கோடல் மரபே கூறும் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்குணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து
இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்
சித்திரப் பாவையின் அத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகளன் ஆகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போதல் என்மனார் புலவர்.
- நன்னூல் 40
மாணவர்கள் பாடங்கேட்கும் முறை என்ன என்பதை நன்னூல் பின்வருமாறு விளக்குகிறது.
- ஆசிரியர் குறித்துச் சொன்ன நேரத்தில் மாணவன் அவ்விடம் சென்று முதலில் அவரை வழிபடவேண்டும்.
- வெறுப்பில்லாதவனாய் ஆசிரியரின் இயல்பறிந்து நடந்துகொள்ள வேண்டும்.
- ஆசிரியரின் குறிப்புணர்ந்து மாணவன் செயல்படவேண்டும்.
- இவ்விடம் அமர்ந்துகொள் என்று அவர் கூறியபிறகே அமரவேண்டும்.
- படி என்று அவர் சொல்லியபிறகே பாடத்தைப் படித்தல் வேண்டும்.
- தாகம் கொண்டவன் தண்ணீரைக் கண்டதும் எப்படி ஆர்வத்துடன் பருகுவானோ அப்படிப் பாடத்தில் ஆர்வம் மிகுந்தவனாக மாணவன் இருக்கவேண்டும்.
- சித்திரப்பாவை போல ஆசிரியர்முன் அடக்கத்துடன் இருக்கவேண்டும்.
- ஆசிரியர் சொல்லும் பாடம் கேட்கும்போது மாணவனுக்கு காது வாயாகவும் மனம் வயிறாகவும் இருக்கவேண்டும்.
- முதல்நாள் ஆசிரியரிடம் கேட்டவற்றில் கொண்டுள்ள ஐயங்களை மீண்டும் கேட்டுத் தெளியவேண்டும்.
- பலமுறை கேட்டுத் தெளிந்தவற்றை மனத்தில் இருத்த வேண்டும்.
- போகலாம் என ஆசிரியர் சொல்லியபிறகே வகுப்பு முடிந்து மாணவன் போகவேண்டும்.