விண்ணைத்தொட்ட மனிதர்கள்
முன்னுரை
வானை
அளப்போம், கடல் மீனை அளப்போம்
சந்திர
மண்டலத்தியல் கண்டு தெளிவோம் – என்றார் முண்டாசுக்கவி பாரதி. பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம் அல்லவா? கல்தோன்றி மண் தோன்றாக்
காலத்தே முன்தோன்றிய மூத்தகுடிக்கு விண்ணைத்தொடுவது வியப்பா என்ன? கலிலியோ தொலைநோக்கியைக் கண்டுபிடிக்கும் முன்பே
வானில் உள்ள விண்மீன்களைக் கண்டுபிடித்துப் பெயரிட்டு கோவில் மேற்கூரைகளில்
வடித்திருப்பவன் அவன். அவற்றின் கதிர்வீச்சைக் கணக்கிட்டு மனிதனின்
தலையெழுத்தென்று சோதிடவியல் படைத்தவன். நாளும் கிழமையும் வகுத்து அதன்
கூறுகளை ஆய்ந்தவர்கள் நம் முன்னோர். தமிழரின் விண்ணியலறிவை இக்கட்டுரையில்
காண்போம்.
விண்வெளியில் தமிழரின் அறிவு
அண்டப்பகுதியின்
உண்டைப் பிறக்கம்
அளப்பரும்
தன்மை வளப்பெரும் காட்சி என்று
மட்டும் மாணிக்கவாசகர் பாடிவிட்டுச் சென்றிருந்தால் வெறுங்கற்பனை, கவிதை
என்றிருப்போம்.
நூற்றொரு
கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழைக்
கதிரின் துன் அணுப்புரைய என்று
கூறிவிட்டாரே. அதாவது மேற்கூரையினின்று வெளிவரும் சூரியக் கதிரொளியில் சுழலும்
தூசு போன்றது இந்தப் பேரண்டம். இதைவிட வேறென்ன விளக்கம் வேண்டும் ?
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன்
விராய கோள் மீன் போல என்ற உவமையைப்
பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளாரே? தாலமி சொன்ன பிறகுதான் சூரியனைக் கோள்கள்
வலம் வருகின்றன என்று உலகத்திற்குத் தெரிந்தது.
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண்
மாலை மறைந்தாங்கு என்று புறநானூற்றுப்புலவன் நிலவும் கதிரும்
சந்திக்கும் வேளையில் ஒன்றுக்கு வழிவிட்டு ஒன்று மறைந்ததை ஒப்புமையாகச்
சொல்கிறான். சாத்தனாரோ இன்றைய நவீன விண்வெளியைப் பார்த்தவர் போல புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா
வானூர்தி என்று ஆளில்லா விமானத்தைப் பற்றி அன்றே
எழுதியிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழர்தம் விண்ணியலறிவு பரந்து
விரிந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகிறதன்றோ?
அப்துல் கலாம்
1931 அக்டோபர் 15 ஆம் நாள் அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் – ஆஷியம்மா
இணையருக்குப் பிறந்தார் கலாம். அரசுப்பள்ளியில் பயின்ற அவர் திருச்சி, சென்னை
கல்லூரிகளில் கல்வியைத் தொடர்ந்து வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பணியில் முதன்மை அறிவியலாளர் ஆனார். 1970 முதல் 1990
முடிய அக்னி, பிருத்வி, திரிசூல், ஆகாஷ் எனப் பல
ஏவுகணைகளைத் தயாரித்து ஏவுகணை நாயகன் ஆனார். 1998 பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட பெரிதும்
காரணமாய் இருந்தார். 1981 இல் பத்மபூசன், 1990 இல் பத்ம விபூசன், 1997 இல் பாரத ரத்னா, 2009 இல் ஹூவர் பதக்கம் பெற்று விருதுகளின் நாயகன் ஆனார். அக்னிச்சிறகுகள், இந்தியா 2020, பற்றவைக்கப்பட்ட
மனங்கள்
போன்ற நூல்களை எழுதியுள்ளார். 2002
முதல் 2007 வரை குடியரசுத்தலைவராக இருந்து மக்களின் ஜனாதிபதி என்று போற்றப்பட்டார். 2015 ஜூலை 27 இல் மேகாலயா ஷில்லாங்கில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே மயங்கி
விழுந்து மறைந்தார். மக்கள் மனதில் நிறைந்தார்.
