நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
முன்னுரை
ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா! வா! வா! என்றார் பாரதியார். துடிப்புமிக்க இளைஞர்களின் கையில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது. கல்வி, பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு, தொழில்துறை என எங்கும் இளைஞர்களின் பங்கு அவசியம்.
இளைஞர் உறவுகள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பழம்பெருமை மிக்க நம் நாட்டில் இன்றைய மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் 25 வயதுக்கு
உட்பட்டவர்களே! நவீன உத்தி, புதுமைகள்
செய்தல், தளரா முயற்சி இவை
அனைத்தும் கொண்ட இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு. திறன்மிகு இந்தியா, வளரிளம் பருவத்திற்கான வாழ்க்கைத்திறன் பயிற்சி, தொழில் திறன் மேம்படுத்துதல்
பயிற்சி என்று பல திட்டங்களை அரசு இளைஞர் நலனுக்காகச் செய்கிறது.
இளம் சாதனையாளர்கள்
கர்ணம் மல்லேஸ்வரியில் தொடங்கிய ஒலிம்பிக்
பதக்க வேட்டை அபினவ் பிந்த்ரா வரை
தொடர்கிறது. பி.வி.சிந்து, செய்னா, மேரிகோம் என மகளிரும் சாதனை படைத்து வருகிறார்கள். மதுரை மண்ணில் பிறந்த சுந்தர்
பிச்சை கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஆவார். ஏ.ஆர்.
ரகுமான் இசைத்துறையில் ஆஸ்கார் விருது பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
அரசியலும் சமூக அக்கறையும்
மின்னணுமயமாக்கல், இயந்திரங்கள் மூலம் தொழில் வளர்ச்சி, விண்வெளித் தொழில்நுட்பம் இவற்றையெல்லாம்
புரிந்து, விரைந்து செயல்படும் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். 1921இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய
விடுதலைப் போரில் புதிய வேகம் கொடுத்தார். வீரத்துறவி விவேகானந்தர் தம் 30 வயதில் அமெரிக்காவில் நம் பண்பாட்டைச்
சிறப்பித்தார். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்புகளில் மாணவர்கள் சேர்ந்து சமூக சேவை செய்ய வேண்டும்.
முடிவுரை
வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம் - கவிஞர் தாராபாரதி. கல்விஅறிவு, ஒழுக்கம்,
பெண்ணுரிமை, சமூக சிந்தனை உள்ள இளைஞர்களாய் நாம் கலாம் கண்ட கனவு இந்தியாவை உருவாக்குவோம். பாரத நாட்டைப் பார்போற்றச் செய்வோம்.