தாய்மொழிப்பற்று
முன்னுரை
மொழிப்பற்றே
நாட்டுப்பற்றுக்கு அடிப்படை. மொழிப்பற்று இல்லாதவரிடம் நாட்டுப்பற்றும் இருக்காது.
தாயின் மேல் உள்ள அன்பைப்போல தாய்மொழியின் மீதும் பற்று இருத்தல் அவசியம்.
தாய்மொழிப்பற்று குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
மொழி பற்றிய
விளக்கம்
மொழி
என்பது ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி. மொழி, அதைப் பேசும் இனத்தின் கலை, வரலாறு,
பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் போன்ற பல வாழ்வியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு
விளங்குகிறது. மொழியில் ஒலியே முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஒலிகளை
எழுத்து வடிவில் மாற்றலாம். அவை சொற்கள் எனவும் அவற்றுக்கான விதிகள் இலக்கணங்கள்
எனவும் அழைக்கப்படுகின்றன.
தாய்மொழி
சிறுவயதில்
முதன்முதலில் கற்கும் மொழியே தாய்மொழி. குழந்தைக்கு அதன் தாய் கற்றுத்தரும் மொழியே
தாய்மொழி. குழந்தையின் உதடுகள் உச்சரிக்கும் முதல் மொழியே தாய்மொழி.
தாய்மொழிப்பற்று
தாய்மொழிப்பற்று
என்பது தாய்ப்பாசத்தைப் போல தானாக வர வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக்
கொண்டவர்கள், தமிழ் வழியில் கற்றவர்களே தமிழில் பேசுவதை இழிவாக எண்ணுகிறார்கள்.
இந்நிலை மாறவேண்டும். கையொப்பம் தமிழிலேயே இட வேண்டும். தாய்மொழிப்பற்றுடன் வாழ
வேண்டும்.
தாய்மொழிப்பற்றுக்கொண்ட
சான்றோர்
மொழியைக்
காக்க நம் முன்னோர் சங்கங்கள் அமைத்தனர். அகத்தியரும் அவரின் மாணவர் தொல்காப்பியரும்
தாய்மொழிப்பற்றுடன் இலக்கணம் தந்தனர். தாய்மொழிப்பற்று மிக்க அதியமான்
தமிழுக்காக ஔவைக்கு நெல்லிக்கனி தந்தான். முரசு கட்டிலில் உறங்கிய மோசிகீரனாருக்குக்
கவரி வீசினான் பெருஞ்சேரல் இரும்பொறை. தமிழ்ப்பற்றால் கலம்பகம்
கேட்டு உயிர் துறந்தான் நந்திவர்மன். இவர்களைப் போல் சான்றோர் பலரும்
தாய்மொழிப்பற்றுடன் இருந்தனர்.
சாதுவன் வரலாறு
கடல்
வாணிகம் செய்யச் சென்ற சாதுவன் கலம் உடைந்ததால் நாகர் வாழும்
கரையில் ஒதுங்குகிறான். கரை ஒதுங்குபவரைக் கொன்று தின்பவர்கள் அவர்கள். நாகர் மொழி
கற்றிருந்ததால் அவர்களின் தாய்மொழியில் பேசி உயிர்பிழைத்து வந்ததாக மணிமேகலை
கூறுகிறது.
நமது கடமை
தாய்மொழிப்பற்றுடன்
நாம் இருப்பது நம் கடமையாகும். இயன்றவரைத் தாய்மொழியில் பேசி, எழுதி,
கையொப்பமிட்டு வருதல் நம்கடமையாகும். நம் தாய்மொழியின் சிறப்புகளை உணர வேண்டும்.
தாய்மொழியின் பெருமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
முடிவுரை
தாய்மொழி என்பது தாய் சொல்லித்தந்த மொழியன்று. தாய்மை
உணர்வோடு பயன்படுத்த வேண்டிய மொழி என்றார் பாரதி. எனவே தாய்மொழிப்பற்றோடு
பிறமொழிக் கலப்பின்றித் தூய மொழியில் பேசுவோம். தாய்மொழி காப்போம்.
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர்
மாவட்டம்.