தங்கைக்குக் கடிதம்
7, பாரதியார் தெரு, மதுரை.
02-01-2022.
அன்புள்ள தங்கைக்கு,
நான் இங்கு நலம். அதுபோல் அங்கு நீ நலமா ? கல்லூரியின் சிறந்த மாணவன் விருது எனக்குக் கிடைத்துள்ளது. கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்த நமக்கு நற்பண்புகள் இயல்பாகவே அமைகிறது.
தற்காலத்தில் மாணவர்களுக்குச் சவாலாக உள்ளது திறன்பேசி. வலைதளங்களைப் பயன்படுத்தி தேடல், உரையாடல், பதிவேற்றம், பதிவிறக்கம் இவற்றை நாம் எளிதில் செய்யமுடிகிறது. அதில் பல நன்மைகளும் சில தீமைகளும்
இருக்கின்றன. அறியாத ஒருவருடன் முகநூல் தொடர்பு நட்பையும்
வளர்க்கும், ஆபத்தையும் விளைவிக்கும். புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம்
செய்வது பெண்பிள்ளைகளுக்குப் பல தொல்லைகளைத் தந்துவிடும். புலனத்திலும்
முகநூலிலும் பகிர்வு செய்யும் செய்திகள் உண்மைக்குப்
புறம்பானதாக இருந்தால் சட்டரீதியான பிரச்சனைகள்
வரும்.
திறன்பேசிகளில் சேமிக்கப்படும் விவரங்கள் இணையத் திருடர்களால் களவாடப்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. படிக்கும் மாணவர்களை எந்த நேரத்திலும் இணையத்தில் மூழ்கச் செய்கின்றன சில விளையாட்டுகள். இது கண்பார்வைப் பாதிப்பு, நரம்புப் பாதிப்பு, தூக்கமின்மை, மறதி இவற்றை உண்டாக்கும். இணைய வணிகம் செலவைக்கூட்டும். அறிவார்ந்த தேடலுக்கே நாம் திறன்பேசியைப் பயன்படுத்த வேண்டும். அரசு சேவைகளைப் பயன்படுத்தல், மின்னஞ்சல், மின்னூல்கள், வரைபடங்களைப் பயன்படுத்திப் பயணம் செய்தல் முதலியவை பயனுள்ளவை. உறவுகளிடம் காணொலியில் பேசுவது மகிழ்வு தரும். சுற்றுலாத் தகவல்கள், பாடம் சார்ந்த தேடல்கள் வரப்பிரசாதம்.
பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வுக்கு ஆயத்தமாக இருக்கும் உனக்கு என் வாழ்த்துகள். வளரிளம் பருவத்தில் உள்ள உனக்கு, திறன்பேசியை
நன்முறையில் பயன்படுத்த இக்கருத்துகள் பயனுள்ளவை என நம்புகிறேன்.
மற்றவை நேரில்...
இப்படிக்கு,
உன் அன்புள்ள அண்ணன்,
அ.முகிலன்.
உறை மேல் முகவரி –
திரு.அ.கவிதா,
அரசு மாணவியர் விடுதி,
5, கம்பர் தெரு,
சென்னை.
மு.முத்துமுருகன், தமிழாசிரியர்,கல்லூரணி,விருதுநகர் மாவட்டம்..