இராணுவ வீரருக்குப் பாராட்டு மடல்
கல்லூரணி,
25-11-22
அன்பிற்கினிய அண்ணா,
நாங்கள் இங்கு அனைவரும் நலம். அங்கு நீங்கள்
நலமா ? நீங்கள் விடுமுறைக்கு வந்து
சென்று மூன்று மாதங்களே ஆன போதும் மூன்று ஆண்டுகள் ஆனதாய் உணர்கிறேன். எஃகினும் நரம்பு முறுக்கேறிய நூறு இளைஞர்களைத்
தாருங்கள், இந்தியாவின் தலை எழுத்தையே நான் மாற்றிக் காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். உங்களைக் காணும் போதெல்லாம் என்னுள் நாட்டுப்பற்று பொங்கி
வழியும். ஆம், இராணுவ உடையில், அதற்கே உரிய மிடுக்குடன் தங்களைக் காணும்போது
தன்னம்பிக்கை பிறக்கும்.
வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம். நீங்கள் இரண்டும் ஒருசேரப் பெற்றவர். எல்லையில் நீங்களெல்லாம் கண்விழித்துக் காப்பதால் தான் எந்த தொல்லையும் இல்லாமல் நாங்கள் தூங்கி விழிக்கிறோம். அடர்ந்த வனங்களிலும், வறண்ட பாலைவனங்களிலும், மலை முகடுகளிலும், பனிச் சிகரங்களிலும், உச்சி பிளக்கும் வெயிலிலும், உயிர் குடிக்கும் உறை பனியிலும் நீங்கள் காவல் பணி செய்வதால் தான் நாங்கள் கவலையின்றி வசிக்கிறோம்.
வீரத்தின் விளைநிலம் தமிழ் மண். அதனால்தான் வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என்றனர். முப்படைகளும் அணிவகுக்க இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று நெஞ்சுரத்தோடு கண்ணுற்றேன் குடியரசு தின
அணிவகுப்பை.
கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இதில் கொடை – ஈகை, செங்கோல் – நீதி,
குடியோம்பல் – பாதுகாப்பு. பாதுகாப்பு இல்லை என்றால் முன்னிரண்டும் பயனற்றுப் போகும்
அன்றோ ?
இன்று செய்தித்தாளில் ஓர் இராணுவ வீரர் எழுதியதாக ஒரு செய்தி படித்தேன். நான் போர்க்களத்தில் மடிந்தால் என்னை சவப்பெட்டியில் அடைத்து வீட்டுக்கு அனுப்புங்கள். என் நெஞ்சு மீது பதக்கங்களை அணிவித்து என் தாயிடம் நான் என்னால் முடிந்த அளவிற்கு தேசத்திற்காகச் சிறப்பாகப் பணியாற்றுகிறேன் என்று கூறுங்கள். என் அப்பாவிடம் சொல்லுங்கள் இனிமேல் என்னால் அவருக்குத் தொல்லை இருக்காது என்று, என் சகோதரனிடம் அவனை நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள். என் வண்டியின் சாவி இனி நிரந்தரமாக உனக்குத்தான் என்றும் கூறுங்கள். என் சகோதரியிடம் உன் சகோதரன் சூரிய மறைவுக்குப் பின் நீண்ட ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லுங்கள். என் நாட்டு மக்களிடம் இறுதியாக அழ வேண்டாம் என்று கூறுங்கள். ஏனென்றால் நான் நாட்டிற்காக இறக்கப் பிறந்த இராணுவ வீரன். இதை படித்ததும் என்னையறியாமல் கண்ணீர் பொங்கியது. தங்களின் தியாகம் கண்ணுக்குள் வந்தது.
தன் தந்தையும் கணவனும் இறந்த பின்னும் தன் ஒரே
மகனின் கையில் வாளெடுத்துக் கொடுத்து போய்வா மகனே என்று வீரத் திலகமிட்டு அனுப்பிய
புறநானூற்றுத் தாய் என் கண் முன்னே வருகிறாள். அறம் காப்போர் நடுவே
மறம் காக்கப் புறப்பட்ட நேதாஜியின்
நெஞ்சுரம் கொண்ட வீர இளைஞர்களே உங்கள் பணி மகத்தானது,
உங்கள் தியாகம் அளவில்லாதது.
நான் என் பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படையில் சேர்ந்துள்ளேன். இருப்பது ஓர் உயிர் தான், அது போகப் போவது ஒரு முறை
தான், அவ்வுயிர் இந்நாட்டுக்காகப் போவதில் பெருமை கொள்கிறேன் என்றார் பேரறிஞர் அண்ணாதுரை. அண்ணன் காட்டிய வழியில் நானும் வருவேன் நாடு காக்க விரைவில்!
அங்குத் தங்கள் குழுவில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் என் நன்றி உணர்வையும் பாராட்டுகளையும்
தெரிவியுங்கள். தங்கள் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
என்றும் தங்களின் அன்புத்தம்பி,
மு.முத்துமுருகன்.