நான் விரும்பும் தலைவர் பேரறிஞர் அண்ணா
முன்னுரை
பகுத்தறிவுப்
பகலவனின் பாசறையில் குளித்துக் கரையேறிய சுயமரியாதைச் சுடர், திராவிட மண்ணில் போர் முரசு கொட்டி மும்மொழித் திட்டத்தை
அடியோடு அகற்றிய பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா, இந்நாட்டு இங்கர்சால், அடுக்கு மொழியால் கேட்பவர்களைக்
கட்டிப்போடும் திறன்மிகு பேச்சாளர்,
பல்லவ மண்ணில் பிறந்து பாட்டாளிகளுக்காய்க் குரல் கொடுத்த தியாகச்சுடர் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை அவர்களே நான் விரும்பும் தலைவர். தமிழக
முதல்வராக இருந்த ஆண்டுகளோ இரண்டு,
அவர் தமிழகத்துக்காய்ச் செய்தார் பல தொண்டு, அவரைப் பற்றி நாம் காண்போம் ஈண்டு.
தமிழகம் தந்த தவப்புதல்வர்
மாற்றான்
தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கூறிய பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் 15 – 09 - 1909 இல் காஞ்சிபுரம் நடராசன் பங்காரு அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். சிறு வயதிலேயே
அன்னையை இழந்ததால் சிற்றன்னை இராசாமணியால் வளர்க்கப்பட்டவர்.
சென்னை பச்சையப்பன்
உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் கல்லூரியில் கல்வி
கற்றுத் தேர்ந்தார். தமிழும் ஆங்கிலமும் இவர் நாவில் களி நடனம் புரிந்தன. முதுகலைப்
பட்டம் முடித்த இவர் பச்சையப்பன் பள்ளியில் ஆங்கில ஆசிரியரானார். நீதிக்கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்தது தமிழகத்தில். ஆங்கிலேயர்
அடக்குமுறை எல்லை கடந்து இருந்தது இந்தியா முழுவதிலும்.
நாட்டுப்பற்று
தொண்டு செய்து
பழுத்த பழம் பெரியாரின்
சுயமரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் களமிறங்கினார் அண்ணா. திராவிட நாடு திராவிடர்களுக்கு என்ற பெரியாரை விடுத்து தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று குரல் கொடுக்க 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கினார். 1937, 1948, 1952, 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.
தன் தோழர்களைத் தம்பி என்று அழைத்தார். பாரதிதாசன், ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன்,
பேராசிரியர் அன்பழகன், கலைஞர் கருணாநிதி ஆகியோர் கொண்ட இளைஞர் படை இரவு பகலாய் நாடகங்கள் மற்றும் மேடைப்
பேச்சுகள் மூலம் சுயமரியாதையையும் பகுத்தறிவையும் வளர்த்தன.
மொழிப்பற்று
நீதிக்கட்சி பத்திரிகையின்
உதவி ஆசிரியர், விடுதலை, குடியரசு பத்திரிகைகளின் ஆசிரியர், திராவிடநாடு நாளிதழின் ஆசிரியர் எனப் பணியாற்றினார்
அண்ணா. முதலில் நடராஜன் பின்னர் தாளமுத்து என சுயமரியாதையால் விளைந்த பயிர்களை மொழி காக்க
காவு கொடுத்தோம். தமிழ்நாடு என்று பெயர் சூட்டவே நம்மை ஆண்டான் போல் தெரிகிறது.
ஆம் முதல்வராகப் பொறுப்பேற்றதும் சென்னை மாகாணம் என்ற பெயரை 16 -04 1967 முதல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றிய பெருமைக்குச்
சொந்தக்காரர். அடுக்கு மொழியும்
சிலேடையும் இவர் தம்
பேச்சில் துள்ளி விளையாடும். அதைக்கேட்க அலைகடலெனக் கூட்டம் கூடும். நல்லதம்பி, வேலைக்காரி, ஓர் இரவு, தாய் மகளுக்குக்
கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் போன்ற பல நாடகங்களை எழுதியவர் அண்ணா. அவை பின்னாளில்
திரைப்படங்களாகவும் வெளிவந்தன. மாலைமணி, நம்நாடு, காஞ்சி வார இதழ்
போன்றவைகளை வெளியிட்டு தமிழ் வளர்த்தார். ஹோம் லேண்ட் என்ற ஆங்கில இதழை 02 -06 - 1957 முதல் வார இதழாய் வெளியிட்டார்.
பொது வாழ்வில் தூய்மை
நாடாண்ட
நற்றமிழர் நாதியற்றுத் திரிவதா? வணிகத்தால் வளங்கொழித்த வண்டமிழர் வறுமைக் குழியில் உழல்வதா? என்று கேட்டு காங்கிரசுக்கு எதிராக
அரசியல் நடத்தியவர். 1967 மார்ச் 6 இல் தமிழக முதல்வரானார். தான்
தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் அடித்தட்டு மக்களின் ஒட்டுமொத்த குரல் என்று மார்
தட்டினார். 1957இல் 15, 1962இல் 50, 1967இல் ஆட்சி என மக்களின் பேராதரவைப் பெற்றார். 1962 முதல் 1967 முடிய
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். முதல்வர் பதவி ஏற்றதும் பகுத்தறிவுப்
பாசறையின் தலைவராம் பெரியாரைச்
சந்தித்து ஆசி பெற்றார். அண்ணாவின் கன்னிப்பேச்சை
ஆங்கிலத்தில் கேட்டு அதிர்ந்து போனார் அன்றைய பிரதமர் நேரு. மாநிலங்களவைத் தலைவர் நேரம் கடந்ததைச் சுட்டிக்காட்டிய போது
அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் பேச விடுங்கள் என்றார் நேரு. 1967இல் காமராசர்
தோற்ற
போது அவரது தோல்வி நமக்கும் தோல்வியே என்று கூறினார்.
எளிமை
ஐந்தடி
உருவம், தரை தொடும் துண்டு, எள்ளலும் இலக்கியமும் ஒருசேரத் துள்ளி விளையாடும்
அடுக்கு மொழிப் பேச்சு. அதோபார் குகை,
அங்கு முடிப்பேன் பகை, அறிவாயோ என்னிடம் தோற்றவர் தொகை, ஆயிரமுண்டு போர் வகை என்று அவர் பேசப்பேச எதிர்க்கட்சியினரும் திரண்டு
வருவார்கள் கேட்பதற்கு. தன் மனைவியாக ராணியம்மாளை ஏற்றார்.
குழந்தைச்செல்வம் இல்லாததால் அவர் தமக்கையார் மக்களைத் தத்தெடுத்து வளர்த்தார். குலக்கல்வித் திட்டம் ஒழிக்க ராஜாஜிக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தார். இந்திய தேச
மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழி என நேரு அறிவிக்கும் வரை இந்தியை எதிர்த்தார்.
மக்கள் பணியே மகத்தான பணி
ஒன்றே
குலம் ஒருவனே தேவன் என்றும், கடமை
கண்ணியம் கட்டுப்பாடு என்றும் தம் சுயமரியாதைக் கொள்கைகளைக் கடைசி வரை கடைபிடித்தார் அண்ணா. 1962ல்
50 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி
வரிசையில் அமர்ந்த போது தான் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு விரைவில்
நீங்களே எதிர்க்கட்சியாகி அக்குறையைப் போக்கி விடுவீர்கள் என்றார். சுயமரியாதைத் திருமணங்களைச்
சட்ட வடிவம் ஆக்கியவர் அண்ணா. இருப்பது ஓர் உயிர் தான், அது
போகப் போவதும் ஒருமுறை தான், அவ்வுயிர் இந்நாட்டுக்காகப் போவதில் பெருமை கொள்கிறேன்
என்ற பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் புற்றுநோயால் காலமானார். அவரது இறுதி
ஊர்வலத்தில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் கலந்து கொண்டது கின்னஸ் சாதனையானது.
முடிவுரை
எதையும்
தாங்கும் இதயம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது என்ற வரிகளுடன் அண்ணாசதுக்கம் மெரினா கடற்கரையில், அண்ணா பன்னாட்டு முனையம் சென்னை வானூர்தி நிலையத்தில், மவுண்ட் ரோடு அண்ணா சாலையாக, சென்னை பல்கலை அண்ணா பல்கலைக் கழகமாக, ஐந்து ரூபாய் நாணயத்தில் அண்ணா உருவாக, காஞ்சியில் நினைவில்லமாக அண்ணா வாழ்கிறார். 1980இல் அண்ணா நினைவு இல்லம் திறந்து வைத்த குடியரசுத்
தலைவர் நீலம் சஞ்சீவ
ரெட்டி இந்த
எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர் இம்மாநிலத்தில்
முதல்வரானது ஜனநாயகம் இங்கு தழைப்பதையே காட்டுகிறது என்று புகழ்ந்தார். ஆம், நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின்
எப்படை வெல்லும். - தமிழ்த்துகள்