.
மகனுக்கு எழுதிய கடிதம்
-நா.முத்துக்குமார்
மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்
கொண்டிருக்கும் உனக்கு நான் எழுதும் முதல் கடிதம். தம் மக்கள் மெய் தீண்டல்
உயிருக்கு இன்பம் என்கிறார் வள்ளுவர். நீ என் மெய் தீண்டினாய், அழுதாய், சிரித்தாய், சிணுங்கினாய், தவழ்ந்தாய், தத்தித் தத்தி
நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய்.
கல்வியில் தேர்ச்சி கொள். அனுபவங்களிடமிருந்து அதிகம் கற்றுக் கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட, தீண்டிக் காயம் பெறு. எங்கும், எதிலும், எப்போதும்
அன்பாய் இரு, அன்பை விட
உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. ஆகாய விமானப் பயணம் உன்
தாத்தாவுக்கு 57 வயதில், உன் தகப்பனுக்கு 27 வயதில், உனக்கோ ஆறுமாதக் குழந்தைப் பருவத்தில். இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. உழைக்கத் தயங்காதே, உழைக்கும்
வரை உயர்ந்து கொண்டு இருப்பாய். உனக்கான
காற்றை நீயே உருவாக்கப் பழகு. பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய தருணம்
வாலிபம். நிறையப் பயணப்படு.
புத்தகங்களை நேசி. உன்
உதிரத்திலும் காகித நதி ஓடிக்
கொண்டே இருக்கட்டும். கிடைத்த
வேலையை விட பிடித்த வேலையைச் செய். இனிய
இல்லறம் தொடங்கு. இல்லை
எனினும் கடன் வாங்கியாவது உதவிசெய். உறவுகளிடம்
நெருங்கியும் இரு, விலகியும்
இரு. எல்லா உறவுகளை விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்
கொள்.
நாளை உனக்கு ஒரு மகன் பிறக்கையில் என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய். என் ஞாபகம் வந்தால் இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப் பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டிருப்பேன் நான்.