கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

சிறுசேமிப்பும் நாட்டின் வளர்ச்சியும் தமிழ்க்கட்டுரை SIRUSEMIPPUM NATTIN VALARCHIYUM TAMIL KATTURAI

 

சிறுசேமிப்பும் நாட்டின் வளர்ச்சியும்

குறிப்புச் சட்டகம்

முன்னுரை                                           

சிறுசேமிப்பு வரலாறு

சிறு சேமிப்பின் அவசியம்

சிறு சேமிப்புத் திட்டங்கள்

சிறுசேமிப்பின் மூலம் நாட்டின் வளர்ச்சி

சிறுசேமிப்பில் மாணவர்களின் பங்கு

முடிவுரை

 முன்னுரை                                                  

 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

        றுண்டாகச் செய்வான் வினை      என்பது வள்ளுவன் வாக்கு. சிறுசேமிப்பு வாழ்வின் ஊன்றுகோல். போலியாக ஆடம்பரமான வாழ்க்கை வாழ்பவன் தன்னை சீரழித்துக் கொள்வதோடு சமூகத்திற்கும் ஆபத்தாக உள்ளான். சிறு சேமிப்பின் அவசியம், அதன்வழி நாட்டின் வளர்ச்சி, அதில் மாணவர்களின் பங்கு போன்றவை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

 சிறுசேமிப்பு வரலாறு                                               WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

       சிக்கனத்தின் அடித்தளம் எது என்றால் அது சேமிப்புதான் என்பதை எவரும் அறிவர். சேமிப்பு என்பது உண்டியலில் சிறுகச் சேமிப்பது முதல் அஞ்சல் நிலைய சிறுசேமிப்பு, வங்கி நிலை, பொன் சேமிப்பு, அணைகள், நீர்த்தேக்கங்கள், உணவு கிடங்கு, நுகர்வோரை வாடிக்கையாளர் ஆக்குவது இவ்வாறாக வாழ்வில் எல்லா நிலைகளிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

       பிரான்ஸ் நாட்டவரான ஹியூக் டெலர்ஸ்ரே என்பவர் 1611 இல் முதல் முதலாக சேமிப்பு பற்றிய ஒரு திட்டத்தை எழுத்து வடிவில் முன்வைத்தார். முதலாவது சேமிப்பு வங்கி 1778 இல் ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

       வரலாற்றில் கிபி நான்காம் நூற்றாண்டில் ( கிபி 303 முதல் 331 வரை ) ஆட்சி புரிந்த கீர்த்திஸ்ரீ மேகவர்ண மன்னனால் பொறிக்கப்பட்ட தோணிக்கல் சிலாசனத்தில் பயறு, உளுந்து, சாமை போன்ற திணைப்பயிர் தானியங்கள் சேமிக்கப்பட்டதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஐந்தாம் தம்புலு அரசன் கால கல்வெட்டுகளிலும் சேமிப்பின் அவசியம் பற்றிச் செதுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது

சிறு சேமிப்பின் அவசியம்                                           WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

காந்தியடிகள் பல் துலக்கும் வேப்பங்குச்சியைக் கூட சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார். வருவாய்க்கு ஏற்ப செலவு செய்தல் வேண்டும். தானும் உண்ணாமல் பிறரையும் உண்ண விடாமல் இருப்பதே கஞ்சத்தனம். சிக்கனம் கஞ்சத்தனம் அன்று.

கற்றாழை தன் முள் நிறைந்த தோலினுள் தண்ணீர் சேகரிப்பது போன்றது சிறுசேமிப்பு

2016 நவம்பரில் உயர் மதிப்பு மிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில் அனைவரும் பொருள்கள் வாங்க முடியாமல் அவதியுற்றனர். சில குடும்பங்களில் சேர்த்து வைத்திருந்த உண்டியல்களில் இருந்து பணத்தை எடுத்து செலவை சமாளித்தனர். இது சிறு சேமிப்பின் அவசியத்தை அனைவரும் உணரச் செய்தது.

சிறு சேமிப்புத் திட்டங்கள்

வங்கியில் சேமிப்பிற்காகப் பல திட்டங்கள் உள்ளன. நிரந்தர வைப்புத் தொகை, முதியோருக்கான சிறப்பு வட்டி திட்டங்கள் என பல உள்ளன. கிராமப்புறங்களில் சேமிப்பில் தபால் அலுவலகம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கிசான் விகாஸ், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் போன்றவை பிரபலமான முதலீடுகள். அன்றாடம் கூலி பெறும் தொழிலாளர்களுக்கான ஒரு சேமிப்புத் திட்டமாக PPF செயல்படுகிறது.

       மாதம் தோறும் குறிப்பிட்ட அளவு பணத்தைக் கட்ட விரும்புகிறவர்களுக்கு ரெக்கரிங் டெபாசிட் திட்டம் உண்டு. பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் உண்டு. இவ்விதமாக சிறுசேமிப்புத் திட்டங்கள் பற்றி அறிந்து அதில் சேமிக்க வேண்டும்.

சிறுசேமிப்பில் நாட்டின் வளர்ச்சி                           WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

இந்தியனின் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது. இந்தியா உலகப் பொருளாதார வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு வந்துவிட்டது. இந்திய வங்கிகளிடம் 40 மில்லியன் டாலர் அளவிற்குப் பணம் சேர்ந்து விட்டது என்றாலும் உண்மையில் ஒவ்வொரு இந்தியனும் கடனாளிகளே. உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலேயே நீடித்து இருந்தாலும் முறையான சேமிப்பு இல்லாததால் 2008 இல் மரண அடி வாங்கியது. இந்நிகழ்ச்சியில் இருந்து சேமிப்பு ஊக்குவிக்கப்படாத எந்நாடும் முன்னேற முடியாது என்பதை அறியலாம்.

சேமிப்புப் பணம் வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டு வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவுகிறது. சாலை அமைத்தல், குடிநீர் வசதி செய்து தருதல் போன்ற நாட்டின் எல்லா நலத்திட்டங்களுக்கும் சேமிப்புப் பணம் உதவுகிறது. ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலீட்டிற்காகச் சிறுசேமிப்பின் மூலம் 3150 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.

சிறுசேமிப்பில் மாணவர்களின் பங்கு

சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும். மாணவ மாணவிகள் சேமிப்புப் பழக்கம் பற்றிய செய்திகளின் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் பள்ளிப் பருவத்தில் சேமிப்புப் பழக்கத்தை மேற்கொள்ள சஞ்சாயிகா என்னும் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு அக்டோபர் 30 ஆம் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதில் மாணவர்களுக்குச் சேமிப்பு, சிக்கனம் பற்றிய சிந்தனை வளர வேண்டும் என்பதற்காக பல்வகை போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் மாணவர்கள் முனைப்புடன் செயல்பட்டு முன்னேற வேண்டும்.

முடிவுரை                                                     WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்        என்ற குறளில் பிறருக்குத் தீங்கின்றி நல்வழியில் ஈட்டிய பொருள் அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் தரும் என்கிறார் வள்ளுவர். சிக்கனச் சிந்தனையோடு வாழ்க்கை நடத்துவதற்காக சேமிப்பானது மனித சமுதாயத்தோடு பின்னிப்பிணைந்து உள்ளதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.  

சிக்கனத்தைப் போற்றுவோம், சேமித்து வாழ்வோம் ! வாழ்வை உயர்த்துவோம் !     

ஞா.லாவண்யா, தமிழாசிரியர், அ.மே.பள்ளி, ஆமத்தூர், விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive