அறிவியல் ஆக்கங்கள்
முன்னுரை
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் என்றார்
அவ்வைப்பாட்டி. அறிவியல் இன்று உலகையே ஆள்கிறது. அறிவியலின் துணை இன்றி மனிதன்
இப்புவியில் இனி வாழ இயலாது. அறிவியலின் ஆக்கங்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
விண்ணைத்தாண்டி
காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பறக்கின்றன விமானங்கள். செயற்கைக்கோள்களை
ஏந்தியபடி சீறுகின்றன ஏவூர்திகள். நிலவைக் காட்டி குழந்தைகளுக்குச் சோறு ஊட்டிய காலம் மாறி நிலவுக்குச் சென்று
சோறூட்டும் காலம் நெருங்கி விட்டது.
உள்ளங்கையில் உலகம்
காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்றார் பாரதி. இன்று
உலகின் எந்த ஒரு மூலையில் ஒரு நிகழ்வு நடந்தாலும் வீட்டில் உள்ளங்கையில் அலைபேசி மூலம்
நேரலையாக நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது.
மருத்துவமும் பொறியியலும்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், உயிர்காக்கும்
மருந்துகள் அறிவியல் ஆய்வுகளால் நமக்குக் கிடைத்துள்ளன. செயற்கைக் கால்களை வெறும் நானூறு கிராம் எடையில்
உருவாக்கினார் நம் அப்துல் கலாம். பறக்கும் தொடர் வண்டிகள், அணுஉலை, சூரிய மின்சக்தி, வீட்டு
உபயோகப் பொருள்கள் என பொறியியல் பல சாதனைகள் கண்டுள்ளது.
முடிவுரை
இரவைப் பகலாக்கும் மின்விளக்குகள், தானியங்கிகள் மற்றும் நுண்ணுணர்வுக் கருவிகள் மூலம் தொழிற்சாலை உற்பத்தி என எல்லாம் அறிவியலின் கொடைகளே. வானில் பிற கோள்களில் வசிக்கவும், கடலடியில் கட்டடம் கட்டவும் முயற்சி நடக்கிறது. சந்திராயனும் மங்கள்யானும் அதற்குச் சாட்சி. இனி உலகில் அறிவியலின் ஆட்சி.
மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்.