கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 26, 2021

பொருள்கோள் வகைகள் தமிழ் இலக்கணம் PORULKOL VAKAIKAL TAMIL ILAKKANAM

 செய்யுளில் இடம்பெறும் சொற்களை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் எல்லாச் செய்யுள்களுக்கும் சரியான பொருள் கிடைக்காது. யாப்பு முதலிய காரணங்களுக்காகச் சொற்களை முன்பின்னாக மாற்றுதல் முதலிய பல நிலைகளில் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் பொருள் கொண்டால் அச்செய்யுளின் பொருள் விளங்கும். இவ்வாறு செய்யுளில் காணப்படும் தொடர்களைப் பொருள் கொள்ளும் முறையை விளக்குவது பொருள்கோள் ஆகும். பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை,

1) ஆற்றுநீர்ப் பொருள்கோள் 

2) மொழிமாற்றுப் பொருள்கோள் 

3) நிரனிறைப் பொருள்கோள் 

4) விற்பூட்டு பொருள்கோள் (பூட்டுவிற் பொருள்கோள்) 

5) தாப்பிசைப் பொருள்கோள் 

6) அளைமறிப் பாப்புப் பொருள்கோள் 

7) கொண்டுகூட்டுப் பொருள்கோள் 

8) அடிமறி மாற்றுப் பொருள்கோள்


ஆற்றுநீர்ப் பொருள்கோள்

சொற்களை அங்கும் இங்கும் மாற்றுதல் முதலிய வழிகளில் பொருள் கொள்வதற்கு இடம் இன்றி, ஆற்று நீர் ஒரே தொடர்ச்சியாக ஒரு திசை நோக்கி ஓடுவதுபோல், செய்யுளில் சொற்கள் உள்ளவாறே வரிசை மாற்றாமல், தொடர்ச்சியாகப் பொருள்கொள்ளும் முறைக்கு ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்பது பெயர்.

(எ-டு:)

சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே

(சீவகசிந்தாமணி - 53)

இப்பாட்டு, சொல் என்னும் எழுவாயைத் தொடர்ந்து, அதன் பல்வேறு செயல்கள், கருவிருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என எச்சங்களாக இடம்பெற, காய்த்த என்னும் வினைப் பயனிலையை இறுதியில் பெற்று முற்றுப் பெற்றது. இப்பாட்டில் எச்சொல்லையும் இடம் மாற்றியோ வேறு வகையில் முன்பின்னாகக் கொண்டோ பொருள் கொள்ளாமல், சொற்கள் அமைந்துள்ள நிலையிலேயே பொருள் கொண்டுள்ளமை காணலாம். இவ்வாறு இப்பாடலில் சொற்களும், அவற்றின் பொருளும் ஆற்றுநீர் போல் தொடர்ச்சியாகச் செல்வதால் இப்பாடல் ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆயிற்று.

மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள் அற்றற்று ஒழுகும் அஃதுயாற்றுப் புனலே

(நன்னூல் - 412)

மொழிமாற்றுப் பொருள்கோள்

குன்றத்து மேல குவளை குளத்துள
செங்கோடு வேரி மலர் 
இதனை, குன்றத்து மேல வேரி மலர் என்றும், குளத்துள குவளை மலர் என்றும் பொருள் கொள்ளவேண்டியிருப்பதால் மொழிமாற்று என்கிறோம்.

நிரல்நிறை

அணி வகையில் இதனை நிரல்நிறை அணி என்பர்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது 
இல்வாழ்க்கை அன்பு உடைத்தாயின் அது அதன் பண்பு. இல்வாழ்க்கை அறம் உடைத்தாயின் அது அதன் பயன். – என்பது இதன் பொருள். இதில் “அன்பும் அறனும்”, “பண்பும் பயனும்” – என தனித்தனியே நிரல்நிறுத்திக் காட்டப்பட்டுள்ளன

விற்பூட்டு

பாடல்
திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்துபடின் ஏதம் பெரிதாம் – உறந்தையர்கோன்
தண்ணார மார்பின் தமிழர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு 
கதவு திறந்திடுமின் என்று இறுதிச்சொல்லை முதற்சொல்லோடு கூட்டவேண்டியிருப்பதால் விற்பூட்டு.

தாப்பிசை

அணி வகையில் இதனை விளக்கணி(தீவக அணி) என்பர்.
உண்ணாமை உள்ள(து) உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு 
இதில் ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை என்றும், ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு என்றும் பொருள் கொள்ளும்போது ஊன் என்னும் சொல் இருபுறமும் பற்றிக்கொள்கிறது.
தாம்புக்கயிறு ஒருபுறம் மாட்டையும், மற்றொருபுறம் மாட்டைக் கட்டும் முளையையும் பற்றிக்கொள்வது போல இப்பாடலில் ஊன் என்னும் சொல் பற்றி நிற்பதைக் காணலாம்.

அளைமறிபாப்பு

அளை = வளை. வளையில் நுழையும் பாம்பு முதலில் வளைக்குள் தலையை விடும். பின் வாலை உள்ளே இழுத்துக்கொள்ளும். அதனால் பாம்பின் தலை வளையின் மேல்வாய்க்கு வந்துவிடும். இது பாம்பு இளிதாக வெளியே வர உதவியாக இருக்கும். பாம்பு என்பது இத்தொடரில் வலித்தல் விகாரம் பெற்றுப் பாப்பு என நின்றது.
பாடல்
தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார்தாமும்
சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார்தாமும்
மூத்த பிணிநலிய முன்செய்த வல்வினை என்றே முனிவார்தாமும்
வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலாதோரே. 
வாழ்ந்தபொழுதில் வான் எய்து நெறி முன்னி வாழாதோர் தளர்வார், சுழல்வார், முனிவார் எனப் பொருள்கோள் அமைவதால் அளைமறிபாப்பு.

கொண்டுகூட்டு

ஆலத்து மேல குவளை குளத்தன
வாலின் நெடிய குரங்கு 
இதில் ஆலத்து மேல குரங்கு, குளத்தன குவளை – என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் பூட்டிய பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டுகூட்டுப்பொருள்கோள்.

அடிமறி

சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
சார னாட நீவர லாறே
வார லெனினே யானஞ் சுவலே. 
இந்தப் பாடலில் உள்ள 4 அடிகளை முன்னும், பின்னும், இடையிலும் எங்கு வைத்தும் பொருள் கொள்ளலாம்.

தமிழ்த்துகள்

Blog Archive