கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

தமிழர் உணவும் விருந்தோம்பலும் தமிழ்க் கட்டுரை TAMILARUM VIRUNTHOMPALUM TAMIL KATTURAI

 

தமிழர் உணவும் விருந்தோம்பலும்

முன்னுரை                                         WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே – என்று பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும்போது குடபுலவியனார் கூறுகிறார். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி, முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த குடி, உலகுக்கே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுத்த குடி. உணவு முறைகளிலும் விருந்து போற்றுதலிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர்கள் தமிழர்கள். நம் பண்பாட்டின் மகுடமாய் விளங்கும் விருந்தோம்பல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தமிழர் உணவுமுறைகள்                      WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

     அருந்தானியம் என்று தினை, கம்பு, சோளம், வரகு, சாமை, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்களை உண்டனர். கடுகு, பூண்டு, சீரகம், மிளகு, மஞ்சள், வெங்காயம், இஞ்சி, சுக்கு, வெந்தயம், மல்லி இவற்றை உணவில் குழம்பு மூலம் சேர்த்து உணவே மருந்தென உண்டனர். எள்ளுச்சோறு, கொள்ளுச்சோறு, கடுகுச்சோறு, தினைச்சோறு, வரகுச்சோறு, வெண்ணெற்சோறு உண்டனர். பால், வெண்ணெய், நெய் ஆகியவற்றை உண்டனர். தயிர் மூலம் மோர்க்குழம்பு செய்து உண்டனர்.

     முளி தயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல் – என்ற குறுந்தொகை வரிகள் மூலம் இதை அறியலாம். காய்கறி என்பதில் காய்களும் கறி என்பது மிளகையும் குறிக்கும். மடை நூல் உணவு சமைக்கும் முறையைக் கூறுகிறது. விலங்குகளின் இறைச்சியைச் சுட்டும் வேகவைத்தும் சோறோடு கலந்தும் உண்டனர். எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே என்ற பதிற்றுப்பத்து வரிகள் மூலம் இதை அறியலாம். திற்றி – தின்னும் பக்குவத்துக்குச் சமைக்கப்படும் இறைச்சி. புழுக்கு – வேகவைத்த இறைச்சி.

தமிழர் பண்பாட்டின் மகுடம்                                    WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

     பதார்த்த குண சிந்தாமணி எனும் நூல் சித்தர்கள் கூறும் உணவுமுறைகளை விவரிக்கிறது. காலின் ஏழடிப்பின் சென்று விருந்தினரை உபசரித்து அனுப்பவேண்டும் என்கிறது பொருநராற்றுப்படை. அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் என்று இரவுப் பொழுதினும் விருந்துவரின் மகிழ்ந்தவர் தமிழர் என்கிறது நற்றிணை. இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலர் என்கிறது   புறநானூறு. பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளரோ? என்று கேட்கிறது குறுந்தொகை. இவையெல்லாம் தமிழர் விருந்து போற்றுதலைத் தம் பண்பாட்டின் மணிமகுடமாகக் கொண்டிருந்தனர் என்பதற்கான இலக்கியச் சான்றுகளாம்.

விருந்தோம்பல்                                             WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

     முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். முகமன் கூறி வரவேற்றலும் வறுமையிலும் செம்மையாய் விருந்து போற்றலும் தமிழர்தம் பண்புகள். மருந்தே ஆயினும் விருந்தொடு உண் என்ற பழமொழியும்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று என்ற குறளும் விருந்தினருடன் சேர்ந்து உண்பதைக் கூறும். தான் உண்டதைப்போல பிறரும் உண்ண வேண்டுமென நினைத்தனர் பாணரும் கூத்தரும் விறலியரும். இதனை பரூஉக் குறை பொதிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர் என்ற மலைபடுகடாம் பாடல் வரிகளால் அறியலாம்.

பகிர்ந்துண்ணலே தமிழர் வாழ்வின் அறம்      WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

     வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்

     விருந்தும் அன்றி விளைவன யாவையே என்கிறார் கம்பர். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு என்கிறது தமிழ்மறை. ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்து உண்மைபேசி உப்பிலாக்கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும் என்கிறது விவேகசிந்தாமணி. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்கிறார் வள்ளுவர்.

முடிவுரை                                            WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

     அருந்துதல், உண்ணல், உறிஞ்சல், குடித்தல், தின்றல், துய்த்தல், நக்கல், பருகல், நுங்கல், மாந்தல், மெல்லல், விழுங்கல் என உண்ணும் முறைக்கே பன்னிரு சொற்களைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள். போர்க்களத்தில் விழுந்துபட்டபோது தம் உடலைத் தின்னும் கழுகுகளைப் பார்த்து முகம் மலர்ந்தார் வீரரெனக் கூறுகிறது கலிங்கத்துப்பரணி. வயலில் விதைத்த நெல்லை எடுத்து வந்து விருந்திட்டார், இளையான்குடி மாறநாயனார். இவையெல்லாம் திண்ணை கூட வைத்துக் கட்டாத இன்றைய தமிழினம் கட்டாயம் அறிய வேண்டிய நம் பண்பாட்டுப் பதிவுகளாம்.        WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                                  - தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive