நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முன்னுரை
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே என்கிறார் பூதஞ்சேந்தனார். அனைத்துச் செல்வங்களையும் நாம்
பெற்றிருந்தாலும் நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம் ஆகும். இப்புவியில் வாழும் மனிதர்களாகிய நமக்கு பல்வேறு
காரணங்களால் நோய்கள் ஏற்படுகின்றன. அவை வராமல் தடுக்கும் முறைகளையும் நலவாழ்வுக்கான உணவு முறைகளையும் பற்றி இங்கு காண்போம்.
நோய் வரக்காரணங்கள்
சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாகவே பெரும்பாலான நோய்கள் வருகின்றன.
காற்றுச் சீர்கேட்டால் சுவாசக்
கோளாறுகள் உருவாகின்றன.
நீர் மாசு காரணமாக வயிற்றுக்
கோளாறுகள் ஏற்படுகின்றன.
நிலம் மாசு காரணமாக ஒவ்வாமை
ஏற்படுகிறது. பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் உயிரிகளால் பலவித தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.
உணவில் சத்து
குறைவு காரணமாகவும்
உடல் நலமின்மை ஏற்படும்.
நோய் தீர்க்கும் வழிமுறைகள்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் என்கிறார் வள்ளுவர். நோயுற்றவர் ஓய்வு எடுக்க வேண்டும். நோயின் தன்மைக்கு ஏற்ப
சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஆங்கில
மருத்துவம் என
ஏதேனும் ஒரு முறையில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். உடல் உள்ளுறுப்பு நோய்கள்
எனில் சில நேரங்களில் அறுவை
மருத்துவமும் செய்ய
நேரிடும். மூலிகை மருத்துவம்
மூலமும் நாம் நோய்களைத் தீர்க்கலாம்.
வருமுன் காத்தல்
வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும். தொற்று நோய்களிலிருந்து நம்மை நாம்
காத்துக் கொள்ளவேண்டும். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதன் மூலம் போலியோ, மஞ்சள் காமாலை, அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும். சுற்றுப்புறச் சுகாதாரமே வருமுன் காப்பதற்கு அடிப்படையாகும்.
உணவும் மருந்தும்
பச்சைக் காய்கறிகள், கீரைகள், பால், முட்டை,
இறைச்சி, தேன் முதலியவை
உடலுக்கு ஊட்டம் தரும். நம் முன்னோர் மஞ்சள், சீரகம், கடுகு, மிளகு, ஏலம், இலவங்கம் இவற்றைப் பொடி செய்து சமையலில் பயன்படுத்தி உணவே
மருந்து என்று வாழ்ந்து வந்தனர்.
தூய காற்றும் நன்னீரும்
சுண்டப்பசித்த பின் உணவும்
நோயை ஓட்டிவிடுமப்பா
நூறு வயது தருமப்பா என்கிறார் கவிமணி. நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் மிகுந்த உணவுப் பொருள்களே
நமக்கு ஏற்றது.
உடற்பயிற்சியின் தேவை
உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி அளித்தால் நம்மைப் பிணிகள் அண்டாது. யோகாசனம் இதற்கு உகந்ததாகும். ஓடி விளையாடு பாப்பா என்கிறார் பாரதியார். சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது. நம் உடலில்
உள்ள கழிவுகள் வெளியேறாமல் தேங்குவதே நோய்கள் ஏற்படக் காரணம்.
காலை மாலை உலாவி நிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே என்கிறார் கவிமணி.
முடிவுரை
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஔவையார். அத்தகைய மேன்மையான
மனிதன் உடல் உறுதியும் உள்ள உறுதியும் பெற்று வாழ ஒழுக்கமான வாழ்க்கை முறை துணைசெய்யும். தன் சுத்தமும் சுற்றுப்புறச் சுத்தமும் நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும்.
ஒழுக்கம் காப்போம், நோயின்றி வாழ்வோம்!