வீட்டிற்கோர் புத்தகசாலை
முன்னுரை
நான் இன்னும்
வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கித்தந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த
நண்பன் என்கிறார்
ஆபிரகாம் லிங்கன். மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது
சிரிப்பு மட்டுமன்று, சிந்திப்பதும் தான். சிந்தனையைத் தூண்டுவது கற்றல்
மட்டுமன்று நூல்களும்தான். தென்னகத்துப் பெர்னாட்ஷா என்றழைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பஒளி வரை
பல படைப்புகளைத் தந்தவர். தமிழக முதல்வராய்ப் பொறுப்பேற்று இருமொழிச்சட்டத்தை
உருவாக்கியதோடு சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று
மாற்றிய பெருமைக்குரியவர். அண்ணாவின் வானொலி உரையில் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்துக் காண்போம்.
நற்பண்புகள் செழிக்கும் பண்ணைகள்
ஆற்றோரத்தில் ஆலமரத்தடியில் ஏடும்
எழுத்தாணியும் கொண்டு படித்த காலம் அந்தக்காலம். இப்போதோ உலகையே நமது வீட்டுக்கு
அழைத்துவந்து காட்டக்கூடிய காலம். இளைஞர்கள் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை
என்று உணர்ந்துவிட்ட காலம். கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு என்று சொல்லும் காலம். உணவு, உடை என்ற
அடிப்படைத் தேவை பூர்த்தியானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும்.
வீட்டில் சிறுகடை அளவுக்குப் பாத்திரங்கள் இருக்கும். சிறு வைத்தியசாலை அளவுக்கு
மருந்து வகைகள் இருக்கும். எனினும் மனவளத்தை அதிகரிக்கும் புத்தகங்கள் இராது. வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியம் நாட்டுக்கோர் நல்லநிலை
ஏற்படச் செய்யவேண்டும்.
இடம்பெற வேண்டிய நூல்கள் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
நாட்டை அறிய, உலகை அறிய ஏடுகள் வேண்டும். நிபுணத்துவம்
அறிவிக்கும் ஏடுகள் இல்லாவிட்டாலும் அடிப்படை உண்மைகளாவது அறிவிக்கும் நூல்கள்
வேண்டும். நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயம் இருக்க வேண்டும். சங்க இலக்கியச்சாரம் அறியும் ஏடுகள் வேண்டும். பூகோள சரித ஏடுகள் வேண்டும். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் நூல்கள்
வேண்டும். மக்களின் மனமாசு துடைத்தவர்கள், விடுதலைக்கு உழைத்தவர்கள், வீரர்கள்,
விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக்
குறிப்பு ஏடுகள் இருக்க
வேண்டும். நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புதுமுறுக்கு ஏற்படும்.
புகழுக்குரிய நூலகங்கள்
அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ள ஓலைச்
சுவடிகளும் பாதுகாக்கப்படும் தஞ்சை சரசுவதி மகால் நூலகமே ஆசியாவின் மிகப்பழமையான நூலகம் ஆகும். சென்னை கன்னிமாரா நூலகத்தில்தான் உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ளன. திருவனந்தபுரம் நடுவண் நூலகம் இந்தியாவின்
முதல் நூலகம் என்ற பெருமைக்குரியது. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகமே இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும். அமெரிக்காவின் லைப்ரரி ஆப் காங்கிரஸ் நூலகம் உலகின் மிகப்பெரிய நூலகம் ஆகும்.
முடிவுரை
சீர்காழி இரா.அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்டு 9 ஆம் நாளைத்தான் தேசிய நூலக நாளாக நாம் கொண்டாடி வருகிறோம். ஒரு புத்தகத்தைப் படித்துக்
கொள்கிறேன், எனக்கு நடக்கவுள்ள அறுவை சிகிச்சையை நாளைக்கு வைத்துக்கொள்ள முடியுமா ? என்று கேட்டார் பேரறிஞர் அண்ணா. இவர் நினைவாகவே 2010 இல் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்டது. மின்நூல்கள், இணையத்தள வாசிப்பு என வளர்ந்துவிட்ட இந்நாளில் நல்ல நூலைப்போல உதவும்
நண்பர்கள் இல்லை. இசையைப் போன்றே இதயத்தைப் பண்படுத்துவன நூல்களே.
ஆதலின் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைப்போம், வாசிப்பை சுவாசிப்போம்.