கல்பனா சாவ்லா WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
இந்தியத் தாயின் வயிற்றிலே பிறந்தவள் கல்பனாசாவ்லா. பஞ்சாப் மாநிலம் கர்னாலில் பனாரஸ்லால் சாவ்லா – சன்யோகிதா தேவியின் பிள்ளை அவள். தாகூர் அரசுப்பள்ளியில் அவள் தொடங்கிய கல்வி
பொறியியல் கல்லூரி, பல்கலைக் கழகம் வரை பரந்து விரிந்தது. நாசா அமெஸ் ஆய்வுக்கூடத்தின் துணைத்தலைவராக இருந்த கல்பனா 1996 இல் எஸ்.டி.எஸ்-87 என்ற
விண்கலத்தில் விண்வெளி ஆய்வுக்குச் சென்ற அறுவருள் ஒருவரானார். பூமியை 252 முறை சுற்றி வந்த அவர் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்தார். 2003 இல் எஸ்.டி.எஸ் 107 விண்கலத்தில் எழுவருள் ஒருவராய் 16 நாள்கள் விண்வெளி ஆய்வு மேற்கொண்டார். திரும்பி வந்த விண்கலம் டெக்சஸ் பகுதியில் வெடித்துச் சிதறியது. அவர்தம் இறப்பால் நாடே
கதறியது.
விண்வெளி அறிவில் வருங்காலத்தில்...
நிலவைக்காட்டிச் சோறூட்டிய
காலம் மாறி நிலவுக்கே சென்று சோறூட்டும் காலம் நெருங்கிவிட்டது. சந்திரனுக்குச் சந்திராயனும், செவ்வாய்க்கு மங்கள்யானும் நம்மால் அனுப்பப்பட்டுவிட்டது. இன்று மயில்சாமி அண்ணாதுரையும் இஸ்ரோ தலைவர் சிவனும் நம் கண்முன்னே நிற்கும் முன்மாதிரிகள். நாம் விண்ணில்
செய்ய வேண்டிய சாதனைகள் பல உள்ளன. விண்வெளிக் குப்பைகள் பேராபத்தை விளைவிப்பதால் அவற்றை அகற்ற வேண்டும். விண்வெளி ஆய்வுக்கூடங்கள் ஆய்வாளர்களுக்கு மன அழுத்தத்தைத் தராதவாறு
இருக்க வேண்டும். விண்வெளியில் விளையாட்டு வினையாக மாறிவிடக்கூடாது. மாறாக அங்கே விவசாயம் சாத்தியமா என ஆராய வேண்டும். புவியைப் படமெடுத்து
படமெடுத்து வந்து அதன் உடல் துளைத்து வளம்
அழிப்பதை விட்டுவிட்டு வேற்றுக் கோள்களில் குடியேற வழி தேட வேண்டும்.
முடிவுரை
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி
வியனுலகாண்டு வீற்றிருப்பாரே என்கிறார் முதல் திருமுறையில் திருஞானசம்பந்தர். ஐந்தாம் தலைமுறை நாம் அறிவின் குழந்தையாம், அறிவியல் வளர்த்து அவ்விடம் செல்வோம். நம் முன்னோர்தம் விண்ணியலறிவை இம்மண்ணுள்ளார்க்குத் தெளிவுற விளக்குவோம். எலிக்குத் தலையல்ல நாம், புலிக்கு வால் என்பதைப் புரியவைப்போம். எட்டிவிடும் தூரம்தான் இன்னும் முயற்சிப்போம், முயற்சித்தால் அவ்வானமே வசப்படும்.