.விண்ணையும் சாடுவோம்
முன்னுரை
ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு உலகில்
எங்கோ ஓர் எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று அறிவியல் கூறுகிறது. நம் இந்திய
விண்வெளித்துறையின் மூலம் அனுப்பிய செயற்கைக் கோள்களால் இன்று நாம் எண்ணிய
நேரத்தில் திசையன்விளையிலிருந்து தில்லி வரை தொடர்புகொள்ள முடிகிறது. வாழ்க்கைப் பயணத்தில்
பாதி இணையம் என்றாகிவிட்ட அறிவியல் யுகத்தில் தமிழர்களின்
பங்கு மகத்தானது. அப்துல்கலாம்,
மயில்சாமி அண்ணாதுரை, வளர்மதி போன்றோர் வரிசையில் மற்றுமொரு வைரம் இஸ்ரோவின் ஒன்பதாவது
தலைவராகி இருக்கும் முதல் தமிழர் அறிவியலாளர் சிவன்.
நம்பிக்கையின் முதற்படி
நாகர்கோவில் அருகே சரக்கல்விளை மாங்காய் வியாபாரி கைலாசவடிவு என்பார்க்கு மகனாக, தலைக்கு மேலே பறக்கும்
விமானத்தில் என்றாவது ஒருநாள் பறக்க வேண்டும் என்ற கனவுடன் கணினி அறிவியல்
படித்தார் சிவன். எம்.ஐ.டியில் படித்த வானூர்திப் பொறியியலே இவரை விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் பொறியாளர் ஆக்கியது.
செயற்கைக் கோளும் சித்தாராவும்
1983 இல் பி.எஸ்.எல்.வி திட்டம் தொடங்கியபோது ஏவூர்தி பயணிக்கும் பாதை, தொலைவு, வடிவம் எவ்வாறு இருக்க
வேண்டும் என வடிவமைக்கும் பணி சிவனுடையதானது. செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு
விவரங்களை மின்னிலக்க முறையில் சேகரிக்கும் சித்தாரா செயலியை உருவாக்கினார் அவர். இதன் மூலம் வாகனத்தின்
செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கலாம்.
இஸ்ரோவின் செயற்கரிய செயல்கள்
செயற்கைக் கோள்களை மக்களுக்காக எப்படிப்
பயன்படுத்தலாம் எனச் சிந்தித்தவர்தான் விக்ரம் சாராபாய் அவர்கள். நிலத்தில் நீரின் அளவு, விளைச்சல் திறன் அறியலாம்.
திறன்பேசிகள், தானியக்கப் பண இயந்திரம், அட்டை
பயன்படுத்தும் இயந்திரம் இவற்றைக் குறைந்த செலவில் மக்களுக்குத் தரமான சேவையாக்க
இதுவரை செலுத்தப்பட்டுள்ள 45 செயற்கைக்
கோள்கள் துணை நிற்கின்றன. நேவிக் என்ற
செயலி மீனவர்களுக்கு மீன்
அதிகமுள்ள பகுதிகளை அறிவிக்க உதவுகிறது. சந்திராயன் I & II திட்டங்களில் ஆய்வுப் பயண ஊர்தி இறங்குதல் ரோவர் எனப்படும் ஆராயும் ஊர்தி ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியால் பயணிக்கும்.
முடிவுரை
முதல் செயற்கைக் கோளான ஆர்யப்பட்டா ஏவுதலுக்குக் காரணமானவர் இந்திய விண்வெளித்
திட்டத்தின் தந்தை விக்ரம்
சாராபாய்.
இராமேசுவரத்தீவில் பிறந்து இந்திய ஏவுகணை நாயகன் ஆக உயர்ந்தார் பள்ளிக்கல்வியைத்
தமிழ் வழியில் கற்ற அப்துல்கலாம். அரியலூரில் பிறந்து இரண்டாம் பெண்
அறிவியலறிஞர் நிலைக்கு உயர்ந்துள்ள வளர்மதி அவர்கள்
இஸ்ரோவின் செயற்கைக் கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.
நெல்லையில் பிறந்த அருணன் சுப்பையா 2013 இல் மங்கள்யான் உருவாக்கிய இந்தியாவின்
செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருக்கின்றார்.
பொள்ளாச்சியின் இளையகலாம் மயில்சாமி அண்ணாதுரை சந்திராயன் I & II திட்டத்தின் இயக்குநராகப் பணி
ஆற்றியதோடு தம் அறிவியல் அனுபவங்களைக் கையருகே நிலா எனும் நூலாக எழுதியுள்ளார்.
மாங்காய் வியாபாரியின் மகன் இஸ்ரோவின் தலைவர் சிவன் ஆக உயர, பணியாக இருப்பினும் படிப்பாக
இருப்பினும் காட்டிய முழு ஈடுபாடே காரணம் என்கிறார் தம் நேர் காணலில். நாமும் கனவு காண்போம்! விண்ணுயர பல சாதனைகள்
புரிவோம்!