன்றைய வகுப்பறைகளில்
எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றார் நேரு. தான் வாழும்
சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் சேவை செய்ய மாணவர்கள் பள்ளிகளில் செயல்பட்டு
வரும் ஏதேனும் ஒரு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.
முடிவுரை
எஃகினும் நரம்பு முறுக்கேறிய 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள், இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிக்காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். வேடிக்கை மனிதரைப்போலே – நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று முழங்குகிறார் பாரதி. மாணவப்பருவம் மாண்புடையது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. இளம் வயதிலேயே தொண்டு புரிவோம்! எதிர்காலத்தின் சவால்களை வென்றிடுவோம்!