கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, May 27, 2021

வேலையில்லாத் திண்டாட்டம் தமிழ்க்கட்டுரை VELAIYILLA THINDATTAM TAMIL KATTURAI

 

வேலையில்லாத் திண்டாட்டம்

முன்னுரை                                  

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் – இச்

சகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதி.

முப்பது கோடி முகமுடையாள் – உயிர்

மொய்ம்புறவொன்றுடையாள் – இவள்

செப்புமொழி பதினெட்டுடையாள் – எனிற்

சிந்தனை ஒன்றுடையாள் என்று அவர் பாடிய காலத்தில் இருந்த மக்கள்தொகை இன்று 137 கோடிக்கும் மேல் சென்றுகொண்டிருக்கிறது. உணவும் உற்பத்தியும் மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டியது அவசியம். தனிநபர் வருமானம் மூலம்தான் ஒருநாட்டின் பொருளாதார உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. எல்லாம் எந்திரமயமாகிவிட்ட இக்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டமும் அதன் தீர்வுகளும் குறித்து இங்கு காண்போம்.

தொழிற்கல்வி தராத கல்வித்திட்டம் 

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பர் நம் முன்னோர். ஆங்கிலேயருக்கு அடிமைப்பணி செய்வதற்காக மெக்காலே பிரபு கொண்டுவந்த கல்விமுறையின் நீட்சியாகவே இன்றைக்கும் இந்தியப் பள்ளிகளும் கல்லூரிகளும் தம் பாடத்திட்டங்களை வைத்துள்ளன.

 கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்றார் அதிவீரராம பாண்டியன். ஆனால் படித்தவர்களோ இன்று வீதிகளில் வேலை கேட்டு அலைகிறார்கள். நம் கல்விமுறை சுயசார்பை சொல்லித் தரவில்லை. அரசையோ தனியாரையோ சார்ந்திருக்கும் கல்விமுறையால் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.

புள்ளிவிவரங்கள் தரும் அதிர்ச்சி                  

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரும் நாடு என்கிறார் திருவள்ளுவர். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்று கேட்டுக்கொண்டே நம் நாட்டில் இயற்கை வளங்களை அழித்து வருகிறோம். உலகம் முழுவதும் 17 கோடியே 20 இலட்சம் பேர் வேலையின்றி இருப்பதாக சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு 2018இல் தெரிவித்தது. ஏறத்தாழ 138 கோடி பேர் கொண்ட நம் நாட்டில் 2020 கணக்குப்படி 7.4% பேர் வேலை இல்லாதோர் விகிதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தட்டெழுத்தர், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 9500 காலிப்பணியிடங்களுக்கு 20 இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். மும்பையில் 1167 காவலர் பணிக்கு 2 இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இந்நிலை இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெருந்தடையாம்.

சந்தனக்கட்டை சுமக்கும் கழுதைகள்       

உட்பொருளை அறியாமல் பகவானை அடையும் சாஸ்திரப் பயிற்சியைவிட சாத்திரங்கள் மூலம் கிடைக்கும் கல்வியே சிறந்தது  என்கிறது பகவத் கீதை. வெள்ளுடுப்பு வேலை (white collar job) வேண்டும் என்ற சோம்பேறித்தனத்தால் தன் கல்விக்குச் சற்றும் பொருந்தாத பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பல இலட்சம் இளைஞர்களை இன்று நாம் பார்க்கமுடிகிறது. சந்தனக்கட்டை சுமக்கும் கழுதைக்கு அதன் மதிப்பும் தெரியாது. இதுபோலத்தான் பலர் கிடைத்த வேலையில் தொற்றிக்கொண்டு பிழைப்பு நடத்திவருகின்றனர்.

முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று என்கிறது உலகப்பொதுமறை. அதாவது தான்செய்யும் ஒரு வேலையை வைத்தே மற்றொரு வேலையையும் முடிப்பது யானையை வைத்து யானையைப் பிடிப்பதற்குச் சமம் என்கிறார். உடல் உழைப்பு கேவலம் என்ற நிலை மாற வேண்டும்.

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும் என்பதை உணர்ந்து முயற்சியுடன் உழைக்கவேண்டும்.

முடிவுரை                             

ஊதி அணைத்துவிட நீங்கள் ஒன்றும் அகல்விளக்குகள் அல்ல இளைஞர்களே

சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்குகள்

புயலுக்குத் தலைவணங்க நீங்கள் ஒன்றும் புல் அல்ல

எதற்கும் அஞ்சாத இமயமலை வாருங்கள் இளைஞர்களே இனி வானமும் வசப்படும்.

தமிழ்த்துகள்

Blog Archive