.
தாய்மைக்கு வறட்சி இல்லை
முன்னுரை
மனிதம் குறித்து எல்லாவகை இலக்கியங்களும் பேசுகின்றன. மனிதத்தை
நிலைநாட்டவே சான்றோர் பலரும் முயல்கின்றனர். எது வறண்டாலும் மனிதம் வறண்டுவிடக்
கூடாது என்பது பன்னெடுங்கால விழைவாகவும் செய்தியாகவும் திகழ்கிறது. தமிழ்ச்
சிறுகதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. வேரில் பழுத்த பலா புதினத்திற்காக சாகித்ய
அகாதெமி விருது
பெற்றவர் சிறுகதை எழுத்தாளர் சு.சமுத்திரம். வளத்தம்மா என்ற கதையில் தான் வாழ்ந்த சூழலைப் பதிவு
செய்தவர். தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை இச்சிறுகதை மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
தோட்டத்துக் கல் மாளிகையும் குடிசையும்
திராட்சைத் தோட்டத்துக் கல்மாளிகை அருகே முக்கோணக் குடிசை. கதவில்லா அக்குடிசையில் தார்ப்பாய்ந்த
நாலுமுழ வேட்டியுடன் சென்னப்பா. தாரையே நெய்தது போன்ற புடவையுடன் அவள்
மனைவி. கால்மாட்டில் மூன்று வயதுப் பெண்குழந்தை ஒருச்சாய்த்துக்
கிடக்க, தலைமாட்டில் இரண்டு சாம்பல் நிற சடை நாய்க்குட்டிகளுடன் படுத்திருந்தாள் அவள். ஈரத்தடயங்கள்
ஏதுமில்லாத் தட்டை வைத்து விளையாடியபடி ஒரு வயதுக்குழந்தை. கர்நாடக மாநிலத்தின் வடமாவட்டத் தலைநகரான குல்பர்கா நகரைத் தாண்டிய தேசிய நெடுஞ்சாலை ஓரமாய்
அமைந்த திராட்சைத் தோட்டத்தில்தான் அவர்கள் வாழ்க்கை ஓட்டம்.
அதிகாரியும் பிரியாணியும்
முப்பது ஆண்டுகளில் இல்லாத பஞ்சத்தில் மண்ணும் மனதும் திராட்சைக் கொடிகளைப் போலக் காய்ந்து கிடந்தது.
அங்கே புழுதி பறக்க பேரிரைச்சலாய் வந்து ஒரு ஜீப் நின்றது. வந்த வேகத்தில் நிலைகுலைந்தது சென்னப்பா குடும்பம். வந்தவர்கள் கல்மாளிகைப்
படிக்கட்டில் அந்தஸ்துக்கு ஏற்ப உட்கார்ந்தார்கள். வாழை இலையில் போடப்பட்ட உணவுப்
பண்டங்கள் அவர்கள் வளமையைக் காட்டியது. 45 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி மண்பானைத் தண்ணீர் கொண்டு
வந்து வைத்த சென்னப்பாவிடம் பிரியாணித்தட்டை கொடுக்குமாறு பியூனிடம் சொன்னார். தோளைத் தட்டிக் கொடுத்தபடி இலையில் இருந்த
ஒரு முட்டையை அவன் தட்டில் எடுத்து வைத்தார். இதர
வகையறாக்களையும் அதில் அள்ளிப்போட்டார்.
பயத்துடன் பசியாறிய குடும்பம்
ஜீப் வந்த வேகத்தில் தடுமாறி விழுந்த சென்னப்பா மனைவியின் செல்லாக்கோபம் பொறுமை ஆனது.
அவர்களிடம் தட்டில் உணவு பெற்று வந்த கணவனைத் திட்டித் தீர்த்திருப்பாள். சப்பாத்திகள், வெஜிடபிள் பிரியாணி, உருளைக்கிழங்குப் பொரியலை ஆளுக்கு இரண்டாய்ப் பகிர்ந்தாள். காணாததைக் கண்ட
மகிழ்ச்சியில் அவர்கள் மெல்ல மெல்லச் சுவைத்தார்கள். நாய்களுக்கும் அவ்வப்போது கவளங்கள் போட்டபடி உண்டார்கள். இரவுக்கு என்ன செய்வீர்கள் ? என்ற கவலையுடன் அவர்களைப்
பசிப்பார்வையோடு பார்த்தாள் அவள். ஒரு கவளம் உள்ளே போட வறண்ட தொண்டை விழுங்க
மறுத்தது அவளுக்கு.
மனிதநேயமும் வாலாட்டிய நாய்க்குட்டிகளும்
விக்கி நின்ற அவளுக்குத் தண்ணீர் கொடுத்தார் அதிகாரி. உன்னை
மாதிரியே கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத்தான் அம்மா பிறந்தேன் என்ற அவரின் தமிழ் மொழி புரியாவிட்டாலும் தாயாய் நினைத்துத்தான்
கொடுக்கேன் என்ற அவரின் சொற்களுக்குள் உள்ளாடிய மனிதநேயம் புரிந்தது. விளையும்போது லட்சலட்சமாய்
சம்பாதித்த தன் எஜமானர் பஞ்சத்தில் தன்னையும் கழிக்கப்பார்க்கிறார்
எனக் குறைப்பட்டான் சென்னப்பா
அதிகாரியிடம்.
அதிகாரியைச் சாப்பிட விடாது வாலாட்டியபடி
ஒட்டி நின்ற நாய்க்குட்டியை
மண்கட்டியால் எறிந்து விரட்டினாள் சென்னப்பா
மனைவி. இவ்வளவு ருசியான சாப்பாட்டை இதுவரை அவள் சாப்பிட்டதில்லை. அடிபட்ட நாயின்
ஓல ஒலி பொறுக்கமாட்டாமல் அதை வாரி எடுத்து முத்தமிட்டாள். தட்டில் இருந்து கவளம்
கவளமாய் உணவை உருட்டி அந்தச் சின்னக்குட்டிக்கு ஊட்டினாள்.
முடிவுரை
காடுகளுக்கு மத்தியில் மலைப்பாம்பு போல் நெளிந்த நெடுஞ்சாலை, தன்மானத்தை வயிற்றுக்குள் தின்றபடியே
நடந்தான். அவள் வயிற்றிலும் பசிமுள் குத்தி
வலித்தது போன்ற வரிகள் சு.சமுத்திரம் அவர்களின் எழுத்து வலிமையை நமக்கு
எடுத்துக்கூறுகிறது. அந்தத் தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவள் தாய்மை கூடிக்கொண்டே இருந்தது என்று எழுதும்போது தாய்மைக்கு வறட்சி இல்லை என நமக்குத் தெள்ளத் தெளிவாய்ப் புரிகிறது.