நூலகம்
முன்னுரை
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு என்கிறார் வள்ளுவர். மணற்கேணி தோண்டுவதற்கு ஏற்ப நீர் சுரக்கும்.
அதுபோல நாம் கற்கக் கற்க அறிவு வளரும். வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம். புத்தகங்கள் இல்லாத வீடு சாளரங்கள் இல்லாத
சத்திரம் போன்றது.
நூலகங்களின் தேவை, வகைகள், நூலகங்களைப் பயன்படுத்தும் முறை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
நூலகங்களின் தேவை
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது பழமொழி. நூலகம் இல்லா ஊருக்கு அறிவு பாழ் இது புதுமொழி. நான் மறைந்த பின் உடல் மீது
மலர் மாலைகளை வைக்க வேண்டாம், என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள் என்றார்
மேனாள் இந்தியப் பிரதமர் நேரு அவர்கள்.
அன்றாட நிகழ்வுகளை அறியவும், இலக்கியம், வரலாறு, பொது அறிவு, அறிவியல் என அறிவார்ந்த படைப்புகளை அள்ளிப் பருக
உதவும் அறிவுத்
தடாகம்தான் நூலகம். ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம். ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை
மூடப்படுகிறது என்பார்
பேரறிஞர் விக்டர்
ஹியூகோ.
நூலகங்களின் வகைகள்
தேசிய நூலகங்கள், மாவட்ட மைய நூலகங்கள், பொது
நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என்று பலவகை நூலகங்கள் நம்மை அறிஞனாக்கியே
தீருவோம் என்று வரிசை கட்டி நிற்கின்றன. அங்கே எடிசன் போன்ற அறிவியல் அறிஞர்களும், காரல் மார்க்ஸ் போன்ற பொதுவுடைமைவாதிகளும், இராமானுஜன் போன்ற கணித வல்லுநர்களும், அண்ணா போன்ற பேச்சாளர்களும் காத்திருக்கிறார்கள்.
நூலகத்தில் உள்ளவை
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்கிறார் ஔவையார். நாளிதழ்கள், வார இதழ்கள், தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் இருக்கும் கதை நூல்கள், ஆய்வுக் கட்டுரை நூல்கள், சங்க இலக்கிய
நூல்கள், கவிதைத் தொகுப்புகள், மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான நூல்கள்
ஆகியவை துறை வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒலி, ஒளிப் பேழைகள், மின்னூல்கள், படிமங்கள் எனவும் ஒலி, ஒளி நாடாக்களிலும் நூல்கள்
நூலகங்களில் இருக்கும்.
நூல்களைப் படிக்கும் முறை
ஆழ்ந்த படிப்பு, அகன்ற படிப்பு என இருமுறைப் படிப்புகளில் நூலகம் அகன்ற
படிப்புக்கு ஏற்றது. அமைதிப் படிப்பு முறையே நூலகங்களில் படிக்க ஏற்ற முறையாகும். கற்பனைத்திறன் வளர்த்து படைப்பாக்கத்திற்கு உதவும் பயிற்சிப் பட்டறையே நூலகம் ஆகும். ஊர்ப்புற நூலகத்தில் ₹ 20 செலுத்தி நாம் உறுப்பினராகலாம். வேண்டிய நூலை
வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு 15 நாள்களுக்குள் திருப்பித் தரவேண்டும். ₹ 40 செலுத்தி 2 புத்தகங்களும், ₹ 50 செலுத்தி 3 புத்தகங்களும் பெறலாம். பள்ளி நூலகங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றன.
முடிவுரை
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள், அவனே எனது வழிகாட்டி என்றார் ஜூலியஸ் சீஸர். புரட்சிப் பாதையில் கைத் துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்றார் லெனின். நாமும் நூலகங்களின் துணையால் படிப்பாளியாவோம்! படைப்பாளியாவோம்!