நான் விரும்பும் தலைவர் தந்தை பெரியார்
முன்னுரை
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் என்று பாவேந்தரின் புகழ் மழைக்குச் சொந்தக்காரர். பகுத்தறிவுப் பகலவன், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், மூடநம்பிக்கைகளை
வேரறுத்த வெண்தாடி வேந்தர், தந்தை பெரியார் என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர் ஈ.வெ.ரா. என்ற ஈரோடு வெங்கட்ட இராமசாமி. சுயமரியாதை இயக்கம் தொடங்கி தமிழகத்தின் தனிப் புகழோடு விளங்கியவர். நான் விரும்பும் தலைவர் தந்தை பெரியார் ஆவார். அன்னாரைப் பற்றி அறிவது நம் அறியாமையை ஒழிப்பதாகும்.
தமிழகம் தந்த தவப்புதல்வர் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
ஈரோடு வெங்கட்ட நாயக்கர் - முத்தம்மாள்
என்ற சின்னத்தாயம்மாள் இணையரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார் ராமசாமி. தன் உடன்பிறந்தவர்களான கிருஷ்ணசாமி, கண்ணம்மா, பொன்னுத்தாயி இவர்களின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ராமசாமி. வணிகக் குடும்பத்தில் பிறந்த இவர் ஐந்தாம் வகுப்புவரை திண்ணைப்
பள்ளியில் கற்றார். 12 ஆம் வயது முதல் வணிகத்தில் ஈடுபட்டார். 1898இல் தம் பத்தொன்பதாம் வயதில் 13 வயது நிரம்பிய நாகம்மையை மணந்தார். அடிமை இந்தியாவில்
ஆங்கிலேயர் கொடுமை நடந்து கொண்டிருந்த காலமது.
நாட்டுப்பற்று WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
1902 முதல் கலப்புத் திருமணங்களை ஆதரித்து புரட்சி
செய்தார். சாதிமத பேதங்களால் சிதறுண்டு
கிடப்பதே நம் அடிமைத்தனத்திற்குக் காரணம்
என்று கண்டார். 1904இல் காசி விசுவநாதர் கோவில் செல்லும் போது, தான் அவமதிக்கப்பட்டதால் கடவுள் மறுப்பாளராக
மாறினார். 1907 இல் ஈரோடு பகுதியில் கொள்ளைநோய் மீட்புப் பணி
செய்தார். 1911இல் தந்தையார் மறைந்தார். 1919 இல் காங்கிரஸ் தொண்டர் ஆனார். ஈரோடு நகராட்சித் தலைவர் ஆனார். பின்னர் அப்பதவியைத் துறந்து 1921 இல் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு தன் தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். 1922ல் காங்கிரஸ் கட்சியின் சென்னை
மாகாண தலைவரானார்.
மொழிப்பற்று WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
1925இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கினார். மே 2இல் குடியரசு நாளிதழைத் தொடங்கி சாதிமறுப்பு, பெண்ணீயம் வலியுறுத்தி எழுதினார். ஆண் பெண் சமத்துவம், தேவதாசிமுறை ஒழிப்பு, குடும்பக்கட்டுப்பாடு
வலியுறுத்தல், சுயமரியாதைத் திருமணங்கள், குழந்தை மணம் தடுப்பு இவற்றுக்காகக் குரல் கொடுத்தார். 1928 நவம்பர் 7-இல் ரிவோல்ட் என்ற ஆங்கில நாளிதழை அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான பட்டிவீரன்பட்டி சௌந்திர பாண்டியனார் கையால் வெளியிட்டார். னா, ணா, லை, ளை, னை, ணை, றா, ணொ, னொ, றொ, றோ,
னோ, ணோ என்ற 13 எழுத்துகளை எழுதும் வண்ணமும் அச்சிடும்
வண்ணமும் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.
பொது வாழ்வில் தூய்மை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
காங்கிரசில் இருந்தபோது அணிந்த கதர் ஆடையைத்
தம் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து அணிந்தார். 1924, 25 இல் நடந்த வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு டி.கே.மாதவன், தன் மனைவி நாகம்மாள் உடன் பெரு வெற்றி
பெற்றார். வைக்கம் வீரர் எனப் பாராட்டப்பட்டார். தன் மனைவியுடன் மலேயா சென்றார். ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று தன் கொள்கைகளை
விளக்கி மக்களின் ஆதரவைப் பெற்றார். 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார். 1944 இல் இவர் தொடங்கிய திராவிடர் கழகமே இந்நாளில் இயங்கிக் கொண்டிருக்கும் திராவிடக்
கட்சிகளின் தாய்க்கழகமாகும். தீண்டாமைக்கு
எதிராகவும் பெண் விடுதலைக்காகவும் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் அலைந்து விழிப்புணர்வை
ஊட்டினார். மூடநம்பிக்கைகளைச் சாடினார்.
எளிமை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தான் தொடங்கிய சுயமரியாதை
இயக்கம், நீதிக் கட்சித் தலைமை, திராவிடர் கழகம் இவை மூலம் மக்கள் பணி ஆற்றினார். திராவிடநாடு கோரிக்கையை வலியுறுத்தினார். 1933இல் நாகம்மை இறந்தபின் எளிமை வாழ்வு வாழ்ந்தார். 1948
ஜூலை 9 இல் தனது உதவியாளராக இருந்த அரசியல்
மணி என்ற மணியம்மையை மணந்தார். பெண்களுக்குச் சம உரிமை கேட்டுப் போராடினார்.
மக்கள் பணியே மகத்தான பணி WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
1909-ல் தம் தங்கை மகளுக்குக் கைம்மை மணம் செய்து வைத்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான பார்ப்பனீயத்தை எதிர்த்தார். பெண்களுக்குக் கல்வி, சொத்துரிமை, அரசுப் பணி வேண்டும் என்று குரல் கொடுத்தார். பெண் ஏன் அடிமையானாள் என்ற 60 பக்க நூல் ஒன்றை எழுதி விழிப்புணர்வை ஊட்டினார். 1938 சென்னை பெண்கள் மாநாட்டில் பெண்களால் பெரியார் என்ற பட்டம் பெற்றார்.
முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
ஆண்மை என்கிற பதம் அழியாமல்
பெண் விடுதலை சாத்தியமில்லை என்றார் பெரியார். கற்பனைகள் எல்லாம்
எப்போது கடவுள் ஆனதோ அன்றே மனிதன் முட்டாள் ஆகிவிட்டான் என்று
இறைமறுப்புக் கொள்கையாளராய் இருந்தார். பேரறிஞர் அண்ணா போல் அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் போட்டியிட
அவர் விரும்பவில்லை. இறுதிவரை மக்கள் பணி செய்தே தம் வாழ்வை மகத்தானதாக மாற்றிய தந்தை பெரியார் 24 – 12 – 1973இல் தம் 94 ஆம் வயதில் மறைந்தார். அவர்
மறைந்தாலும் அவர் விதைத்த புரட்சி விதைகளான பெண்
விடுதலையும் சமத்துவமும் பகுத்தறிவுவாதமும் ஆலம் விழுதுகளாய் நின்று தமிழகம் காக்கும். - தமிழ்த்துகள்