தூங்கா நகரத்தில் நான்
தமிழகத்தின் மூன்றாவது பெரிய
நகரம், இந்திய நகரங்களின் பட்டியலில் 44 ஆவது நகரம், எனினும் பண்டைய ( பாண்டியர் ) தலைநகரம். வைகைக் கரையில் அமைந்துள்ள மூதூர். அங்கே தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி
நடைபெற்றது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் பொருட்காட்சியைக் காண நான் என் குடும்பத்தாருடன் சென்றேன்.
சங்கத்தமிழில் எங்கள் பகிர்வு
மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்ட
மதுரையில் நடைபெற்ற பொருட்காட்சியை சங்கத்தமிழில் பகிர்கிறேன். 45 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது அரசு பொருட்காட்சி. நாங்கள் சென்றது 23ஆம் நாள். ஒவ்வொரு துறைக்கும்
750 சதுர அடி அளவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருப்பதாகக் கண்டேன்.
துறைகளின் சங்கமம்
அரசு பொருட்காட்சியில் செய்தி
மக்கள் தொடர்பு துறை, வேளாண் துறை, இந்து
சமய அறநிலையத்துறை, சமூகநலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித்துறை உள்பட 27 துறைகள் மற்றும் அரசு சார்பு
துறைகள் தங்கள் அரங்கங்களை அமைத்திருந்தனர்.
கலை நிகழ்ச்சிகளும் குதூகலமும்
குழந்தைகளை குதூகலப்படுத்த ராட்டினம் உள்பட பல்வேறு வகை விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் தனியார் நிறுவனங்களின் கடைகளும் இடம்பெற்றிருந்தன. நாள்தோறும் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் அன்று மதுரை முத்துவின் நகைச்சுவை நிகழ்ச்சி கண்டு இன்புற்றேன்.
பயன்பாடும் பட்டறிவும்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை
மையமாகக் கொண்ட நகர அமைப்பு நாம் அறிந்ததே. தூங்கா நகரின் அழகினை
இரவில் மின் விளக்கு ஒளியில் கண்டு களித்தேன். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சிக்கான நேரமாகும். பொருட்காட்சிக்கு பொதுமக்கள் வந்து
சேர சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. புத்தகக் கண்காட்சியில் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் கண்டேன். அவர் கண்ட மதுரையில்
நான் நிற்கிறேன் என்பதே பெருமையாக இருந்தது. மண் பரிசோதனை, இயற்கை விவசாயம், சுகாதார வளாகம், இயற்கை உணவு, சுற்றுலா வழிகாட்டி, பெண் கல்விக்கு அரசு உதவி என ஒவ்வோர் அரங்கிலும்
பாடம் கற்றேன்.
வையை என்னும் பொய்யா குலக்கொடி
மதுரையை வளப்படுத்தும் வைகை ஆற்றின் அழகைக் கண்டு வியந்தபடியே சிறப்புப் பேருந்தில் எங்கள் மாமாவின் இல்லம் வந்து சேர்ந்தேன். பொருட்காட்சியில் நான் வாங்கிய தானியங்கி வண்டியை இயக்கியவாறே நிகழ்வுகளை அசை போடுகிறேன். வைகையில் அழகர் இறங்கும் நிகழ்வு கண்டு வீடு வந்து சேர்ந்தேன். எனினும் ராட்டினமாய் என்னுள் பொருட்காட்சி நிகழ்வுகள் சுற்றிவருகின்றன.
மு.முத்துமுருகன், அ.மே.ப, ம.ரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்.